ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

கடுங்காற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

கடுங்காற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

17 சடலங்கள் நேற்று கரை ஒதுங்கின

சீரற்ற காலநிலை காரணமாக திடீரென வீசிய கடும் காற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இவற்றில் 41 மீனவர்களும் மேலும் இருவரும் அடங்குவர்.

இதேவேளை கடலில் காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளன.

கொழும்பு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் நேற்றைய தினம் மாத்திரம் 17 ற்கும் அதிகமான சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.

பம்பலபிட்டி, அஹுங்கல்ல, அம்ப லாங்கொட, காலி, பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் கரையொதுங்கிய நிலையிலேயே இந்த சடலங்கள் மீட் டெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அஹுங்கல்ல, அம்ப லாங்கொட பிரதேசங்களில் 14 சடலங்க ளும், பம்பலபிட்டி பிரதேசத்தில் 2 சடலங்களும், பெந்தோட்டை பிரதேசத்தில் 1 சடலமும் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் 29 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், 20 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு கடலில் காணாமல் போன வர்களை தொடர்ந்தும் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் கடற்படையினரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை மற்றும் திடீரென வீசிய கடும் காற்றினால் புத்தளம் பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவரும், இரத்தினபுரி பிரதேசத்தில் வீடொன்றின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் 557 குடும்பங்களைச் சேர்ந்த 1433 பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பேச்சாளர் சரத் லால்குமார தெரிவித்தார்.

அத்துடன், 2345 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 107 வீடுகள் முற்றாகவும், 2238 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், பாதிக்கப்பட்டவர்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கென நுவரெலியாவில் 3 முகாம்களும், இரத்தினபுரியில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே தினத்தில் பெரும் எண்ணிக்கை யிலான சடலங்கள் கரை ஒதுங்கியதை அடுத்து கரையோர பிரதேசம் எங்கும் நேற்று பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டன.

அனர்த்தம், இடம்பெற்று மூன்று தினங்கள் சென்றுள்ள நிலையில் மீனவர்கள் கரைக்குத் திரும்பாததனாலும், கண்டுபிடிக்கப்படாமையினாலும் காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மீனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வணர்த்தத்தில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட மீனவர்களின் சிலரது இறுதிக் கிரிகைகள் நேற்று நடைபெற்றன.

கடற்படை

இதேவேளை, கடலில் காணாமல் போன மீனவர்களை தேடிக் கண்டுப் பிடிக்கும் நடவடிக்கைகளிலும் மீட்புப் பணிகளிலும் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதுடன் கடற்படை கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கடற்படையின் கப்பல்களும், அதிவேக மற்றும் டோரா படகுகளும் தொடர்ந்தும் கடலில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தம் இடம்பெற்று மீனவர்களும், மீன்பிடி படகுகளும் காணாமல் போனது தொடக்கம் கொழும்பு முதல் காலி வரையிலான கடற்பரப்பிலும், கரையோர பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கடற்படையினர் தற்பொழுது ஆழ்கடல் பகுதியில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகேவின் ஆலோசனைக் கமைய கடற்படையின் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், ஆழ்கடல் தேடுதல்கள் ஷி}&யினிl8t@னிரி>!8 கடற்றொழில், நீரக வளமூலங்கள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்தார்.

விமானப்படை

மீட்பு பணிகள் மற்றும் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் விமானப்படையின் ஹெலிகொப்டர்களும், விமானங்களும் சகல சந்தர்ப்பங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் எயார் கொமடோர் என்ரு விஜேசூரிய தெரிவித்தார்.

விமானப்படைக்குச் சொந்தமான அதி நவீன கண்காணிப்பு விமானமான “கிலீaணீh றிing திir” என்றழைக்கப்படும் கண்காணிப்பு விமானம் மூலம் கெமராக்களின் உதவிகளுடன் மேற்கொண்ட தேடுதல்களிலும் எந்த ஒரு மீனவர்களையும் காணவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசின் நிவாரண, உதவி நடவடிக்கைகள்

பாதிக்கப்பட்ட நிலையில் மீட்டெடுக்கப்பட்ட மீனவர்களை வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கும் நடவடிக்கைகளும், மீட்டெடுக்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான சகல வசதிகளையும் அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களின் உதவியுடன் மேற்கொண்டுள்ளது.

அத்துடன், நிவாரணங்கள் எந்தவித தங்குதடைகள் இன்றி மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களின் ஊடாக வழங்கப்படுகிறது.

அனர்த்த முகாமைத்துவ, மீன்பிடி அமைச்சர்களின் தலைமையில் அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்தன சுட்டிக்காட்டினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி