புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
என் மீது ஒழுக்காற்;று நடவடிக்கையா? மாவை மீது லோகசிங்கம் சீறிப் பாய்ச்சல்

என் மீது ஒழுக்காற்;று நடவடிக்கையா? மாவை மீது லோகசிங்கம் சீறிப் பாய்ச்சல்

பருத்தித்துறை பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோகசிங்கம் மீது ஒழுக்காற்று விசாரணை ஒன்றை மேற் கொள்ளவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரால் லோகசிங்கத்திற்கு கடிதம் ஒன் றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற் குப் பதிலளிக்கும் வகையில் லோகசிங்கம், மாவை சேனாதிராஜாவிற்குப் பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுள் ஒரு பிரிவினரை இன்றும் சிறுபான்மைத் தமிழராக அதாவது தீண்டத் தகாதவர்கள் எனப் பிரித்துப் பார்க்கும் உங்களது கட்சியின் தலைமைகள் குறித்தே முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என லோகசிங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மா. லோகசிங்கம்
பரு. பிரதேச சபை
புலோலி, பருத்தித்துறை.
13.12.2013
கெளரவ மாவை சேனாதிராசா பா.உ
செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி / தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
ஐயா!

உங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன். நன்றி. என் மனதில் உள்ள சில விடயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த ஆர்வமாக உள்ளதால் இந்தப் பகிரங்க மடலை வரைகின்றேன்.

உலகில் உரிமை மறுக்கப்பட்டவர்கள் உரிமைக்காகப் போராடுவதென்பது இயல்பானதே. ஆனாலும் அப்போராட்டத்தின் வெற்றியும் நியாயங்களும் என்பது விட்டுக்கொடுப்புக்கள் மற்றும் சகிப்புத்தன்மையுடன் கூடிய ஆரோக்கியமான மன நெகிழ்வில் தான் தங்கியுள்ளது. இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் அரசாங்கமும், சில அதிகாரிகளும் சில சிங்கள மக்களும் தமிழ் மக்களை அடக்கியாண்டது உண்மையே. இவற்றை இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலர் தினந்தோறும் சுட்டிக்காட்டிய வண்ணம் உள்ளனர்.

சாதி முறையாக உயர் சாதியினர் எனப்படும் சில தமிழ் அரசியல் தலைவர்கள், சில தமிழ் அதிகாரிகள், சில தமிழ் மக்கள் குறைந்த சாதியினர் எனப்படும் என் போன்ற பெரும்பாலான மக்களுக்கு செய்த துரோகங்களும் இடையூறுகளும் எண்ணிலடங்கா. அதன் வடுக்கள் இன்னமும் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு எனக்கேற்பட்ட சில கொடுமையான அனுபவங்களைத் தருகின்றேன்.

நான் மாணவனாக எனது கிராமப் பாடசாலையில் கற்றுவிட்டு 6 ஆம் வகுப்புக்காக உயர் சாதியினரின் பாடசாலையில் சேர்ந்தேன். முதல் நாளிலே சத்தமிட்டு வாசிப்பதற்காக எனது வகுப்பாசிரியையான ஆங்கில ஆசிரியர் 10 சொற்களை கரும்பலகையில் எழுதினார். 10 சொற்களையும் நான் ஒருவரே சிறப்பாக வாசித்தேன். என்னை அணுகிய ஆசிரியை என் வசிப்பிடத்தையும் எனது தந்தையின் தொழிலையும் விசாரித்தார். அதன் பின்னர் நீ உன்னுடைய தொழிலை செய்வதற்கு ஏன் இங்கு வருகின்aர் என தான் இணக்கி வைத்திருக்க வடலி மட்டையால் என் உடலெங்கும் சுற்றி சுற்றி அடித்தார். இந்நிகழ்வு 8 ஆம் வகுப்புவரை 3 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இன்று தமிழ் இளைஞர்கள் வாடும் அரசாங்க சிறைக் கூடத்தை விடக்கடினமானதாகவே எனக்கு பாடசாலை அமைந்தது. 1979 ஆம் ஆண்டு உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த பொழுது என் சக மாணவர்கள் 6 பேரும் பிரத்தியேக வகுப்புக்களுக்காக தனியார் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு நானும் படிப்பதற்காக சென்ற பொழுது அவ் ஆசிரியர் என் சாதியைக் கேட்டு கிண்டல் செய்து வீட்டுக்கு அனுப்பினார். இதனால் நான் பிரத்தியேக வகுப்புக்காக பருத்தித் துறையிலிருந்து நெல்லியடிக்கு நடந்து சென்று கற்றேன்.

