புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

முதல் பாகம்

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தாத்தா! விவரமாய்ச் சொல்லேன்” என்றாள் வள்ளி.

“சரி, அடியிலிருந்து சொல்லுகிறேன் கேள்!” என்று கிழவன் கதையை ஆரம்பித்தான்.

“நீ பிறந்த வருஷத்தில் இது நடந்தது. அப்போது காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி ஆண்டு கொண்டிருந்தார். அவருடைய வீர பராக்கிரமங்களைப் பற்றி நாடெங்கும் பிரமாதமாய்ப் பேசிக்கொண்டிருந்த காலம். இந்த உறையூருக்கும் அவர் ஒருமுறை வந்திருந்தார். அவர் விஜயத்தின் ஞாபகார்த்தமாகத்தான் நமது மலையிலே கூட அவருடைய சிலையை அமைத்திருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில், வடக்கே இருந்து வாதாபியின் அரசன் புலிகேசி என்பவன் பெரிய படை திரட்டிக் கொண்டு தென்னாட்டின் மேல் படையெடுத்து வந்தான். சமுத்திரம் பொங்கி வருவதுபோல் வந்த அந்தச் சைன்யத்துடன் யுத்தகளத்தில் நின்று போர் செய்ய மகேந்திர சக்கரவர்த்திக்குத் தைரியம் வரவில்லை. காஞ்சிக் கோட்டையை சைன்யத்துடன் பதுங்கிக் கொண்டார். கோட்டைக்குள் கொஞ்ச காலம் முற்றுகையிட்டுப் பார்த்தான் புலிகேசி. அதில் பயனில்லையென்று கண்டு தெற்குத் திக்கை நோக்கி வந்தான். நமது கொள்ளிடத்தின் அக்கரைக்கு வந்துவிட்டான். அப்பப்பா! அப்போது இந்த உறையூர் பட்ட பாட்டை என்னவென்று சொல்லுவேன்! நமது பார்த்திப மகாராஜா அப்போதுபட்டத்துக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. புலிகேசியை எதிர்க்கப் பலமான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இதற்குள் வடக்கே புலிகேசியின் ராஜ்யத்துக்கே ஏதோ ஆபத்து வந்துவிட்டது போலிருந்தது.

புலிகேசி கொள்ளிடத்தைத் தாண்டவேயில்லை. திரும்பிப் போய்விட்டான். போகும்போது அந்தக் கிராதகனும் அவனுடைய ராட்சத சைன்யங்களும் செய்த அட்டூழியங்களுக்கு அளவேயில்லையாம். ஊர்களையெல்லாம் சூறையாடிக்கொண்டும் தீ வைத்துக் கொண்டும் போனார்களாம். அதிலிருந்து மகேந்திர சக்கவரத்தியினுடைய புகழ் மங்கிவிட்டது. “சளுக்கரின் பன்றிக் கொடிக்குப் பல்லவரின் ரிஷபக் கொடி பயந்துவிட்டது” என்று ஜனங்கள் பேசத் தொடங்கினார்கள். இந்த அவமானத்துக்குப் பிறகு மகேந்திர சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்கவில்லை. அவருக்குப் பிறகு நரசிம்மவர்ம சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்தார். இவர் பட்டத்திற்கு வந்ததிலிருந்து புலிகேசியைப் பழிக்குப்பழி வாங்கிப் பல்லவ குலத்துக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க வேணுமென்று ஆயத்தங்கள் செய்து வந்தார். கடைசியில் ஆறு வருஷங்களுக்கு முன்பு பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வடக்கே போனார்.

புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று வாதாபி நகரையும் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டுத் திரும்பி வந்தார். இந்தப் பெரிய வெற்றியின் ஞாபகார்த்தமாகப் பல்லவர்களின் ரிஷபக் கொடியை நரசிம்ம சக்கரவத்தி சிங்கக் கொடியாக மாற்றிவிட்டார். அவர் திரும்பி வந்து இப்போது ஒரு மாதந்தான் ஆகிறது, வள்ளி! அதற்குள்ளே...”

