புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
ரவி ரத்னவேல்

ரவி ரத்னவேல்

விக்னேஸ்வரனுக்கு, அவர் விரும்பாத விடயங்களிலேயே வெற்றி கிடைத்து வருகிறது

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

விக்னேஸ்வரன் குடும்பத்திற்கும், நாணயக்கார குடும்பத்திற்கும் இடையே உறவு ஏற்படுவதற்கு முன்னரும், நீங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களா?

ஆம், சட்டக்கல்லூரியில் இருந்தே நாம் நல்ல நண்பர்கள். 1958 ஆம் ஆண்டிலேயே எமது முதல் சந்திப்பு இடம் பெற்றது. அதிலிருந்து எமக்கிடையே இருந்த நட்பும் பிணைப்பும் மிக நெருக்கமாகவே இருந்து வந்தது. சுருங்கச் சொன்னால் அவர் எனக்கு ஒரு சகோதரரைப் போலவே இருந்துவந்தார். நான் அவரது வீட்டுக்குப் போய்வருவேன், அவரும் எங்கள் வீட்டுக்கு வந்துபோவார். அவ்வாறு அவர் எமது வீட்டுக்கு வர ஆரம்பத்திலிருந்தே எனது அப்பாவுடனும் மிக நெருங்கிப் பழகினார்.

எனது அப்பாவுடன் கதைத்துகக்கொண்டிருக்கும்போது, எங்கள் தேயிலை பெக்டரியில் எவ்வளவு தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது? ஒரு இராத்தல் தேயிலை தயாரிக்க எவ்வளவு செலவாகின்றது என்று விபரங்களையெல்லாம் கேட்டறிவார். அவ்வாறான நேரங்களில் என் அப்பா என்னை காட்டி, ‘இவன் இங்கு இருந்ததுக்கென்னா இதைப் பத்தியெல்லாம் எதையுமே கேட்கமாட்டான், இவனுக்குப் பதிலா நீயே எனக்கு மகனா பிறந்திருக்களாம்’ என்பார். அந்த அளவிற்கு நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.

விக்னேஸ்வரனின் குடும்பப் பின்னணி எவ்வாறானது?

தகப்பனார் அரச ஊழியராக இருந்தார். தற்போது அவர் இல்லை, காலமாகிவிட்டார், அவரது தாயாரும் காலமாகிவிட்டார். அவருக்கு இரண்டு சகோதரிகள் அதில் ஒரு தங்கை காலமாகிவிட்டார். மற்றவர் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்.

அவரது வீட்டுக்கு போய்வரும்போது அவரது தங்கைமார் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்படவில்லையா?

ஏன் இல்லாமல், உண்மையில் என் மனதில் அவ்வாறான ஓர் எண்ணம் ஏற்பட்டதுதான். ஆனால் அந்த எண்ணம் செயல்வடிவம் பெறாமலே முடங்கிப்போய்விட்டது. காரணம் அதே சமயத்தில்தான் என் மனைவியை நான் சட்டக்கல்லூரியில் சந்தித்தேன். அதிலிருந்து நாங்கள் மூவரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். பின்னர் நானும் என் காதலியை திருமணம் செய்துகொண்டேன். விக்னேஸ்வரனும் அவரது இனத்தைச்சேர்ந்த, சொந்தக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். எமது திருமணங்களின் பின்னர் எனது மனைவியும், அவரது மனைவியும் மிக நெருங்கிய நண்பிகளாகிவிட்டார்கள். இந்தப் பின்னணியிலேயே எமக்கு குழந்தைகள் பிறந்தன.

ஆக, அந்தக் குழந்தைகள் நண்பர்களாகி சொந்தக்காரர்களாக்கி விட்டார்கள், அப்படியா?

எமது குழந்தைகளும் மிக நெருங்கிய நண்பர்களாகவே வளர்ந்து வந்தார்கள். இரு குடும்பங்களும் நெருங்கிப் பழகியதால். எமது இரு குடும்பங்களின் குழந்தைகளும் நெருக்கிப்பழகிவரும் சிறந்த நண்பர்களாகவே வளர்ந்தார்கள்.

உங்கள் மகள் அவரது மகனுடன் காதல் கொண்டுள்ளார் என்பதை நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?

ஒரு நாள் என் மகள் என்னிடம் வந்து ‘அப்பா எனக்கு தமிழ் கற்றுக்க ஆசையா இருக்கு’ என்றாள். நானும் அப்படியா மகள் அது நல்ல விஷயமாச்சே என்றேன். அதையடுத்து அவளுக்கு தமிழ் கற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து, வழிகாட்டினேன். அத்தோடு நின்றுவிடாது மகளின் முயற்சியினை வெகுவாக பாராட்டினேன். ஆனால் அதேசமயம், ‘என்னடா புள்ள திடீர்னு தமிழ்ப் படிக்கனும்குதே’ என்று யோசித்துப் பார்த்தேன். காலப்போக்கில் எனது மகளுக்கும் விக்னேஸ்வரனின் மகனுக்குமிடையே காதல் மலர்ந்திருக்கின்ற விடயம் தெரிய வந்தது. எனது மனைவி என்னிடம் சொன்னார். இவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக.

அதைக் கேட்டதும் நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன் எமது குடும்பங்களுக்கிடையே இருந்த தொடர்பின்படி அப்படியான தொடர்பு ஏற்படுவது என்பது ஆச்சரியப்படக்கூடியதொரு விடயமாக இருக்கவில்லை. ஆக அவர்களின் விருப்பத்திற்கு அமைய அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தோம்.

நீங்கள் புரட்சிகர கொள்கையைக் கொண்டவர் என்பதால் இதற்கு சம்மதித்திருந்தாலும், உங்கள் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்கள் உங்கள் மகளை வேறு ஓர் இனத்தவருக்கு திருமணம் செய்துக் கொடுப்பதற்கு இணங்கினார்களா?

என் மனைவியும் என்னைப் போன்றவர் ஆகையால் இவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எங்கள் உறவினர்கள் சாதி, இனம் ஆகியவற்றை பற்றி பெரிதாகப் பேசுபவர்கள். அப்படி இருந்தும் இறுதியில் அவர்களும் எமது தீர்மானத்தை ஏற்று இதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

திருமணத்தை எவ்வாறு நடத்தி வைத்தீர்கள்? சிங்கள முறைப்படியா? அல்லது தமிழ் முறைப்படியா?

இத் திருமணத்தை இரண்டு கட்டங்களாகவே நடத்தி வைத்தோம். எமது சிங்கள முறைப்படியும், அவர்களது தமிழ் முறைப்படியும், அவர்களது தமிழ் முறைப்படியும் திருமணம் நடந்தேறியது. இரண்டு திருமண விழாக்களை எடுத்தோம். ஒன்று கோயிலில் மற்றது ஹோட்டலில். அதன் பின் அவர்களுக்கும் குழந்தை பிறந்தது, எமது பேத்திக்கு இன்னும் மூன்று வயதே ஆகின்றது. ஆனாலும் அவள் மும்மொழிகளையும் தெரிந்து வைத்திருக்கிறார் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிக நன்றாக கதைக்கின்றாள். நான் எனது அமைச்சர் பதவியினை ஏற்கும் போது, அவரை ஓர் அடையாளமாக அவ் விழாவிற்கு அழைத்துவந்தேன். இந்த உறவு என்னையும் விக்னேஸ்வரனையும் சொந்தகாரர்களாக்கியது. இருந்தும் துரதிஷ்டவசமாக ..... மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, எமது பிள்ளைகளின் திருமணத்திற்கு முன்பே காலமாகிவிட்டார்.

சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் வடக்கின் பிரச்சினைகள் பற்றிய விக்னேஸ்வரன் அவர்களது கருத்து எவ்வாறானதாக இருந்தது?