2011 ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு பருத்தித்துறையில் பிரதேச சபையின் உப தவிசாளராக உங்களால் நியமிக்கப்பட்டேன். நான் அப்பொழுது என் ஆசிரியர் சேவையை கொழும்பு பாடசாலையில் செய்திருந்தேன். இந்த செய்தியை கொழும்பு கல்வித் திணைக்களத்துக்கு அறிவித்ததும் அவர்கள் என்னை யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்து அனுப்பிவைத்தார்கள். தாபன விதிக்கோவையின் படி எனது சபைக்கு அருகிலுள்ள பாடசாலை எனக்கு தரப்படல் வேண்டும். ஆனாலும் பல பாடசாலைகளைக் கடந்து தொலைவில் உள்ள பாடசாலையைத் தந்து என் தொழிலுரிமை பல்வேறு வழிகளில் மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயிரம் துயரங்கள் சொல்ல முடியாதவை.

1977 ஆம் ஆண்டின் பின்னர் நடைமுறைக்கு வந்த தாராள பொருளாதாரக் கொள்கையின் சுறு சுறுப்பான நடவடிக்கையும் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றமும் சாதி முறையின் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் பலவற்றை இல்லாதொழித்தது. அவற்றின் பயனாக நன்மையடைந்து நிம்மதியாக வாழ்ந்தவர்களில் நானும் ஒருவர். எவ்வாறாயினும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினைகள் மீது கரிசனை கொண்ட உங்களுடன் நானும் வலுச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இணைந்தேன்.

நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பிய நான் என்னைப் பலப்படுத்த ஆயத்தமானேன். ஆனாலும் வேட்பாளர் தெரிவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன முடிவு கிடைக்கப் போகின்றது என்பதை முன்னரே உணர்ந்தமையினால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு கொழும்பில் தங்கியிருந்தேன். இந்தக் காலப் பகுதியில் அண்ணன் சுரேஷ் பிரேமச்சந்திரன் பா.உ. வடமராட்சியில் ஆங்காங்கே இடம்பெற்ற மக்கள்சந்திப்புக்களில் என்னை வேட்பாளராக நிறுத்துமாறு மக்கள்ஆணை தந்ததாக என்னை அழைத்தார். நான் அவரிடமோ அல்லது உங்களிடமோ அல்லது ஏனைய தலைவர்களிடமோ என்னை வேட்பாளராக நிறுத்துமாறு எழுத்து ணீளி'தி! அல்லது தொலைபேசியூடாகவோ கோரவில்லை. அண்ணன் சுரேஷ் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சம்பளமற்ற லீவையும் கல்வித் திணைக்களத்திடம் கோரியிருந்தேன். ஆனால் இறுதியாக நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் இறுதி நாள் வரை காத்திருந்தும் என் பெயரை நீக்கிய விவகாரத்தை நீங்கள் யாரும் அறியத்தரவில்லை. ஆகவே எந்தவித கோரிக்கையும் விடாத சாதாரண பிரசையின் அரசியல் உரிமையை மாத்திரமல்லாமல் வாழ்வாதார உரிமையையும் மறுத்துள்Zர்கள் என்பதனையிட்டு வேதனை அடைகின்றேன்.

இறுதியாக அண்ணன் சுரேஷிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பொழுது மற்றுமொரு சிறுபான்மைத் தமிழனாகிய திரு சிவயோகன் அவர்களை வேட்பாளராக நிறுத்தியமையால் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த உங்களை நிறுத்த முடியாது என மாவை அண்ணன் கூறியதாக சொல்லியிருந்தார்.