இத்தனை நேரமும் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தவள், “அப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியுடன் நமது மகாராஜா எதற்காக யுத்தம் செய்யப் போகிறார் தாத்தா! அவருடன் சிநேகமாயிருந்தாலென்ன?” என்று கேட்டாள்.

“அடி பைத்தியக்காரி...” என்று கிழவன் மறுமொழி சொல்ல ஆரம்பித்தான்.

அப்போது வீதியில் குதிரை வரும் சத்தம் கேட்டது. அந்த வீட்டின் வாசலிலேதான் வந்து நின்றது.

“வீரபத்திர ஆச்சாரி!” என்று யாரோ அதிகாரக் குரலில் கூப்பிட்டார்கள். உடனே கிழவன், “அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி வந்துவிட்டான். வள்ளி, நீ அவன் கண்ணில் படக்கூடாது. சமையற்கட்டுக்குள் போ. அவன் தொலைந்ததும் உன்னைக் கூப்பிடுகிறேன்” என்றான்.

மாரப்ப பூபதி

வாசலில் குதிரையில் வந்திறங்கியவன் திடகாத்திரமுள்ள யெளவன புருஷன்; வயது இருபத்தைந்து இருக்கும். ஆடை ஆபரணங்கள் உயர்ந்த ராஜரீக பதவியைக் குறிப்பிட்டன. ஆசாபாசங்களிலும் மதமாச்சரியங்களிலும் அலைப் புண்ட உள்ளத்தை முகக்குறி காட்டியது.

“சேனாதிபதி வரவேணும்” என்று சொல்லிக் கிழவன் வந்தவனை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.

“இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதே! நான் சேனாதிபதி இல்லை; நான் மாரப்ப பூபதி இல்லை, நான் என் தகப்பனுக்குப் பிள்ளையே இல்லை!” என்று கோபமான குரலில் சொல்லிக் கொண்டு மாரப்ப பூபதி உள்ளே வந்தான். முற்றத்தில் ஏற்கெனவே கிழவன் உட்கார்த்திருந்த பீடத்தில் அமர்ந்தான்.

“யுவராஜா ரொம்பக் கோபமாய் இருப்பது போல் தெரிகிறது!”

“யுவராஜா? யார் யுவராஜா? நானா? நேற்றுப் பிறந்த அந்தப் பரதைப் பயல் அல்லவா யுவராஜா? இளவரசர் விக்கிரம சிங்கர் வாழ்க! ஜய விஜயீபவ!” என்று பரிகசிக்கும் குரலில் கூறிவிட்டு மாரப்ப பூபதி, ‘இடி இடி’ யென்று சிரித்தான்.

சற்றுப் பொறுத்து “அது போகட்டும், ஆச்சாரி! உன் சோழி என்ன தெரிவிக்கிறது? அதைச்சொல்லு!” என்றான்.

வீரபத்திர ஆச்சாரி கொல்லு வேலை செய்ததுடன், சோதிட சாஸ்திரத்தில் வல்லவன் என்று பெயர் வாங்கியிருந்தான். சோழிகளை வைத்துக் கொண்டு அவன் கணக்குப் போட்டு ஜோசியம் பார்ப்பது வழக்கம்.

“யுவராஜா! எதற்காக இந்தப் பிரமை உங்களுக்கு...?” என்று ஆரம்பித்தான் கிழவன்.

“அந்தக் கதையெல்லாம் அப்புறம் வைத்து கொள்ளலாம் நீ ஏதாவது பார்த்தாயா இல்லையா? வெறுமனே என்னை அலைக்கழிக்க உத்தேசமா?”

‘பார்த்தேன் யுவராஜா! உங்களுக்கு என்ன வேணுமோ, கேட்டால் சொல்லுகிறேன்.”

