புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
வகவம் கவிஞர்களின் ஒன்றுகூடல்

வகவம் கவிஞர்களின் ஒன்றுகூடல்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வலம்புரி வட்டம் கவிஞர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு கொழும்பு முஸ்லிம் நூலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

வகவம் ஸ்தாபக தலைவர் கவிஞர் தாஸிம் அகமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு துபாய் சங்கமம் தொலைக்காட்சி பணிப்பாளரும் முன்னாள் வகவம் உறுப்பினருமான கவிஞர் கலையன்பன் ரபீக் திருமதி வசந்தி தயாபரன் ஆகியோருடன் வகவம் ஸ்தாபக உறுப்பினர்களும் மூத்த கவிஞர்களும் கலந்துகொண்டனர். இறைதுதியுடனும் வகவாஞ்சலியுடனும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அண்மையில் மறைந்த கவிஞர் சக்தி பாலையாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கவிஞர் தாஸிம் அகமது தலைமை உரையில் வலம்புரி கவிதா வட்டத்தின் தோற்றம் வளர்ச்சி தற்போதைய நிலை ஆகியவற்றை விளக்கியதுடன் அதன் வரலாற்றை கவிதையில் கவிதை பொழிவு செய்தார். வகவத்தை வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்களான கலாசூரி சிவகுருநாதன் எஸ்.டி.சிவநாயகம் சித்திக்காரியப்பர் ஆகியோர் நன்றியுடன் நினைவு கூரப்பட்டன.

ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் செயலாளருமான கவின் கமலின் தியாக உணர்வுடன் கூடிய பணிகள் மறக்க முடியாதவை பாராட்டத்தக்கவை வகவம் 90 திறந்த கவியரங்குகளை நடத்தியுள்ளது என்றும் தாஸிம் அகமது கூறினார். ஸ்தாபக உறுப்பினர்களும் மூத்த கவிஞர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதை பொழிவு செய்ததுடன் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

வகவம் நடத்தி வந்த கவியரங்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்களான சட்டத்தரணியும் கவிஞருமான ரசீத் எம்.இம்தியாஸ் கவிஞர் ஆறுமுகம் கவிஞர் முபாரக் அப்துல் மஜித் வைத்திய கலாநிதி எம்.எச்.நூர்தீன் கவிஞர் ரவூப் ஹசீர் உட்பட வகவத்தின் முக்கிய உறுப்பினர்களும் கவிஞர்களுமான நாகூர் கனி, நஜிமுல்ஜுசைன், இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியோர் கருத்துரையாற் றியதுடன் கவிதைகளும் வாசித்தனர்.

சிறப்பதிதியாக கலந்து கொண்ட கொழும்புத் தமிழ்ச் சங்க ஆயுட்கால உறுப்பினரும் எழுத்தாளருமான திருமதி வசந்தி தயாபரன் தலைநகரில் தமிழ் கவிதை அமைப்புக்களின் அவசியம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் கவிதை அமைப்புக்களின் செயற்பாடுகள் தொய்வு நிலையை அடையாது தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். வலம்புரி கவிதா வட்டம் தமிழ் கதைஞர் வட்டத்துக்கீடாக சமகாலத்தில் தமிழ் கவிதை வளர்ச்சிக்காக அளப்பரிய பணியாற்றியுள்ளது.

தமிழ் கதைஞர் வட்டம் எனும் தகவம் எதிர்காலத்தில் வலம்புரி கவிதா வட்டத்துக்கு உறுதுணையாக பல உதவிகளை செய்யும் என்றும் இன்றைய அமைதியான சூழலில் தமிழ்க் கவிதையை தலைநகரில் வளர்த்தெடுப்பதிலும் வகவம் முன்னின்று உழைக்க வேண்டும். அதற்கான சிறப்பான வரலாற்று பின்னணி வலம்புரி கவிதா வட்டத்துக்கு உண்டு. அவ்வாறுதான் அது அடையாளம் காணப்பட்டிருக்கின்றது என்றும் கூறினார்.

கவிஞர் ஆறுமுகம் வலம்புரி கவிதா வட்டத்துடனான தனது நினைவுகளை மீட்டி பார்த்தார். கல்முனை முபாரக் எனும் முபாரக் அப்துல் மஜித் கவிஞர் ரவூப் ஹசீர் இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியோர் வலம்புரி கவிதா வட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணிகளில் தமது ஒத்துழைப்பு என்றும் உண்டு எனக் கூறினர். வகவத்தை தொடர்ச்சியாக இயங்கச் செய்வதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது பற்றி இளநெஞ்சன் முர்ஷிதீனும் செயலாளராகவும் அமைந்த குழுவொன்று ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது. கவிஞர் கலாவிஸ்வநாதன் கவிஞர் ஈழகணேஸ் ஆகியோர் காப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர். மூத்த படைப்பாளிகளான கவிஞர் அல் அசூமத் கவிஞர் ஜின்னா ஷரீப்தீன் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் கவிஞர் மேமன்கவி ஆகியோர் ஆலோசகர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கலையன்பன் ரபீக் வகவம் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவரான கவிஞர் நாகூர் கனியால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். தாஸிம் அகமது விருது வழங்கி கெளரவித்தார். கலையன்பன் தனது ஏற்புரையில் எதிர்பாராதவிதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தன்னை கெளரவித்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் கடந்த கால நினைவுகள் பற்றியும் கருத்துரை வழங்கினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.