புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
ஞானசார தேரரின் இனவாத கருத்திற்கு இந்து, இஸ்லாமிய மதகுருமார் கண்டனம்

தமிழ் கைதிகள் விடுதலை எச்சரிக்கை; ஐ. எஸ். ஐ. எஸ். தொடர்பான கருத்து

ஞானசார தேரரின் இனவாத கருத்திற்கு இந்து, இஸ்லாமிய மதகுருமார் கண்டனம்

இந்த அரசாங்கம் சிறைகளிலுள்ள புலிப் பயங்கரவாதிகளான தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதானது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோன்ற இட மளிக்கும் செயலாகவே தான் கருதுவதுடன் இது குறித்து தான் எச்சரிக்கை விடுப்பதாகவும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்திற்கு சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவரான பிரம்மஸ்ரீ இராமச்சந்திர பாபுசர்மா குருக் கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 முழு உலகிற்குமே நல்ல பல போதனைகளை எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்தும் மிக உயர்ந்த பெளத்த மதத்தின் மதகுருவாக இருக்கும் ஞானசார தேரர் அவர்கள் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக இனரீதியாக கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வேதனை தருவதாக உள்ளது. அவர் தனது இந்தப் போக்கினை மாற்றிக் கொண்டு நாட்டிலுள்ள சகல, இன, மத மக்களையும் அரவணைத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும் எனவும் பாபு சர்மா கேட்டுள்ளார்.

மிக நீண்டகாலமாக சிறைகளில் எவ்விதமான விசாரணைகளும் இன்றி வாடும் இளைஞர்களை விடுவிக்கப்படுவதனை தடுக்கும் முயற்சியில் எவரும் ஈடுபடக் கூடாது எனவும் அவர் கேட்டுள்ளார்.

மெளலவி முபாறக் அப்துல் மஜீத்

இதேவேளை இன்னும் ஒரு வருடத்தில் ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பு இலங்கையை தாக்கும் என பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருப்பதன் மூலம் அவருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்புக்குமிடையில் இரகசிய தொடர்பு ஏதும் இருக்கின்றதா எனச் சந்தேகமாக உள்ளது. எனவே இது தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தி உண்மையை ஆராய வேண்டும் என உலமா கட்சித் தலைவர் கலாநிதி மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன் இலங்கையில் தலிபான், அல்கைதா இருப்பதாக சிங்கள இனவாதிகள் சிலர் தெரிவித்தனர். இப்போது அது மறைந்து போய் தற்போது சர்வதேச பிரபல்யம் வாய்ந்த ஐ. எஸ். ஐ. எஸ். இலங்கையிலும் உள்ளதாக கற்பனை கதைகளை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கு இருப்பதாக சொல்லப்பட்ட அல்கைதா, தலிபான் உறுப்பினர் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதன் மூலம் அக்கருத்துக்கள் பொய்யானவை, அபாண்டமானவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டன.

தற்போது ஐ. எஸ். கதையை பொதுபல சேனா அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கை மத்ரசாக்களில் தீவிரவாதம் கற்பிப்பதாக பொதுபல சேனா சொல்வது இது முதல் முறையல்ல. ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற நாஸிகளின் கோட்பாட்டை அவர் பின்பற்றுவதாக தெரிகிறது.

எவ்வாறு இலங்கை மத்ரசாக்களில் தீவிரவாதம் கற்பிக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே நாம் மறுத்துள்ளதுடன் அதனை நிரூபிக்க முடியுமா என பொதுபல சேனாவுக்கு சவால் விட்டிருந்தோம்.

இலங்கையின் எந்தவொரு மத்ரசாவிலும் தீவிரவாதம் கற்பிக்கப்படுவ தில்லை என்பதுடன் பெரும்பாலும் அடித்தாலும் அடிவாங்கிக் கொண்டு மெளனமாக இரு என்றுதான் இங்கு கற்பிக்கப்படுகிறது எனவும் முபாறக் மெளலவி தெரிவித் துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.