ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

ஹொலிபீல்ட் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

ஹொலிபீல்ட் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் கல்முனை கிரிக்கெட் சங்கம் நடாத்தும் மர்ஹும் ஏ. எம். எம். றியாஸ் ஞாபகார்த்த 20 இற்கு 20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

கல்முனை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் எம். எம். ஜெஸ்மின் தலைமையில் இடம் பெற்ற மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில் கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தின் பிரதி தலைவர் எஸ். எல். எம். றஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 12 விளையாட்டுக் கழகங்கள் பங்கு கொள்ளும் மேற்படி கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் கல்முனை யங்பேட்ஸ் மற்றும் கல்முனை டொப்பாஸஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யங்பேட்ஸ் விளையாட்டுக் கழகம் 13.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம் போட்டியில் ஈடுபட்டபோது முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம் 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

மூன்றாவது போட்டியில் கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை டொப்ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் போட்டியில் ஈடுபட்டபோது முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை டொப்ஹிரோஸ் விளையாட்டுக் கழகம் 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

இப் போட்டித் தொடரில் இதுவரை கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகம் மற்றும் கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகம் என்பன கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி