புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
வட மாகாண சபையின் ஒத்துழைப்பை கோருகிறார் காணி அமைச்சர் ஜனக

வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு;

வட மாகாண சபையின் ஒத்துழைப்பை கோருகிறார் காணி அமைச்சர் ஜனக

கொழும்பில் 65 ஆயிரம் குடிசை வாழ் குடும்பங்களுக்கும் புதிய வீடுகள்

வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகள் தொடர்பாக கடந்த காலங்களில் 148,408 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அவற்றில் தற்போது 22,408 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன் எஞ்சி யுள்ள முறைப்பாடுகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்பட்டு வருவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண் டார தென்னக்கோன் நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் காணப்படும் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், காணிப் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் ஊடாக அடுத்த வருடத்தில் வடக்கு, கிழக்கின் 75 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

வரவு - செலவுத் திட்டத்தில் காணி, காணி அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் சமூக, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மஹிந்த சிந்தனை கொள்கை அமுல்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அவற்றில் 22 விடயங்கள் எனது அமைச்சுடன் தொடர்புடையவை. அவற்றில் 12 விடயங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 10 விடயங்களை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினைகள் பிரதானமானது. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற 148,408 முறைப்பாடுகளில் 22,408 முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக் கப்பட்டுள்ளதுடன் 125950 முறைப்பாடுகள் தீர்க்கப்படாது இருக்கின்றது. அவற்றை தீர்ப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரிடமிருந்து 1775 ஏக்கர் காணிகளை மீள மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் கடந்த வருடத்தில் இது போன்று 5000 ஏக்கர் காணி மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை காணிகளை இழக்கும் மக்களுக்கு மாற்று காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக அடுத்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் ஊடாக 2014 ஆம் ஆண்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 75 வீத காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

கொழும்பு நகர அபிவிருத்தியூடாக கொழும்பில் 65 ஆயிரம் குடிசை வாழ் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக நிர்மாணிப்பதற்காக 200 ஏக்கர் காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள மக்கள் வேறு எந்த இடத்திற்கும் வெளியில் அனுப்புவதற்கு நாம் ஒருபோதும் விடமாட்டோம், இடமளிக்கமாட்டோம் என்று உறுதியளிக்கின்றேன். இந்த மக்களுக்கு அநியாயம் ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.