தேர்தலுக்கு முன்பதாக உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளாக இருக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு நீங்கள் இரு கூட்டங்களை நடத்திவீர்கள். அக் கூட்டத்திலே கலந்து கொண்ட நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு சாதிப்பிரச்சினை உண்டு என்று நான் கூறவில்லை. ஏனெனில் என் பிரதேசமாகிய வடமராட்சியில் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் எனக்கு உயர் மரியாதையையும் அன்பையும் தந்தார்கள். எவ்வாறாயினும் அவ்விரு கூட்டத்திலும் நீங்கள் பங்கு பற்றியதன் மூலம் சிறுபான்மைத் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டீர்கள். அது மாத்திரமல்லாமல் வட மாகாண சபைக்குரிய யாழ். மாவட்டப் பிரதிநிதிகள் 16 பேரில் 8 பேர் எமக்குத் தரப்படல் வேண்டும் என்று அக்கூட்டத்தை நடத்தியவர்கள் கோரிக்கை விட்ட பொழுது உங்களுடைய பிரதிநிதித்துவம் உங்களுக்குத் தரப்படும் என்று உயர்ந்த மனதோடு நீண்ட அரசியல் அனுபவத்தோடு திரும்பத் திரும்பக் கூறினீர்கள். அத்தோடு உங்கள் கூட்டமைப்பில் பல கட்சிகள் இருப்பதனால் கடந்த தேர்தல்களில் அது சாத்தியமாகவில்லை. இந்த முறை அவர்களுடனும் பேசுவேன் என்று கூறினீர்கள். ஆனால் இறுதியில் நடந்ததென்ன சுரேஷ் அண்ணன் ஒதுக்கிய இடத்தைக் கூட நீங்கள் தருவதற்கு தயங்கிவிட்டீர்கள். சிறுபான்மைத் தமிழர்களுக்கு 3 ஆசனம் ஒதுக்கீடு செய்வதாக அவர்களின் பெயர்களை புதினப் பத்திரிகையிலும் பிரசுரித்து விட்டு அவற்றிலும் ஒருவரின் பெயரை நீக்கி 19 இல் 2 ஆகக் குறைத்தீர்கள். இதற்கு உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகின்றது. இதற்கு சில சிறுபான்மைத் தமிழர்களும் துணை போனார்கள் என்று அறிகின்றேன். ஆகவே அவர்களின் செயத்திறன் பற்றி நீங்களே எடைபோட்டுக் கொள்ளுங்கள்.

எங்களுடைய உரிமைகளைத் தருவதில் உங்களுக்கு எவ்வளவு இடர்பாடுகள் உண்டோ அதேபோன்று தான் சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழர்களின் உரிமையை வழங்குவதில் இடர்பாடுகள் உண்டென்பதை அறிந்து “உண்மை நல்லிணக்கம் என்பதற்கு வழிவகுப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

மாற்றுத்தெரிவு இல்லாத தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான தெரிவுகள் தெரிந்திருந்தாலும் கூட வேறு வழியில்லை என்பதனால் மக்கள் ஆதரவு என்றுமே உங்கள் பக்கம் உண்டு. ஆனால் கடந்தகால அனுபவங்கள், யதார்த்தங்கள் உணரப்பட்டதால் தமிழ் மக்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் ஏறத்தாழ இல்லையென்றே கூறலாம். ஆனாலும் ஒழுங்கான முறையில் பதிவு செய்த கட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமையின் காரணமாக மேலிடத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் தாம் விரும்பியவரை ஒதுக்கித்தள்ளவும் விரும்பியவரை முன்னிலைப்படுத்தவும் முடிகின்றது. இதற்காகப் பயன்படுத்தப்பட்டதே சாதி முறையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது 5 தலைவர்களின் கட்சிகளின் கூட்டாகும். அண்ணன் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது பிடியை யும் கட்சியின் முக்கியத்துவத்தையும் கை நழுவாமல் பார்ப்பதற்கு தனது சகோதரனுக்கு வடக்கு மாகாண சபையில் ஒரு அமைச்சர் பதவியைக் கோரியிருக்கலாம். தான் கட்சியில் ஓரங்கட்டப்படுவதனை அறிந்திருந்த படியால் அதனை முறியடிக்கும் முகமாக இக்கோரிக்கையை விட்டிருக்கலாம். ஆனால் இறுதியில் நடந்ததென்ன. தமிழ் மக்களின் மீது பற்றுக்கொண்டு பல இடர் களுக்குள் போராட்டம் செய்து ஆற்றலும் அனுபவமும் கொண்ட உண்மையான தலைவரை தமிழரசுக் கட்சி தெருவில் போட்டு விற்றுத்தள்ளியது. சாதாரண தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் அறிவுத்திறன் கொண்டவர்கள் எனக் கருதப்படும் தமிழ்த் தலைவர்களும் சுரேஷ் தனது தம்பியா ருக்கு அமைச்சுப் பதவி தாருங்கோ எனக் கேட்கிறார் என்று சொற்ப கண நேரத்துக்குள் அவரைக் கொச்சைப்படுத்தியுள்ளனர். ஆகவே என் போன்ற சிறிய அடியேனை ஒதுக்கித்தள்ளுவது பெரிய காரியமாக இராது. இறுதியாக ஒன்றைக் கூறி வைக்க விரும்புகின்றேன். உங்களது கட்சிக்காரர்கள் தமிழ் மாநிலத்தை சுயாதீனமாக ஆட்சி செய்திருந்தால் எனது முகாமைத்துவப்பட்டம், பட்டப்பின், கல்வி, பொருளியல், பொது நிர் வாகம் போன்ற டிப்ளோமாக்களையும் நான் பெற்றிருக்க முடியாது என்ற கசப்பான உண் மையைத் தெரிவிக்கின்றேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.