“முக்கியமான விஷயம் சண்டைதான். அதன் முடிவு என்ன ஆகும்? இதைத் தெரிந்து சொல்ல முடியாவிட்டால், உன் ஜோசியத்தினால் என்ன பிரயோஜனம்? சுவடிகளையும் சோழிகளையும் தூக்கி நானே காவேரி யாற்றில் எறிந்து விடுகிறேன்!” என்றான் மாரப்பன்.

“அப்படியே செய்துவிடுங்கள், யுவராஜா! எனக்கு ரொம்ப அனுகூலமாயிருக்கும். பாருங்கள்! என்னுடைய சொந்த விஷயத்தில் இந்த சாஸ்திரம் பிரயோஜனப்படவில்லை. ஒரே நாளில் குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது. குலத்தை வளர்ப்பதற்கு ஒரு பெண் குழந்தைதான் மிஞ்சியிருக்கிறது.”

“வள்ளி சுகமாயிருக்கிறாளா, ஆச்சாரி?” என்று மாரப்ப பூபதி கேட்டான். அப்பொழுது அவன் முகத்தில் ஒரு விகாரம் காணப்பட்டது.

“ஏதோ இருக்கிறாள்” என்றான் கிழவன்.

“ஆமாம், பொன்னன் சண்டைக்குப் போய்விட்டால் வள்ளி என்ன செய்வாள்?”

“அதற்கென்ன, யுவராஜா! வள்ளியைக் காப்பாற்றக் கடவுள் இருக்கிறார்; இந்தக் கிழவனும் இருக்கிறேன்.!” என்று அழுத்திச் சொன்னான் வீரபத்திர ஆச்சாரி.

“ஆமாம்; நீ இருக்கும்போது அவளுக்கு என்ன வந்தது? இருக்கட்டும்; ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சண்டையின் முடிவு என்ன ஆகும்? உன் சோழிக் கணக்கில் ஏதாவது தெரிகிறதாயிருந்தால் சொல்லு; இல்லாவிட்டால் உன் ஜோசியக் கடையைக் கட்டு!”

“கடையை அப்போதே கட்டிவிட்டேன், யுவராஜா! உங்களுடைய தொந்தரவினால்தான் மறுபடியும் அதைத் திறந்தேன்!”

“திறந்ததில் என்ன தெரிந்தது?”

“கிரகங்களின் சேர்க்கை ரொம்பப் பயங்கரமான முடிவைக் காட்டுகிறது. சண்டையில் ஒரு பக்கத்துச் சேனை

அடியோடி அழிந்துபோகும், யுத்தகளத்துக்குப் போனவர்களில் ஒருவராவது திரும்பி வரமாட்டார்கள். ஆனால், எந்தப் பக்கத்துச் சேனை என்று எனக்குத் தெரியாது”

“அது எனக்குத் தெரியும். எந்தப் பக்கத்துச் சேனை அழியும் என்று சொல்லுவதற்கு நீயும் வேண்டாம்; உம் சோழியும் வேண்டாம். திரும்பி வராமல் நிர்மூலமாகப் போகிறது சோழ சைன்யந்தான். அந்தப் பெரும் புண்ணியத்தைத்தான் உங்கள் பார்த்திப சோழ மகாராஜா கட்டிக் கொள்ளப் போகிறார்!”

“யுவராஜா! நீங்களே இப்படிச் சொல்லலமா? நமக்குள் எவ்வளவு மனஸ்தாபங்கள் இருந்தாலும், பகைவனுக்கு முன்னால்...”

“யார் பகைவன்? பல்லவ சக்கரவத்தியா நமக்குப் பகைவன்? இல்லவே இல்லை! சோழநாட்டுக்கு இப்போது பெரிய பகைவன் பார்த்திபன்தான். இவன் கையிலே வாள் எடுத்து அறியமாட்டான்; வேல் வீசி அறியமாட்டான்! இப்பேர்ப்பட்ட வீராதி வீரன் பல்லவ சைன்யத்துடன் போர் செய்யக் கிளம்புகிறான். பல்லவ சைன்யம் என்றால் லேசா! சமுத்திரத்தின் மணலை எண்ணினாலும் எண்ணலாம், பல்லவ சைன்யத்திலுள்ள வீரர்களை எண்ண முடியாது.