வடக்கின் பிரச்சினைகள் பற்றிய எமது கருத்துக்களில் பெரும் வேறுபாடுகள் இருக்கவில்லை. அக் காலத்தில் நான் சட்டக்கல்லூரி சங்கத்தின் தலைவராக இருந்தேன். எனது பதவிக்காலம் முடியும்போது அந்த இடத்திற்கு ஒரு தமிழர் வர வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. அச் சமயம் சிங்கள மாணவர்களே அதிகமாக அப் பதவிக்கு தெரிவாகி வந்தார்கள். ஆகையால் நான் விக்னேஸ்வரனின் பெயரை முன்மொழிந்தேன். அப்போதும் அவருக்கு எதிராக ஒரு தமிழரே போட்டியிட்டார். இருந்தும் விக்னேஸ்வரனுக்கே வெற்றி கிடைத்தது. விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும். ‘விஸ்வா நீங்கள் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடப்போவது உண்மையா?’ என்றுக் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், “ஆமாம் உண்மைதான், நான் விரும்பாத தேர்தலுக்கு அன்று நீ என்னை இழுத்துச் சென்றாய், இன்றும் நான் விரும்பாத தேர்தலுக்கு இவர்கள் என்னை இழுத்துச் செல்கிறார்கள், அதற்கு நான் என்ன செய்யவேனென்று தேர்தலின் பின், ‘எப்போதுமே நீ விரும்பாத விடயங்களிலேயே உனக்கு வெற்றி கிடைக்கின்றதே என்று நான் விஸ்வாவிடம் சொன்னேன்.

அவர் சட்டத்துறையில் நிபுணர், ஆயினும் அரசியலுக்கு புதியவர், உங்களுக்கு மிகவும் நெருங்கியவர் என்ற வகையில் தேர்தலின்போது உங்கள் ஆலோசனைகளை நல்கினாரா?

இல்லை. காரணம் முன்கூட்டியே நான் அவரிடம் சொன்னேன், ‘இந்தத் தேர்தலில் நாம் இருவரும் இரு பக்கங்களில் இருக்கிறோம், நான் உனக்கு எதிரான பக்கத்திலும், நீ எனக்கு எதிரான பக்கத்திலும் இருக்கின்றோம். ஆகையால் அதைபுரிந்து கொண்டே நாம் செயற்படவேண்டும் என்று. அப்படிக் கூறிக்கொள்ளக்கூடிய அளவு சிறந்த புரிந்துணர்வு எமக்கிடையே இருக்கின்றது.

விக்னேஸ்வரன் அரசியல்யாப்பு மற்றும் சட்டம் ஆகியவற்றிலும் நுழைந்து தனி நாட்டுக்கான பாதையினை அமைத்துவிடுவார் என்று’ தெற்கில் சிலர் கூறுகின்றார்களே, அப்படி எதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா?

அதைப்பற்றியெல்லாம் என்னால் எதையும் கூற முடியாது, அது அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் அவர்கள் இயன்ற அளவு அதிகாரங்களை பெற்றுக் கொள்ள முயற்சி எடுப்பார்கள் என்பதே எனது ஊகிப்பாக இருக்கின்றது.

பயங்கரவாதத்திற்கு எதிரான அதே சமயம் நீங்களும் நன்கு அறிந்த, விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைபொம்மையாகி தனி ஈழத்தை அமைக்க முயற்சிப்பார் என்று நீங்கள நினைக்கின்aர்களா? அதைப் பற்றியும் என்னால் எதையும் கூற முடியாது. என்ன நடக்கின்றது என்பதை எதிர்காலத்தில்தான் பார்க்கவேண்டும். அவர் ரி. என். ஏ.க்குள் சிக்கிக்கொள்வாரா, அல்லது விக்னேஸ்வரனின் கொள்கைளுக்கு ஏற்ப ரீ. என். ஏ. இல் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கே கிடைத்த வெற்றி எதிர்காலத்தில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும்?

அதை பற்றியும் எதையும் கூறுவது கடினம். எனது எதிர்பார்ப்பும், பிரார்த்தனையும் மாகாண சபை அதிகாரங்களும், மத்திய அரசின் மக்கள் இறைமையும் ஒன்றோடு ஒன்று இசைந்து போவதன் மூலம் இந்த இரு தரப்பினரும் சுமூகமாக இப் பயணத்தை மேற்கொள்ள முடியும், அப்படி மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது அவா,

