புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
ஊடல்காரர்களையும் ஊடகங்களையும் கடுமையாக சாடினார் மாவை எம்.பி.

சூடுபிடித்த விக்னேஸ்வரன் - சுமந்திரன் அறிக்கை போர் விவகாரம்:

ஊடல்காரர்களையும் ஊடகங்களையும் கடுமையாக சாடினார் மாவை எம்.பி.

முதலமைச்சர் சி. வி. விக் னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமக்கிடையேயான பிரச்சினையை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ள மாவை சேனாதிராசா எம்.பி. சில தமிழ் ஊடகங்கள் தேவையில்லாது இவ்விட யத்தைப் பெரிதுபடுத்துவது குறித்தும் தனது கடுமையான விசனத்தைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக அவுஸ்ரேலிய ஊடகத்திடம் சுமந்திரன் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கள் பின்னர் அதற்குப் பதிலளித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை அதன் பின்னர் இந்த அறிக்கைக்கு பதில் கொடுத்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன, தமிழ் மக்களிடையே குழப்பத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஊடகங்களில் இத்தகைய பகிரங்க விவாதங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது. இவர்கள் தமக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக பேச்சு நடத்தி தீர்வு காணவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை கட்சிக்குள் அல்லது அமைதியான முறையில் முன்னெடுத்திருக்க வேண்டும். உள்ளக கருத்து முரண்பாடுகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் விவாதிப்பது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களும் கவலை தெரிவிப்பு

தற்போதைய நல்லாட்சி அரசியல் சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல், தமிழ் மக்களுக்கான உரிமைகள், அபிலாஷைகளைப் பெற்று பாதுகாப்பான சமூகமாக எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து வாழ்வதற்குரிய நிரந்தர சூழலை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்துவதற்குப் பதிலாக தமது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் தமக்கிடையே பதவி மோகங்கொண்டு முட்டி மோதி வருவது குறித்து தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.