காவேரியிலிருந்து கோதாவரி வரையில் பரந்து கிடக்கும் பல்லவ சாம்ராஜ்யம் எங்கே? ஒரு கையகலமுள்ள சோழநாடு எங்கே? நரசிம்ம சக்கரவர்த்திதான் லேசுப்பட்டவரா? நூறு யோசனை தூரம் வடக்கே சென்று ராட்சதப் புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று, வாதாபியைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டு வந்தவர். அவருடன் நாம் சண்டை போட முடியுமா? யானைக்கு முன்னால் கொசு!...”

“யுவராஜா! இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லுகிaர்கள்? மகாராஜாவிடம் சொல்வதுதானே?”

“மகாராஜாவிடம் சொல்லவில்லையென்றா நினைத்துக் கொண்டாய், கிழவா? சொன்னதன் பலன்தான் எனக்குச் சேனாதிபதிப் பதவி போயிற்று. மகா ராஜாவே சேனாதிபதிப் பதவியையும் ஏற்றுக் கொண்டு விட்டார்! சைன்யத்தை அவரே நடத்திக் கொண்டு யுத்த களத்துக்குப் போகப் போகிறாராம்! தாரளமாய்ப் போகட்டும். இந்தப் பிரமாத சேனாதிபதிப் பதவி இல்லை யென்று யார் அழுதார்கள்?”

“அப்படியானால் யுவராஜா! நீங்கள் யுத்தத்துக்கே போகமாட்டீர்களோ?”

“நானா? நானா? என்னைக் கூப்பிட்டால் போவேன்; கூப்பிடாவிட்டால் போகமாட்டேன்... கிழவா! சண்டையின் முடிவைப் பற்றிச் சொன்னாயே, அதை இன்னொரு தடவை விவரமாய்ச் சொல்லு!”

“ஆமாம், யுவராஜா! ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் யுத்தகளத்தில் அழிந்து போவார்கள். ஒருவராவது உயிரோடு திரும்பி வரமாட்டார்கள்!”

“உயிரோடு திரும்பி வரமாட்டார்களா? பின் உயிரில்லாமல் திரும்பி வருவார்களோ? ஹா ஹா ஹா ஹா!” என்று மாரப்ப பூபதி உரக்கச் சிரித்தான்.

பிறகு, “ஆமாம் ஆமாம்; நான் யுத்தத்தில் செத்துப் போனால் நிச்சயமாய்ப் பிசாசாகத் திரும்பி வருவேன்; திரும்பி வந்து வள்ளியைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவேன்!” என்று கூறி மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தான்.

சமையலறையிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த வள்ளி தன் இரண்டு கையையும் நெறித்து, “உன் கழுத்தை இந்த மாதிரி நெரித்துக் கொல்லுவேன்” என்று முணு முணுத்தாள்.

கொஞ்சம் காது மந்தமுள்ள கிழவி, “என்ன சொல்லுகிறே, வள்ளி?” என்று கேட்கவும் வள்ளி அவளுடைய வாயைப் பொத்தி, ‘சும்மா இரு!” என்றாள்.

“உள்ளே யார் பேசுகிறது?” என்று கேட்டான் மாரப்ப பூபதி.

“யார் பேசுவார்கள்? என்னைப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ, ஒரு கிழப்பிசாசு, அதுதான் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும்!” என்றான் கிழவன்.

“சரி, எனக்கு நேரமாச்சு; போகவேணும், என் கிரக பலன்களைப் பற்றி நீ சொன்னதெல்லாம் நிஜந்தானே ஆச்சாரி! பொய் சொல்லி ஏமாற்றியிருந்தாயோ...!”

“தங்களை ஏமாற்றி எனக்கு என்ன ஆகவேணும் யுவராஜா!”

