புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

சோபையிழந்த சம்பியன் லீக் போட்டிகள்

சோபையிழந்த சம்பியன் லீக் போட்டிகள்

ஆட்ட நிர்ணய சதிகளால் கலங்கும் T20

4 ஆவது சம்பியன் லீக் டுவண்டி-20 தொடர் கடந்த வாரம் முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சில பேட்டிகள் இறுக்கமாக நடைபெற்று கடைசிப் பந்துவரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இம்முறை இந்திய ஐ. பி. எல். அணிகளான மும்பை இந்தியன்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டெயார்டேர்விஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பங்குபற்றுகின்றன. ஆனால் அவ்வணிகள் இதுவரை சிறந்த ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஐ. பி. எல். சம்பியனான கொல்கத்தா அணி தான் சந்தித்த முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது. அவ்வணியின் துடுப்பாட்டம் இம்முறை சிறப்பாக அமையவில்லை. தொடர்ந்து அவ்வணித் தலைவர் காம்பீர் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறி வருகிறார். மற்றைய அணிகளும் குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை இதுவரை பெறவில்லை டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான் சந்தித்த முதல் இரு போட்டியிலும் தோல்வியுற்றுள்ளது. மும்பை இந்தியன் அணியும் முதல் போட்டியில் தோல்வியுற்றுள்ளது. ஐ. பி. எல். அணிகளில் டெல்லி அணி மட்டுமே தான் சந்தித்த முதல் போட்டியில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் இந்தியப் பிரிமியர் லீக் தொடரினால் இந்திய அணியின் தரம் குறைந்துள்ளது என்ற கருத்துக்களும் இப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. முக்கியமாக இத்தொடரினால் அவ்வணி வீரர்கள் வருடந்தோறும், இரண்டு, மூன்று மாதங்கள் தொடர்ந்து இப்போட்டிகளில் பங்குபற்ற வேண்டும். அதனால் அவ்வீரர்களுக்கான ஓய்வு மிக மிகக் குறைவாகவே கிடைக்கின்றது. எனவே அவர்களின் உடல் நிலையும் பாதிக்கப்படுகின்றது. இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்கள் அடிக்கடி காயம் காரணமாக மூன்று, நான்கு மாதங்கள் கட்டாய ஓய்வு எடுப்பதும் சமீப காலமாக வழமையாகிவிட்டது.

மேலும் அத்தொடரில் பங்கு பற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஓய்வு அறையில் இருக்கும் போது இந்திய வீரர்களின் பலம், பலவீனங்களளைப் பற்றி கலந்தாலோசித்து அறிந்து கொள்கின்றனர். பின் அவர்கள் நாட்டுக்காக விளையாடும் போது இந்திய வீரர்களின் பலவீனம் அறிந்து அதற்கேற்ப செயற்படுகின்றனர் இதனால்தான் இந்திய அணி அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிக்குத் தெரிவாகாமல் நாடு திரும்பியது என்று விளையாட்டு விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இம்முறை நடைபெற்ற 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி வீரர்களின் செயற்பாடுகளும், இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் பந்துகளுக்கு இலகுவாக ஓட்டங்களைச் சேர்ந்ததையும் பல விமர்சகர்கள் உதாரணமாகக் காட்டுகிறார்கள். உண்மையிலேயே ஐ. பி. எல். போட்டிகளில் திறமையாக விளையாடும் லசித் மலிங்க, இலங்கை அணிக்காக விளையாடும் போது ஓரிரு போட்டிகளைத் தவிர முக்கியமான போட்டிகளில் சொதப்புகிறார்கள் என்ற எண்ணம் இலங்கை ரசிகர்களிடையே நிலவி வருவதும் உண்மையே.

