புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
ஹொரணை பிரதேச தமிழ்ப் பாடசாலைகளுக்கு கணனி வழங்கிய பிரதமர்

ஹொரணை பிரதேச தமிழ்ப் பாடசாலைகளுக்கு கணனி வழங்கிய பிரதமர்

பிரதமரை மாணவியர் திலகமிட்டு வரவேற்கின்றனர்

கணனி பயிற்சியை ஆரம்பித்து வைக்கிறார்

‘ஹொரணை பிரதேசத்தில் ஏராளமான சமூகப் பணிகளை ஆற்றி வந்திருக்கும் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க கடந்த 16ம் திகதி இங்கிரிய, றைகம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கணனிகளை வழங்கினார். இதில் கலந்து கொண்ட எமது பத்திரிகையாளர், தோட்டப் பாடசாலை அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி தொடர்பான உதவிகளையே நமது பிரமுகர்கள் அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டுமே தவிர பக்தி வளர்ப்பு தொடர்பான உதவிகளை கேட்பதில் அர்த்தமில்லை என்ற ஒரு கருத்தை வலியுறுத்துகிறார்.’

உலக மயமாக்கல் என்ற சிந்தனையின் ஆதார இயக்க சக்தியாக விளங்குவது விரைவான தகவல் பரிமாற்றம். அதாவது கணனி பயன்பாடு. இணைய பயன்பாடு. இது தவிர்க்க முடியாதது. கணனி பயன்பாடின்றி இளைய தலைமுறை அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்பதே யதார்த்தம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் இருந்த கணனி பயன்பாடு இன்று மிகவும் பின் தங்கிய கிராமப்புறங்களிலும் அத்தியாவசிய தேவையாகி வருகிறது. மலையகம் என்றால் எட்டடி காம்பிரா என்றிருந்த நிலைமாறி பெருந்தோட்டங்களில் கணனி பயிற்சி மையங்கள் ஆங்காங்கே முளைத்து வருவது மலையகம் விழித்துக்கொள்ள இன்று மலையகத்திலும் அனேக இடங்களில் ஆரம்பித்திருக்கிறது என்பதையே கட்டியம் கூறுகிறது.

ஆனால் சிறு தோட்ட பகுதிகளான இரத்தினபுரி, களுத்துறை பகுதிகளில் கணனியின் அறிமுகம் இன்னும் பாடசாலை மட்டத்தில் கூட அறிமுகம் செய்யப்படவில்லை என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். இந்தக் குறைபாட்டை நிவர்த்திசெய்யும் முகமாக ஹொரணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இலவச கணனிகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த செல்வந்தர்களின் உதவியுடன் இத் திட்டத்தை அவர் மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க விடயம். ஹொரணை பிரதேச சபையில் அமைந்திருக்கும் சிங்கள, தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் நான்காயிரம் தமிழ் மாணவர்கள் பயனடைகிறார்கள்.

அதிபர் மனோகரன்

அதிபர் மனோகரன்

எல்லகந்த, பேர்த், மில்லேவ, எதுராகலை, றைகம் சரஸ்வதி, றைகம் கீழ் பிரிவு தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட ஆறு பாடசாலைகளுக்கும் தலா இரண்டு கணனிகள் வீதம் 12 கணனிகள் பிரதமர் கடந்த வாரம் வழங்கினார். றைகம் தமிழ் வித்தியாலயத்தில் கணனிகள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர் அங்கு உரை நிகழ்த்தும் போது ‘’மாணவ செல்வங்களை தான் பொக்கிஷமாகக் கருதுவதாகவும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான அனைத்து தேவைகளும் நிவர்த்தி செய்து வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார் பிரதமர். பிரதமரினால் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இலவச கணனிகள் வழங்கும் திட்டம் பற்றி றைகம் கீழ் பிரிவு தமிழ் வித்தியாலய அதிபர் மனோகரன் கூறும் போது, பிரதமரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான இத்திட்டத்தினால் தோட்டப்புற மாணவர்களும் பயனடைகின்றார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புன்னகை பூக்கச் சொன்னார்.

பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தோம். என்று சும்மா சொல்லலாம். ஆனால் அந்த ஆட்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் ஆட்சி மக்கள் தேவையை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும். அதை இந்த அரசாங்கம் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறது.

ஹொரணை பிரதேச சபையில் தரம் உயர்த்தப்பட்ட தமிழ் பாடசாலை இல்லை. அந்தக் குறைபாட்டையும் நாம் பிரதமரிடம் முன்வைத்திருக்கிறோம். விரைவில் ஹொரணை டிவிசனில் உள்ள ஆறு பாடசாலைகளில் ஒன்றை தரம் உயர்த்தப்பட்ட தமிழ் பாடசாலையாக மாற்றுவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என்ற தகவலை அவர் முன்வைத்தார்.

றைகம் கீழ் பிரிவு பாடசாலையின் ஆசிரியராக பணியாற்றி வரும் பிரதாபன், இந்த வைபவத்தைத் தன்னால் மறக்கவே முடியாது என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

‘இன்றைய நிகழ்வு உண்மையிலேயே நாம் சந்தோசப்படக்கூடிய நிகழ்வுதான். ஏனென்றால் இன்று உலகமே கணனி யுகத்திற்கு மாறிக் கொண்டு போகும் நேரத்தில் நாம் கணனி பற்றி எந்தச் சிந்தனையுமின்றி இருந்து வந்திருக்கிறோம்.

