புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
காதோடு காதாக...
 இன விரிசலை வளர்க்காது செயற்பட முன்வர வேண்டும்

கிழக்கில் இந்துக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைச் சிலர் மதம் மாற்றி வருவதாக யோகேஸ்வரன் எம்.பி குற்றஞ் சாட்டியிருக்கிறார். அந்த மக்களின் வறுமையைப் போக்குவதற்கு ஏதாவது வழியைக் கண்டு பிடிக்காது, மதம் மாற்றுபவர்களைக் குறை கூறிப் பலனில்லை. பத்து வருடகால எம்.பி வாழ்க்கையில் ஐயா பலவற்றைச் செய்திருக்கலாம். இவ்வாறு பத்திரிகை அறிக்கைகளை மட்டுமே விடுவதால் பலனில்லை. மதம் மாறுபவனும், மதம் மாற்றுபவனும் முட்டாள்கள் என்பதை மக்களுக்கு ஐயா புரிய வைக்க வேண்டும். இன விரிசலை வளர்க்காது ஐயா புத்திசாலித்தனமாகச் செயற்பட முன்வர வேண்டும்.

 தங்களது சொந்தக் காணிகளை பெற தவமிருக்க வேண்டிய நிலை

வடக்கில் தங்களது சொந்தக் காணிகளைப் பெற அந்த மக்கள் தவமிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. தாம் பிறந்து வளர்ந்த வீடுகளைச் சென்று பார்வையிட இராணுவத்தினரிடம் அனுமதி பெற வேண்டியதாக உள்ளதாகக் கவலைப்படுகின்றனர். எல்லாம் யுத்தம் செய்த கோரம். யுத்தம் முடிந்த பின்னரும் மஹிந்த ஐயா தடை போட்டு வைத்திருந்தார். அதனை தேர்தலில் அம்மக்கள் இல்லாமற் செய்த பின்னரும் தாமதம் காணப்படுவதால் அம்மக்களின் கவலை இரட்டிப்பாக உள்ளது. நல்லாட்சி அரசு கவனமெடுத்து வருகிறது எனினும் மக்களது எதிர்பார்ப்பு அவசரமாக உள்ளது போலத் தெரிகிறது.

 புதிதாக குரல் கொடுப்போராவது ஏதாவது முயற்சி எடுக்கலா

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பாக இப்போது எவரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. ஆயிரம் ரூபாய் பெற்றுத் தருவோம் எனக் கூறியவர்கள்கூட 770 ரூபாய்தான் வழங்க முடியும் என அறிவிப்பு வந்துள்ளபோதிலும் அமைதியாக உள்ளனர்.

இதன் பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளதாக மத்திய மாகாண உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எது எப்படியோ அவர்களுக்காக இப்போது நாம்தான் உண்மையாகக் குரல் கொடுத்து வருகிறோம் எனப் புதிதாகக் கூறுபவர்களாவது ஏதாவது முயற்சி எடுக்கலாம். குறைந்தது கோதுமை மாவின் விலையை மலையகத்தில் மானிய விலையில் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.

 செலவைப் பற்றி கவலைப்படாது நல்ல பட்டமாக வழங்குங்கள்

பட்டங்கள் மீண்டும் பறக்க ஆரம்பித்திருக்கின்றன. இவை கோல்பேஸில் நூலில் பறக்கும் பட்டங்கள் அல்ல. பணம் கொடுத்து வழங்கப்படும் கௌரவப் பட்டங்கள். ஏப்பிரல் முதல் வாரத்தில் தலைநகரில் மாபெரும் பட்டம் வழங்கும் விழா ஒன்று நடைபெற தடல்புடலாக ஏற்பாடாகி வருகிறது. உங்களுக்கு என்ன பட்டம் வேண்டும்? எனத் தொலைபேசியில் ஏற்பாட்டாளர்கள் கேட்டு அதற்குரிய வசூல் பணத்தையும் தெரிவித்து வருகிறார்களாம். செலவைப் பற்றிக் கவலை வேண்டாம் நல்ல பட்டமாக வழங்க ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்பவர்களும் உள்ளனராம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.