புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

மண்டேலாவுக்கு இன்று பிரியாவிடை

மண்டேலாவுக்கு இன்று பிரியாவிடை

ஆபிரிக்க நாட்டவர்கள் அவரை அப்பா (மாடிபா) என்றே அழைத்தனர். அந்த அழைப்பிற்கு வயது பேதம் இருக்கவில்லை. தென் ஆபிரிக்க கறுப்பு இனத்தவர்களின் தந்தையாகவே அவர் கருதப்பட்டார். உண்மையில் அவரை அப்படி அழைப்பதில் தவறில்லை. காரணம் அவர் இல்லையெனில் இன்றும் தென் ஆபிரிக்க கறுப்பு இனத்தவர்கள் உரிமைகள் அற்ற அடிமைகளாகவே வாழ வேண்டி இருந்திருக்கும். உலகில் நெடு நாள் வாழ்ந்தோரின் பெயர் பட்டியலில், தமது பெயரையும் இணைத்துவைத்த நெல்சன் மண்டேலா கடந்த வாரம் இவ்வுலகை விட்டுச் சென்றார்.

தமது எழுபத்து ஆறாவது வயதில் பிறந்த மண்ணின் தலைவராகும் வரையிலான அவரது வாழ்க்கை சாதாரண மனிதரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அபூர்வமான கதையாகும். தமது வாழ்க்கையில் பெரும் பகுதியை அரசியல் கைதியாக சிறைச்சாலையின் சிறிய, இருண்ட அறையில் கழித்த அவர் இறுதி மூச்சுவரை தமது நாட்டு மக்களினதும் உலகினதும் பெரும் மதிப்புக்குரிய புரட்சித் தலைவராக திகழ்ந்தார்.

தென் ஆபிரிக்காவின் பெரும்பான்மையினரான கறுப்பு இனத்தவர்கள் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையினரின் அடிமைகளாக இருந்த போதே அவ் அடிமைகளில் ஒருவராகவே நெல்சன் மண்டேலா பிறந்தார். ஒன்பது வயது சிறுவனாக இருந்த போதே தமது தந்தையை இழந்த மண்டேலாவை, ஆபிரிக்க நாட்டின் ஒரு இனத் தலைவரே வளர்த்தார். சிறு வயது முதலே அவருக்குத் தேவையான கல்வியையும் அவரே வழங்கினார்.

கல்வி மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா ஜொஹன் னர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தில் கல்வி கற்று வழக்கறிஞர் ஆனார். அந்த பல்கலைக்கழக வாழ்க்கை கூட இனவாத அடக்குமுறைகளால் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் நெல்சன் மண்டேலாவின் மனதை வெகுவாக பாதித்தது. தம்மை மாத்திரமின்றி தாம் சார்ந்த இனத்தவரையும் வேதனைப்படுத்தும் அந்த சமூக வடுவை அழிக்கும் நோக்கிலேயே இளம் மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் சங்கத்தில் இணைந்தார்.

வெகு சீக்கிரமாக மக்களின் மனங்களை கவர ஆரம்பித்தார். அப்போதைய வெள்ளையர் ஆட்சி ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் சங்கத்தை முடக்க சகல வழிகளிலும் முயன்றது. அதன் விளைவாக அரசியல் போராட்டக் களம் இரத்தக் களமாக மாறியது. அறுபத்தி ஒன்பது பேர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் செத்துமடிந்த 1956ஆம் ஆண்டில் ஓர் இருண்ட நாளில் நெல்சன் மண்டேலா உட்பட இன்னும் சிலர் பொலிஸாரினால் அரசியல் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர். அதன்போதே அரசியல் போராட்டத்துடன் ஆயுதப் பயிற்சியும் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மண்டேலாவுக்கு வந்தது. அதிலிருந்து ஆபிரிக்க காங்கிரஸின் இளைஞர் சங்கத்தின் இளம் அங்கத்தவர்கள் ஆயுதப் பயிற்சியினையும் பெற்று கொண்டனர். மெரொக்கோவில் ஆயுதப் பயிற்சியினைப் பெற்று நாடு

திரும்பிய நெல்சன் மண்டேலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இரண்டு வருட விசாரணைகளின் இறுதியில் 1964ஆம் ஆண்டில் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை அப்போது ஏற்றுக்கொண்ட போதிலும் அந்த நேரம் தொட்டு தொடர்ந்து நான்கு மணித்தியாலங்களாக அவர் தமது நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார். அதன்போது தாம் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கி கூறியதுடன் வர்க்கபேத வாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது என வலியுறுத்தினார். அன்று முதல் பதினெட்டு வருடங்கள் நெல்சன் மண்டேலாவை ரொபின் தீவில் இருண்ட சிறிய அறையில் சிறைவாசம் வைத்தது. அப்போதைய தென் ஆபிரிக்க வெள்ளையர் ஆட்சி.

1990ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை பெற்ற மண்டேலா ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தென் ஆபிரிக்க ஜனாதிபதி போட்டியில் பங்கேற்றார். 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற அத்தேர்தலில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் ஒன்று திரண்டு நெல்சன் மண்டேலாவுக்கு வாக்களித்தது. அதுவரை கடற்கரை, உல்லாச விடுதிகள், பூங்காக்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும் உரிமைகளைக் கூட கறுப்பு இனத்தவர் பெற்றிருக்கவில்லை. அந்த மிலேச்சத்தனமான அடிமை ஆட்சியில் இருந்து கறுப்பு இனத்தவரை மீட்ட மண்டேலா அவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றக்கொடுத்து அவர்களின் அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டினார்.

தமது மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய இந்த மக்கள் மன்னன் சிறந்த காதல் மன்னன் என்பதையும் மறுப்பதற்கில்லை. தமது இரண்டாவது மனைவி வினீ மண்டேலாவை விவாகரத்து செய்த மண்டேலா தமது எண்பதாவது வயதில் மூன்றாவது திருமணத்தையும் செய்து கொண்டார். இறக்கும்போது அவர் இருபத்தி ஏழு பேரப்பிள்ளைகளின் பாட்டனாகவே இருந்தார்.

தொண்ணூற்று ஆறாவது வயதில் மரணத்தை தழுவிக்கொள்ளும் வரை வாழ்ந்த அவரது நீண்ட வாழ்க்கை மனித இனத்தின் விடிவுக்காக வாழ்ந்த அர்தபுஷ்டியான ஒரு வாழ்க்கை என்பதை மறுப்பதற்கில்லை.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.