புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
தமிழக மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாட்டு தலைவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?

இந்திய இழுவைப் படகுகளினால் வடபகுதியில் கடல் வளம் சுரண்டல்; இலங்கை மீனவர் பாதிப்பு

தமிழக மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாட்டு தலைவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?

கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது என்பதில் உண்மையில்லை

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான பிரேரணையை மையமாகக் கொண்டு கடந்த பல வாரங்களாக இலங்கைக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையிலான நல்லுறவு மோசமடைந்து இருப்பதனால் இரு தேசங்களின் மக்கள் இரு நாடுகளுக்கும் செல்வதற்குக் கூட அஞ்சுகின்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலை இலக்குவைத்து தமிழ் நாட்டின் ஆளும் கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழ கமும் கடந்த சில வாரங் களாக இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை செய்யு மாறு மாணவர்களையும் மற்றவர்களையும் தூண்டி விட்டு தங்கள் செல்வாக் கைப் பெருக்கிக் கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை.

இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆதரவு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு கிடைக்காததே இதற்கான பிரதான காரணமாகும். தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து மீண்டும் அமைதி நிலவுவதற்கான அறிகுறிகள் இலங்கையிலும், தமிழகத்திலும் தென்படுவதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

மீண்டும் தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையில் பதற்றநிலைமை ஏற்படுவதற்கு கடற்றொழிலாளர்களே அடித்தளம் அமைத்துக் கொடுப்பார்கள் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகிறது. தற்போதைய நிலை தங்களுக்கு சாதகமாக இருக்கின்றது என்ற தப்பு அபிப்பிராயத்தில் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் தமிழ்நாட்டு மீனவர்கள் வரம்புமீறி இலங்கை மீனவர்களை துன்புறுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இப்போது எழுந்துள்ளது.

இதில் புதினம் என்னவென்றால் தமிழ்நாட்டு மீன்பிடி ரோலர்களில் அநேகமானவற்றின் உரிமையாளர்கள் அரசியல்வாதிகளாவர்.

இலங்கைக் கடற்படையினர் தங்களைத் தாக்கி காயப்படுத்தினார்கள் என்றெல்லாம் அடிக்கடி முறைப்பாடுகளைச் செய்து இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டு வருவதற்கு இவர்கள் செய்யும் முயற்சிகளுக்கு இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினர் இக்குற்றச்சாட்டுக்களில் எவ்வித ஆதாரமும் இல்லையென்று மத்திய அரசாங்கத்துக்கு உறுதியளித்திருப்பதாகவும் விடயமறிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறி பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற பேராசையினால் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதனால் பெரிய மீன்கள் மட்டுமன்றி, சிறிய மீன்களும் பிடிபட்டு மீன்வளமே தமிழ் நாட்டைச் சார்ந்துள்ள கடற்பரப்பில் வரண்டுபோயி ருப்பதாக கடற்றொழில் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

இதனால், பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் படை பலத்துடன் வந்து இலங்கையை ஆக்கிரமித்த வரலாற்றைப் போன்று இந்திய மீனவர்கள் எமது கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, சட்டவிரோதமான மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபட்டு எமதுநாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான மீன்வளத்தை அபகரித்து வருகிறார்கள்.

இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் இந்த அக்கிரமங்களைப் பார்த்து அடிபணிய முடியாதநிலை இன்று தோன்றியிருப்பதனால் அவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு இலங்கை கடற்படையின் பாதுகாப்பு அவசியம் என்பதை இப்போது அரசாங்கத் தலைவர்களுக்கு வலியுறுத்தி வருவதாகத் தெரியவருகிறது. யுத்த காலத்தின்போது சுமார் 30 ஆண்டுகளாக இலங்கை மீனவர்கள் எங்கள் நாட்டின் மீன்வளத்தை உரித்தோடு பயன்படுத்துவதற்கு முடியாத நிலை அன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசாங்கத்தினால் அமுலாக்கப்பட்டிருந்தது. கரையிலிருந்து ஒரு கடல்மைல் தூரத்தில் மாத்திரமே மீன்பிடிப்பதற்கு அன்று கடற்படையினர் மீனவப் படகுகளுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். அதிசக்திவாய்ந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள் அன்று முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தன.

இந்த காலகட்டத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எமது கடற்பகுதிக்கு பல்லாண்டு காலமாக மீன்பிடித்து கொள்ளை இலாபம் சம்பாதித்து வந்தார்கள். இலங்கையில் யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் எமது மீனவர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தங்கள் வருமானம் குறைந்துவிட்ட ஆத்திரத்திலேயே இந்திய மீனவர்கள், எமது மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துடன் இந்நிலை பற்றி உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி நம்நாட்டு மீனவர்களுக்கு எமது கடல் எல்லையில் நிம்மதியாக மீன்பிடிப்பதற்கு உதவக்கூடியதொரு திட்டத்தை இரு நாடுகளின் கரையோரப் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்தை முன்வைத்து தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக மீனவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படையாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது போன்று நடிக்கிறார்களே தவிர, அவர்களுக்கு இலங்கை மக்களைப் பற்றியோ இலங்கை மீனவர்களைப் பற்றியோ சிறிதளவேனும் அக்கறையோ கருணையோ இல்லை.

அந்தளவுக்கு தமிழக மீனவர்கள் இலங்கைத் தமிழர்களை நேசித்தால் ஏன் இங்கு வந்து வடபகுதியிலுள்ள தமிழ் மீனவர்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வைக்கின்றார்கள் என்று தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு அரசியல் விமர்சகர் கேள்வியெழுப்புகின்றார்.

இந்திய மீனவர்களுக்கு இலங்கை மக்கள் மீது அந்தளவு அன்பும் ஆதரவும் இருந்தால் ஏன் அவர்கள் தாங்கள் வாழும் பிரதேசத்திலுள்ள இலங்கை அகதி முகாம்களுக்குச் சென்று ஏன் உதவக்கூடாது. அவர்களுக்கு எமது மக்களை வைத்துக்கொண்டு தங்கள் வயிற்றை நிரப்புவது குறிக்கோளாக இருக்கிறதே தவிர எமது மக்களுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்கும் நோக்கம் இல்லையென்றும் அந்த அரசியல் விமர்சகர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ் நாட்டில் குரல் கொடுக்கும் தலவைர்கள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலுள்ள எமது மீனவர்களின் வளங்களை தமிழகமீனவர்கள் சுரண்டிச் செல்வதை தடுக்க ஏன் முன்வரக் கூடாது என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதேவேளை, இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்கென இலங்கை அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் இணைந்த செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கைதாகும் மீனவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்தும் விதத்தில் இந்த செயற்குழு செயற்பட்டு வருகின்றது.

இலங்கை கடற்பரப்பில் 517,000 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவு வர்த்தக வலயப் பகுதி. இந்தப் பகுதிக்குள் அத்துமீறி எந்த நாட்டு மீனவர்களும் வரமுடியாது. என்றாலும் தமிழக மீனவர்கள் மட்டுமே எமது எல்லைக்குள் வந்து அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். இது எமக்குள்ள பாரிய பிரச்சினையாக உள்ளது என கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை மூன்று இந்தியப் படகுகளில் வந்த தமிழக மீனவர்கள் யாழ் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து எமது வடபகுதி மீனவர்களின் மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். படகுகளுக்கும், மீன்பிடி உபகரணங்களுக்கும் அவர்கள் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதிலிருந்த எமது 16 மீனவர்களும் இந்திய மீனவர்களுடன் போராடியுள்ளனர். விடயமறிந்த இலங்கை கடற்படையினர் ஸ்தலத்துக்கு விரைந்து எமது மீனவர்களை காப்பாற்றியுள்ளனர். ஆனால் கடற்படையி னரின் தாக்குதலுக்கு உள்ளாகி இந்திய மீனவர்கள் படுகாயமடைந்ததாக பொய்ப் பிரசாரம் தமிழகத்தில் பரப்பப்பட்டுள்ளது என்றும் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.