ஒருபக்கம் அரசாங்கத்தின் தீவிரவாதிகள் மறுபக்கம் விக்னேஸ்வரன் இவை இரண்டுக்குமிடையே அகப்பட்டுக்கொண்ட நீங்கள் செய்வதறியது தவித்தீர்களா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, மறு பக்கமிருப்பது விக்னேஸ்வரன் அல்ல, தமிழ் தீவிரவாதிகள், சிங்கள தீவிரவாதிகள் தான் இந்த தமிழ் தீவிரவாதிகளின் உண்மையான நண்பர்கள். அதாவது இவர்கள் முன்கூட்டியே இப்படிச் செய்வோம் என்று கதைத்துக்கொண்ட நண்பர்கள் அல்லர். மாறாக செயல் மூலம், இவர்களது நட்பையும், தேவைகளையும் போஷித்துக்கொள்பவர்கள். தெற்கே ஒரு கோஷ்டி வட மாகாண சபைத்தேர்தலுக்கு எதிராக பெரும் தாக்கத்தினை, ஏற்படுத்தினார்கள் அல்லவா? ஆனால் அவர்களால் மக்களைத் துண்டிவிட முடியாது போய்விட்டது. காரணம் சிங்கள பெளத்த மக்களுக்குத் தெரியும் அவர்களின் உண்மையான தலைவன் யார் என்று. அது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களே என்பதும் அவர்களுக்குத் தெரியும். மஹிந்த ராஜபக்ஷவை விட, அவரை மிஞ்சிய சிங்கள பெளத்தர் எவரும் இங்கே இல்லை. ஆகையால், அவர் ஏதேனும் ஒரு முடிவை எடுத்தால் அது சிங்கள பெளத்த மக்களின் நன்மையை கருதி எடுத்த முடிவாகும் என்பதை அந்த மக்கள் அறிவார்கள். ஆகையால் சிங்கள பெளத்தர்களை பற்றிப் பெரிதாகக் கூச்சலிடும் மற்றவர்களது பேச்சு வெறும் வெட்டிப்பேச்சே என்பதை சிங்கள பெளத்த மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

13ஐக் கொடுக்கவில்லையென்றால் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டிவரும் என விக்னேஸ்வரன் தெற்கை எச்சரித்திருந்தார். அந்த எச்சரிக்கைபோலவே மீண்டும் ஆயுதம் ஏந்தினால் என்ன நடக்கும்?

ஆயுதம் ஏந்தினால் எமது பதில் பிரபாகரனுக்கு கொடுத்த பதிலேதான். ஆயுதம் ஏந்தும் எவராக இருந்தாலும் அவருக்கு கிடைக்கும் ஒரேபதில் அதுவே.


அரசுடன் ஒத்துழைக்கவே விரும்புகிறோம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

 

* வடக்கே புதிதாக உருவாகும் மாகாணசபையின் முதலாவது முதலமைச்சர் என்ற வகையில் நீங்கள் அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக உள்Zர்களா?

உண்மையில் நாம் அரசுடன் ஒத்துழைப்பாக செயற்படுவதன் மூலம் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவே விரும்புகின்றோம். அம் மக்களும் அவர்களது பிரச்சினைகளை நாம் தீர்த்து வைப்போம் என்றே எதிர்பார்க்கின்றார்கள். அவ் எதிர்பார்ப்பினாலேயே எமக்கு இந்தளவு பெரும் ஆணையை வழங்கி இருக்கின்றார்கள். ஆகையால் இப் பயணத்தை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு கட்டாயம் அரசின் ஒத்துழைப்பு இருந்தே ஆக வேண்டும்.

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உருவாக்கப்படும் வடமாகாணசபை நாட்டைப் பிரிக்க முயற்சிக்கும் என்ற பீதி பெரும்பாலானவர்களிடம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

நாட்டை பிரிக்காது, ஒரே நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் முன்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது கருத்து. இது நாட்டை பிரிக்கும் முயற்சியாக இருந்திருந்தால் இதன் முதன்மை அமைச்சராக இருங்கள் என்று இவர்கள் என்னை அழைத்திருக்கவும் மாட்டார்கள். அவ்வாறு இருந்திருந்தால், நானும் அதை ஏற்றிருக்க மாட்டேன் என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நாட்டைப் பிரிக்காது ஒரே நாட்டுக்குள் கூட்டாட்சி முறைக்குள் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றே நாம் நம்புகின்றோம்.