தோட்டப்புற பாடசாலைகளை பொருத்த வரையில் இந்த வசதிகள் இவ்வளவு காலமும் கிடைக்கவில்லை.

ஆனால் சமீப காலமாக பிரதமர் களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனேக பாடசாலைகளுக்குச் சென்று இந்தக் கம்யூட்டர்களை வழங்கி கணனி யுகத்திற்கு எங்களின் பிள்ளைகளையும் அழைத்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இன்றைய தேவைக்கு அமைய இந்த அரசாங்கம் செய்துவரும் பணிகள் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளன. இந்தப் பாடசாலையில் பொறுத்தவரையில் பெரும்பாலானா கட்டடங்கள், இந்த அரசாங்கத்தால் அமைக்கப்பட்டவை தான்.

ஆசிரியர்கள் தங்கும் விடுதியும் நமது பிரதமரின் முயற்சியால்தான் அமைக்கப்பட்டது. இதுதவிர பாடசாலைக்கான கொங்கிaட் பாதைகள், அதிகளவிலான ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்தால்தான் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே அரசாங்கம் நமக்கு செய்துவரும் பணிகளுக்காக நாம் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு தமிழ் மக்களாகிய நாம் இந்த அரசாங்கத்திற்கு நன்றிக்கடன் பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்’ என்றார் பிரதாபன்.

‘எனக்கு தெரிந்தது இப்பிரதேச தோட்டப் பாடசாலைகளுக்கு கணனிகள் வழங்கப்படுவது. இதுவே முதல் தடவை. நமது பிள் ளைகளின் கல்விக்காக அரசாங்கம் ஆற்றி வரும் பணிகள் திரு ப்திகரமாக உள்ளன. நமது பிள்ளைகள் தான் நமது எதிர் காலமே. இளஞ் சந்ததியினரின் வளர் ச்சிக்கான அடிப்படை தேவைகளை அரசு இனம் கண்டு பூர்த்தி செய்து வருகிறது- எனவே நமக்கான பணிகளை செய்துவரும் அரசாங்கத்தை நாம் ஆதரிப்பது கட்டாயத் தேவையாகும் என்கிறார் றைகம் தோட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்.

மலையகத்தின் கல்வி வளர்ச்சி நகர் புறத்தோடு ஒப்பிடும் போது மந்த கதியில் தான் செல்கிறது. இதற்காக காரணமாக கல்விக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையை சுட்டலாம். தோட்டங்களை பொறுத்தவரை பொது வாசிகசாலைகள் இல்லை. குறிப்பாக பாடசாலைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ள விஞ்ஞான கூடம் போன்ற வசதிகள் பெரும்பாலும் கிடையாது. இதுபற்றி யாருமே கவலைப்படுவதில்லை.

கோயில் கட்டுவதில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சிக்காக யாரும் காட்டுவதாகவும் தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் அனைவரும் கோயில் திருவிழாவிற்காகவும் களியாட்டத்திற்காகவுமே நிறைய பணம் செலவழிக்கிறார்கள். மாதந்தோரும் பத்தாம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நாள். அன்று பல தோட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் ஆலய நிர்மாணப் பணி, கும்பாபிஷேகம், திருவிழா என்ற பெயர்களில் டிக்கெட், புத்தகங்களோடு வீட்டு வாசலில் நிற்கிறார்கள். எந்த தோட்டத்திலாவது வாசிகசாலை கட்ட, விஞ்ஞான கூடம் அமைக்க பணம் வசூலித்ததாக வரலாறு உண்டா? அரசியல்வாதிகளிடம் நமது தோட்ட தலைவர்களும், இளைஞர் அமைப்புகளும் என்ன கேட்கிறார்கள்? ஒலிபெருக்கி, கோயில்கட்ட பணம், பேண்ட் வாத்தியங்கள், கிரிக்கெட் மட்டை பந்து என்று இவர்களின் தேவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே முடங்கிவிடுகிறது. மலையக மக்கள் இன்றும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சமூகமாகத்தான் இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் நமது பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க. இவரின் பதவிக் காலத்தில் ஹொரணை பிரதேசம் நன்கு அபிவிருத்தி கண்டிருக்கிறது. வீதி, அபிவிருத்தி – வீட்டுத்திட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதோடு களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனேக ஆலயங்கள் இவரின் நிதி உதவியால் நிமிர்ந்து நிற்பது மறுப்பதற்கில்லை. இவரின் சேவை அதிகம் ஆலயங்களோடுதான் என்று நீங்கள் கேட்பது எமக்குப் புரிகிறது. இந்த சமூகத்திற்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் கனவு. ஆனால் நம்மவர்கள் கேட்பதை தானே அவரால் தரமுடியும்! கணனிகள் இவ்வளவு காலம் கடந்தா நமது பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகாரர்கள் பிரதமரின் கணனி வழங்கும் திட்டத்தை விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் கேட்பதை தானே அவரால் தரமுடியும்? இந்தக் கணனிகள் கூட நம்மவர்கள் கேட்டதாக தெரியவில்லை. பிரதமராகவே விரும்பி வழங்கியிருக்கிறார். இனிவரும் சந்ததியாவது ஆக்கபூர்வமான விசயங்களுக்கு அரசியல்வாதிகளை அணுகி, நல்லப் பயன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஹொரணை வாழ் தமிழ் மக்களுக்கு பிரதமர் ஒரு வரப்பிரசாதம். இனியாவது இங்குள்ளவர்கள் பிரதமரிடம் தமது சமூக அபிவிருத்தி தொடர்பான உதவிகளைக் கேட்க வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.