இச்சம்பியன் லீக் போட்டித் தொடரில் பங்குகொள்ளும் தென்னாபிரிக்க லயன்ஸ் அணி தான் பங்குபற்றிய இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. பொதுவாக இப்போட்டித் தொடரை நோக்கும் போது இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இந்திய பிரிமியர் லீக் அணிகளின் வீரர்கள் இப்போட்டித் தொடரில் சோபிக்கத் தவறிவருகின்றனர். முக்கியமாக இந்திய தேசிய அணி வீரர்களைப் போலவே பிரிமியர் லீக் அணி வீரர்களும் உள்நாட்டு மைதானங்களில் ஆடுவதைப் போல் வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக விளையாடத் தவறி வருகின்றனர். இத் தொடரிலிருந்து இந்திய பிரிமியர் லீக் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் பங்குபற்றிய மூன்றாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் இப்போட்டித் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஏற்கனவே டில்லி, ஆக்லாந்து அணிகளிடம் தோல்வி அடைந்த கல்கத்தா நைட்றைடர்ஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்தது. கல்கத்தா அணி, தனது கடைசி லீக் போட்டியில் டைட்டன்ஸ் அணியை (அக்.21, இடம்- கேப்டவுன்) எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் கல்கத்தா அணிக்கு 4 போட்டியில் 6 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். இப்போட்டித் தொடரில் பந்து வீச்சிலும் சரி துடுப்பாட்டத்திலும் வெளிநாட்டு வீரர்களே சோபித்து வருகின்றனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளிலும் ஆக்லாந்து ஏஸஸ், சிட்னி சிக்ஸர்ஸ், தென்னாபிரிக்க லயன்ஸ் போன்ற அணிகளே முன்னிலை பெற்றுள்ளன.

அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதாலும், கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறுவதால் இம்முறை இப் போட்டித் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. தொலைக் காட்சி ரசிகர்களிடமும் இம்முறை போட்டியை ரசித்துப் பார்க்கும் ஆர்வம் குறைந்துள்ளது.

சம்பியன்ஸ் லீக் இருபது - 20 போட்டியில் மஹேல ஜயவர்தன தலைமையிலான டெல்லி அணி ஐ.பி.எல். சம்பியன் கொல்கத்தாவை முதல் போட்டியில் 52 ஓட்டங்களால் இலகுவாக வீழ்த்தியது.

தென்னாபிரிக்காவின் சென்சூரியனில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆட பணிக்கப்பட்ட டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களையே பெற்றது.

மற்றொரு சம்பியன் லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவின் பேர்த் அணியை தென்னாபிரிக்காவின் டைடான் அணி 39 ஓட்டங்களால் வீழ்த்தியது. ஜொஹன்னர்ஸ்பேக்கில் இடம்பெற்ற மற்றொரு சம்பியன் லீக் போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ், சிட்னிசிக்ஸர்ஸ் ஆகியன மோதின. 186 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முதலாவது விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்த அவ்வணி இரண்டாவது விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும் அதன் பின்னர் அடுத்த இரண்டு விக்கெட்டுக்களையும் விரைவாக இழந்தது. துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக சுரேஷ் ரெய்னா 33 பந்துகளில் 57 ஓட்டங்களையும் பாப் டு பிளேஸிஸ் 25 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி சார்பாக மிற்சல் ஸரார்க் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மொயஸஸ் ஹென்றிக்கஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் தெரிவானார்.

மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது ஆக்லாந்து அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆக்லாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.

பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட மஃமூத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற மற்றொரு சம்பியன் லீக் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற லயன்ஸ் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதையடுத்து துடுப்பெடுத்தாடிய சென்னை அணியில் முரளி விஜய்- டூ பிளெஸ்ஸிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 44 ஓட்டங்கள் சேர்த்தது டூ பிளேஸ்ஸிஸ் 20 பந்துகளில் 1 ஸிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்த வந்த ரெய்னா 16 பந்துகளில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசிக் கட்டத்தில் டோனியும், பத்ரிநாத்தும் இணைந்த 4.2 ஓவர்களில் 50 ஓட்டங்கள் சேர்த்தனர். டோனி 26 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார். பத்ரிநாத் 14 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்கள் சேர்க்க 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். பின்னர் ஆடிய லயன்ஸ் அணி முதல் ஓவரின் முதல் பந்திலேயே பீட்டர்சனின் விக்கெட்டை இழந்தது. இதன்பிறகு வந்த குலாம் பேர்டி கிடைத்த ஓவர்களை எல்லாம் பதம்பார்த்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார். கடைசியா அவ்வணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.

சென்னை அணி தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. அதேநேரத்தில் லயன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை ருசித்துள்ளது. முன்னதாக முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை அந்த அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.