* ‘கூட்டாட்சி’ என்ற உடன் சிலர் நாடு பிரியப் போகின்றது என்றே கருதுகின்றார்கள்?

அவ்வாறு சந்தேகப்படுவோருக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் வாருங்கள் என்றே கூற விரும்புகிறேன். அப் பேச்சுவார்த்தைகளின்போது, அது நாட்டைப் பிரிக்கப் போகின்றதா? இல்லையா என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். சில பிக்குமார்களும் நாம் நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றோம் என்று சொல்லி இருந்தார்கள். நாங்கள் விரும்புவது பேச்சுவார்தையை. நான் எவருடன் வேண்டுமானாலும் பேசத் தயார்.

* வடக்கே உடன் தீர்வுகாண வேண்டிய பிரச்சினைகள் எவை என இனங்கண்டுள்Zர்களா?

இதுதான் என்று ஒரு பிரச்சினையைக் குறிப்பிட்டுக் கூற முடியாது. வடபகுதி மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக அவர்களது அன்றாட வாழ்க்கையினை முன்னெடுப்பதே அவர்களுககுப் பெரும் பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியதும் அவர்களது வாழ்க்கையினை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டியதும் அவசியம்.

அடுத்ததாகத் தமிழர்களும் இந் நாட்டு குடிமக்களாக இருந்த போதிலும் சிங்களவர்களுக்குக் கிடைக்கும் சம அந்தஸ்து தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் சமமானவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தமிழர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கத் தேவை இல்லை என்று வாய்ப்பேச்சுக்காக சொன்னாலும் உண்மை நிலை இதுவாகவே இருக்கின்றது. ஆகையால் சிங்களம், தமிழ் என்ற வேறுபாடுகள் இல்லாது அனைவருக்கும் சம அந்தஸ்து கிடைக்கக் கூடிய நிலையினை இங்கே உருவாக்க வேண்டும். அதேபோல், யுத்தத்தின் பின்னர் உருவெடுத்துள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். தற்போது வடக்கே பயங்கரவாதம் இல்லாததால் இராணுவத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

* இராணுவத்தை அப்புறப்படுத்துவதை தென்பகுதி மக்கள் கடுமையாக எதிர்கின்றார்களே?

அதாவது, பயங்கரவாதத்தை அழிப்பதற்காகவே இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. தற்போது அரசாங்கமே எல்.ரி.ரி.ஈ.யை அழித்துவிட்டோம் என்று கூறுகின்றது. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அப்படியானால் இன்னும் அங்கே பெருந்தொகை இராணுவத்தை எதற்காக வைத்திருக்க வேண்டும்? மேலும் தமிழர்கள் இராணுவத்தை கண்டு அஞ்சுகிறார்கள்.

* ஆனால் இராணுவம் தமிழ் மக்களுக்கு உதவி செய்கின்றது என்பதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் கண்காணிப்புக் குழுவே கூறி இருக்கின்றதே?

நான் சொல்வதுதான் உண்மை, நீங்கள் சொல்வதை நான் காணவும் இல்லை, கேட்கவும் இல்லை. யார் அப்படி சொல்லி இருக்கிறார்கள்?

* இருந்தும், இராணுவத்தை வெளியேற்றினால் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக்கூடிய அபாயம் இருக்கிறது அல்லவா?

அதாவது இராணுவத்தை வெளியேற்றிவிட்டுப் பதிலுக்கு பொலிஸாரை அங்கே செயற்பட விடலாம். ஏனென்றால் பொலிஸிடமும் உளவுத்துறை, புலனாய்வுத் துறை ஆகியனவும் இருக்கின்றதே, ஜனநாயக சமூகத்தின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க பொலிஸை ஈடுபடுத்துவதே வழக்கம். வடக்கே இன்னு 1 1/2 லட்சம் இராணுவம் இருந்து வருவதால் அங்கே அப்பாவித் தமிழ் மக்களின் பெருமளவு காணிகள் இன்னும் இராணுவத்தின் கீழேயே இருந்து வருகின்றன.

* ஆனால் பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, இராணுவ நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கடந்த காலங்களில் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட்டதே.

