புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்

ஹீமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ள விரும்பினால் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து தங்கள் நிலைப்பாட்டினை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்து, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் அரசாங்கக்கட்சியுடனும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் மற்ற கட்சிகளுடன் பேசுவது அவசியமென்று ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்ற போதிலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுவதற்கு பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்திருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழம் தனிநாட்டை கேட்கவில்லை என்று திட்டவட்டமாக ஊடகவியலாளர்களுக்கு அறிவித்திருக்கும் சம்பந்தன், இந்திய மாநில அரசுகளுக்கு இருக்கும் அதே அளவிலான அதிகாரத்தை வடக்கு, கிழக்கு பகுதிக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். இத்தகைய கருத்தை சம்பந்தன் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அறிவித்திருந்தால் அரசியல் கட்சிகளும் இந்த யோசனையை சிந்தித்து பரிசீலித்திருக்க முடியும் ஆனால், அதற்கு வாய்ப்பளிக்காமல் திரு. சம்பந்தன் ஒரு பொருத்தமற்ற இடத்திற்கு சென்று இவ்விதம் கருத்துக்களை அள்ளி வீசுவதில் இருந்து அவருக்கு இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லை என்பதையும் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை பல்லாண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென்பதே அவரது நோக்கம் என்றும் நாம் கருதுவதை விட வேறு எவ்விதம் சிந்திக்க முடியும்.

ஈழம் தனிநாடு கோரிக்கைக்குப் பதில் இந்தியாவில் மாநில அரசாங்கங்களுக்கு இருப்பது போன்ற அதிகாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டால் நாம் திருப்தி அடைவோம் என்று திரு.சம்பந்தன் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரத்தை இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாண ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டால் அது சிறுபான்மை தமிழ் மக்களின் சகல உரிமைகளையும் பறித்து விடக்கூடிய தீமையை விளைவிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய அரசாங்கம் தமிழ் மக்களின் சுதந்திரத்தை பறித்து விடக்கூடிய மறைமுக அதிகாரத்தைப் பெற்று விடும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தனது பிடிவாதக் குணத்தை தளர்த்தி எவ்வித முன்நிபந்தனையும் விதிக்காமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து தனது நிலைப்பாட்டை அறிவித்தால் அதனை நாம் ஆர்வத்துடன் செவிமடுத்து அது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களோ, அல்லது அவ்வித அதிகாரங்கள் குறித்து நாம் கலந்துரையாட முடியும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எதற்கெடுத்தாலும் இந்தியா அல்லது மேற்கு நாடுகளுக்குச் சென்று அரசாங்கத்துக்கு எதிரான குறைபாடுகளை வெளியிட்டு அனுதாபம் பெறுவதற்கு எடுக்கும் முயற்சிகள் அப்பா வீட்டில் இருக்கும் போது வெளியில் உள்ள சித்தப்பாவிடம் முறையிடுவதைப் போன்ற ஒரு தவறான செயல் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் வடமாகாண சபையை துரும்புச்சீட்டாக பயன்படுத்துகிறது. இதற்கமையவே வடமாகாண சபையின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இனிமேலாவது இங்குள்ள பிரச்சினைகளை அரசாங்கத்துடன் கதைத்துத் தீர்த்துக் கொள்ளாமல் சர்வதேசத்துடன் முறையிட்டு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது ஒரு தவறான செயல். கலந்துரையாடுவதற்கு அரசாங்கத் தலைவர்கள் தயாராக இருக்கும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வந்து பேச வேண்டும் என்றும் திரு.நிமல் சிறிபால டி சில்வா வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையின் வரலாற்றில் இந்நாட்டை ஆட்சி புரிந்த சகல அரசாங்கங்களும் செய்த தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி சகல இன மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தி எங்கள் தாய்த்திருநாட்டை அபிவிருத்திப் பாதையில் அதிஉன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரே தலைவராக எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார் என்று இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் அபகரித்திருக்கிறது என்று இத்தடவை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில் தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்று வரம் நில ஆக்கிரமிப்பு குறித்த வரைவுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் மறைமுகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழ் மக்களின் துயரத்தை துடைக்கக்கூடிய நல்லெண்ணத்துடன் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க சேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை மார்ச் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உறுதி அளித்து இருக்கிறார்.

சமீபகாலமாக வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கம் கையளிக்கத் தவறி வருகிறதென்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு இதன் மூலம் அமைச்சர் சுமூகத் தீர்வை எடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதுவரையில் தரைப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 18 இலட்சத்து 587 ஏக்கர் நிலமும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 808 ஏக்கர் நிலமும் விமானப் படையினரால் பயன்படுத்தப்பட்ட 716 ஏக்கர் நிலமும் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டிருப்பதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம் அதன் அடுத்த நடவடிக்கையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டுப் பற்றுடன் எங்கள் தாய்த்திரு நாட்டுக்கு துரோகம் இழைக்கக்கூடிய வகையில் சர்வதேச அரங்கில் இலங்கை பற்றிய பொய்ப் பிரசாரங்களைச் செய்வதை கைவிட்டு இந்நாட்டு மக்களின் பாராட்டைப் பெறுவது அவசியமாகும்.

எஸ். தில்லைநாதன்... -

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.