வடக்கே ஓர் இடத்தில் இருந்து வந்த முகாமை அகற்றி வேறு ஓர் இடத்தில் மீண்டும் இருந்ததைவிட விஸ்தீரணமாக நலுவுவதே நடந்தேறி வருகின்றது. அதேபோல் அங்கே பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவம் அவ் உற்பத்திகளை அக் காணிகளின் உரிமையாளர்களுக்கே விற்று வருகின்றது. நாம் என்ன கூறுகிறோம் என்றால், அக் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கே திருப்பிக் கொடுங்கள், அவர்களே அந்த விவசாயத்தை மேற்கொள்ளட்டும்.

இப்போதும் வடக்கே எல்லா இடங்களிலும் இராணும் இருந்து வருகின்றது. தேர்தல் நேரத்திலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், வாக்களிக்கச் செல்வதை தடுத்த சம்பவங்கள் இடம்பெறவே செய்தன.

* சிறு சம்பவங்கள் சில இடம்பெற்றாலும் வடமாகாண தேர்தல் சுதந்திரமாக நடைபெற்றதே?

பெரும்பாலானோருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தமை உண்மை தான். அசம்பாவிதங்கள் நிகழ்ந்த உடன் வெளி நாட்டுக் கண்காணிப்பாளர்களிடம் புகார் செய்யக்கூடியதாக இருந்ததுடன் அவர்களது தலையீட்டின் மூலம் சில பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடிந்தது.

அதேபோன்று ‘இங்கே யார் வென்றாலும் நாங்களே தொடர்ந்தும் இருப்போம், ஆகையால் அரசாங்கத்திற்கு வாக்களிங்கள்’ என்று இராணுவம் மக்களை பயமுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றதாக அறிய வந்தது. போலிப் பத்திரிகை ஒன்றும் தேர்தல் தினத்தன்று எமக்கு எதிராக விநியோகிக்கப்பட்டது.

* போலி உதயன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வேலையாகக் கூட இருக்கலாமே?

நாமே, எமக்கெதிராக அவ்வாறான வேலைகளைச் செய்வோமா? போலி உதயன் ஒன்று ஈ.பி.டி.பியின் வேலை அல்லது இராணுவத்தின் வேலை என்பதே எங்கள் கருத்து.

* 13ஆவது சீர்திருத்தம் மூலம் வடக்கின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாதா? 13ஆவது சீர்திருத்தத்தை ஓர் ஆரம்பமாக நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அதில் வரும் அதிகாரங்கள் போதுமானதாக இல்லை.

* ஆனால், இந்தியாவின் மாநில அரசுகளுக்குக் கிடைத் துள்ள அதிகாரங்களுக்குச் சமமான அதிகாரங்கள் எமது மாகாண சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதல்லவா?

இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவை விட மிகக் குறைந்த அதிகாரங்களே இலங்கை மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இங்கே ஒரு கையால் கொடுக்கும் அதிகாரத்தை மறு கையால் எடுத்துக்கொள்ளும் நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதியின் பிரதிநிதி என்று ஆளுனரிடம் பெருமளவு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவ் அதிகாரங்களைக் கொண்டு, மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாக செயற்படும் அதிகாரம் ஆளுனருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் மாகாண சபைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைச் செயற்படவிடாது தடுத்து, மாகாண சபையினை செயலிழக்கச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. குறிப்பாக நிதி சம்பந்தமான விடயங்களில் இதனை செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன.

* வடமாகாண சபை செயற்படுவதற்கு முன்பே அதற்கு போதுமான அதிகாரங்கள் கிடைக்கவில்லை என்று எப்படிக் கூறுவது?

இதை வாசித்துப் பார்க்கும் போது இங்கே இருக்கும் குறைபாடுகள் தெரியவருகின்றனவே. கொடுக்கப்படும் அதிகாரங்களைக் கூட செயற்படுத்தவிடாத நிலை இங்குக் காணப்படுகின்றதே. கிழக்கு மாகாண சபைகூட ஜனாதிபதியைச் சந்தித்து தம்மால் ஒன்றும் செய்ய முடியாதிருப்பதாக கூறி இருக்கின்றதே. கிழக்கே சிங்கள - முஸ்லிம் இனத்தவரைக் கொண்ட மாகாணமாக இருக்கும்போதே இந்த நிலை காணப்படுகின்றது. அங்கே தமிழ் அங்கத்தவர்கள் எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றார்கள். பிள்ளையான் கிழக்கின் முதலமைச்சராக இருந்த போது குறைந்த பட்சம் வைத்தியச்சாலைக்கான ஒரு காவல்காரனைக் கூட தம்மால் நியமிக்க முடியவில்லை என்று கூறி இருந்தாரே. எதைச் செய்ய வேண்டுமானாலும் அதற்கு ஆளுனரின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.

* தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டம் என்று குற்றஞ்சாட்டப்பட்டதே?

எனக்குத் தெரிந்த சிங்களத்தில் இதையொரு பைத்தியக்கார கதை என்றே என்னால் கூற முடியும். அதிகாரப் பகிர்வுக்கான பேச்சு எவ்வாறு நாட்டைப் பிரிக்க காரணமாக அமையும்?

* தெற்கே இருக்கும் மாகாணசபைகளுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

தெற்கே வாழும் மக்கள் ஒரே மொழியை பேசும், ஒரே கட்சியினை சேர்ந்தவர்கள், அவர்களுக்கென தனியான பிரச்சினைகளும் இல்லை. அப்படிப் பார்க்கும் போது அவர்களுக்கு மாகாண அதிகாரங்கள் என்பது கூட தேவையற்றது என்று கூறலாம். எது வேண்டுமானாலும் மத்திய அரசை வைத்தே செய்துகொள்ளலாம். ஆனால் வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் பிரச்சினை வேறு. அம் மாகாணங்களின் மொழி, மக்கள், மதம், கலாசாரம் ஆகியன வேறுபட்டவை. பூமியும் சுற்றுச் சூழலும் கூட வேறுபட்டவை. அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எமது பொறுப்பாகும்.

* பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் பற்றிய உங்கள் கருத்து?

13ஆம் சீர்திருத்தத்தில் இவை தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. ஆகையால் நாம் பொலிஸ் பற்றி பார்ப்போம். தற்போது வடக்கே தமிழ் மக்களின் புகார்கள் சிங்கள மொழியிலேயே பொலிஸார் எழுதிக்கொள்கிறார்கள். அங்கே இருக்கும் பெரும்பான்மையான பொலிஸாருக்குத் தமிழ் மொழி தெரியாது அதனால் தான் வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்கிறோம். அத்தோடு பொலிஸ் என்பது யுத்தம் புரிவதற்கான பொறிமுறை அல்லவே. சட்டத்தையும் ஒழுங்கையும் கட்டிக்காப்பதே அவர்களது கடமை. காணி பற்றிய விடயமும் இவ்வாறானதே. தமது காணி நிலங்களைப் பராமரிக்கும் உரிமை அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அதன் கருத்தாகும். ஆகையால் இந்த அதிகாரங்கள் இல்லாத அதிகாரப் பகிர்வில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை.

* வடக்கே இருந்துவரும் பிரச்சினை இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே வரும் பிரச்சினையாகவே உள்ளது. இம்முறையாவது இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியுமா?

இருதரப்பினருக்குமிடையே இருந்துவரும் அவநம்பிக்கையினை முதலில் இல்லாதொழிக்க வேண்டும். நம்பிக்கையினை கட்டியெழுப்ப வேண்டும். சிங்களவர் தமிழர்கள் மீதும், தமிழர்கள் சிங்களவர்கள் மீதும் கொண்டுள்ள அவநம்பிக்கையினைக் கைவிட வேண்டும். இந்தப் பிரச்சினையினைத் தீர்க்க பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்பும் நடத்தப்பட்டிருக்கின்றன. சந்திரிகாவின் காலத்திலும் இந்த அரசின் காலத்திலும் சர்வ காட்சிகள் கூடி அறிக்கைகளை தயாரித்திருக்கின்றன. அப் பேச்சுவார்த்தைகள் எமது பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய அளவு அண்மித்தும் இருக்கின்றன.

ஆனால் இறுதியில் தமது அரசியல் சுயலாபத்திற்காக அவற்றை செயற்படுத்தாது கைவிடப்பட்ட வரலாறே எமக்கு இருக்கின்றது. எமக்கு நிலையான, உண்மையான சமாதானம் தேவையாக இருப்பின் அரசியல் லாபத்தை கைவிட்டுவிட்டு ஓர் அரசியல் தீர்வை அடைய சேர்ந்து உழைப்போம் என்றே நான் அழைக்கின்றேன். பண்டாரநாயக்க அவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த சமயம் 1926ஆம் ஆண்டிலேயே இப் பிரச்சினைக்கு கூட்டாட்சியே நல்லது என கூறி இருந்தார். ஆனால் அப்போது எமது தமிழ் மக்களே அதனை எதிர்த்திருந்தார்கள்.

* வடக்கின் வசந்தத்தை பற்றிய உங்கள் கருத்து?

வீதிகள், கட்டடங்கள் உருவாகி இருக்கின்றன. ஆனால் பொது மக்களின் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. வீடுகளை நிர்மா ணித்தல், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் ஆகியன அபி விருத்திப் பணிகளுடன் கைகோர்த்து செல்வதுடன் மக்களின் தேவை கருதி முன்னெடுத்தல் வேண்டும். பொருட்களின் விலைவாசிகளைக் குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.

* உங்களது வாழ்க்கையின் ஆதர்ஷ புருஷர் யார்?

மகாத்மா காந்தி அவர்கள் காந்தி அவர்களின் தாக்கம் இந்தியாவிற்கு மாத்திரமன்றி எமக்கும் கிடைத்திருக்கின்றது. உண்மை, அகிம்சை ஆகிய இரண்டு அம்சங்களைக் கொண்டே எனது வாழ்க்கை உருவாகி இருக்கின்றது.

* இதற்கு முன் நீங்கள் ஜனாதிபதி அவர்களை சந்தித்துள்Zர்களா?

ஆமாம், ஜனாதிபதி ஆவதற்கு முன் இரண்டு மூன்று தடவைகள் சந்தித்திருக்கின்றேன் ஆனால் அதற்குப் பின்னர் சந்தித்ததில்லை.

* 1983 முன் யாழ்ப்பாணத்தில் வசித்த சிங்களவர்கள் மீண்டும் அங்கே வந்து குடியேற முடியுமா?

நிச்சயமாக முன்பு அங்கிருந்த அனைவரும் வரவே வேண்டும். 1983க்கு முன் அங்கே வாக்காளர்களாக பதிவாகியிருந்த சிங்களவர்கள் மீண்டும் அங்கு வருவதற்கு எந்தத் தடையுமில்லை. அவர்கள் எமது மக்கள். அவர்கள் அங்கே இருக்க வேண்டியவர்கள். ஆனால் சமீப காலமாக பலாத்காரமாக அங்கே குடியேற்றியவர்களைப் பற்றியே நமக்கு சிக்கல் இருக்கின்றது.

* பிரபாகரன் ஒரு வீரன் என்று நீங்கள் கூறினீர்களா?

பிரபாகரன் உயிரோடு இருக்கையில் அரசாங்கம் 13 பிளஸ், பதிமூன்றைவிட அதிகமாக தரத் தயார் என்று சொன்னது, ஆனால் தற்போது பிரபாகரன் இல்லாதபோது பதிமூன்றிற்கு குறைவாகத் தருகிறோம், பதிமூன்று மைனஸ், அல்லது பதிமூன்றையே இல்லாதொழிப்போம் என்று கூறுவதன் மூலம் அப்படி கூறுபவர்கள் பிரபாகரனை ஒரு வீரனாக ஏற்றுக்கொள்கிறார்களா என்றே அன்று நான் கேட்டேன்.

இப்போது கெப்பட்டிபொலவை ஒரு வீரனாக ஏற்றுக் கொண்டாலும் வெள்ளையர் காலத்தில் அவரை ஒரு கொலைகார தேசத் துரோகி என்று தீர்மானித்து, தலையைத் துண்டித்ததுடன் நின்றுவிடாது அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.