மாரப்ப பூபதி எழுந்து நின்று சுற்று முற்றும் பார்த்தான். முற்றத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களையும் வேல்களையும் கத்தி கேடயங்களையும் பார்த்துவிட்டு சிரித்தான். “ஆஹா! ரொம்ப முனைந்து வேலை செய்கிறாயாக்கும்! கத்தி! கேடயம்! வாள்! வேல்! இந்த வாழைப்பட்டைக் கத்திகளையும், புல் அரியும் அரிவாள்களையும் வைத்துக் கொண்டு தான் உங்கள் பார்த்திப மகாராஜா, பல்லவ சக்கரவர்த்தியை ஜயித்து விடப் போகிறார்! நல்ல வேடிக்கை! ஹா ஹா ஹா!” என்று உரக்கச் சிரித்துக் கொண்டே ஒரு பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அப்படியே வாசற் பக்கம் போனான்.

உலைக் களத்தில் கிளம்பும் அனற் பொறிகளைப் போல் கிழவன் கண்களிலே தீப்பொறி பறந்தது.

போர் முரசு

வீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, “தாத்தா! இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம்? நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனைச் சும்மாதனே விட்டு விட்டாய்?” என்று அத்திரத்துடன் கேட்டாள்.

“ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம்? நீ சொன்னதைத்தானே நமது பழைய சேனபதிபதியும் சொன்னார். சண்டை வேண்டாம் என்று?” என்றான் கிழவன்.

“சேச்சே! நான் சண்டை வேண்டாமென்று சொன்னேனா? சண்டை எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன்!” என்று வள்ளி சொன்னபோது அவள் கண்களில் நீர் ததும்பிற்று.

“ஆமாம், வள்ளி! அதை நான் சொல்ல ஆரம்பித்த போதுதான் இந்தப் பாவி வந்துவிட்டான். வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீது படையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்து விட்டுத் திரும்பிப் போனதைச் சொன்னேனல்லவா? அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக நரசிம்ம சக்கரவர்த்தி வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறு வருஷத்துக்கு முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச்சென்றார். அப்போது நமது பார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலை அனுப்பினார். அதற்குப் பார்த்திப மகாராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால் அதற்குப் பிரதியாக அன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை நிறுத்திவிட வேண்டுமென்றும், சோழநாட்டின் புலிக் கொடிக்குச் சமமரியாதை கொடுக்க வேண்டுமென்றும் செய்தி அனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்தி கவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல் படை கிளம்பிப் போய்விட்டார். அன்று முதல் பார்திப மகா ராஜாவும் காஞ்சிக்குக் கப்பம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது, வள்ளி! இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின் சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா? நமது சிரப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக்கொடியை மறுபடியும் பறக்கவிடலாமா? அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?”

“அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது, தாத்தா! நமது பார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப் பேசுகிறவர்கள் எல்லோரும் பொல்லாத பாவிகள். அவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள். இந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டுவிட்டாயே என்று எனக்கு இருக்கிறது தாத்தா! நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா...?

“ஆமாம்; நமது மகாராஜா ரொம்ப நல்லவர்தான். ஆகையினால்தான் இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவு இடங்கொடுத்துத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடினார்!...”

“என்ன சொல்லுகிறாய், தாத்தா?”

“சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமது மகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல் சபலம் தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே அந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின் பிள்ளைதான் இந்த மாரப்பன். பழைய மகாராஜா செத்துப் போகும்போது. பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்¨யில்லாவிட்டால் இவனுக்குப் பட்டத்தைக் கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப் போனாராம். விக்கிரம இளவரசர் பிறக்கும்வரையில் இவன்தான் ‘யுவராஜா” வாக விளங்கினான். பார்த்திப மகாராஜா எவ்வளவோ இவனிடம் அன்பு காட்டிக் கெளரவம் அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார். இவனோ நன்றிகெட்ட பாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்?”

‘இவனோடு உனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா? இவனுக்கு நீ ஜோசியம் சொல்லுவது என்ன வேண்டிக் கிடந்தது?”

வள்ளி திடுக்கிட்டு. “என்னால் ஏற்பாட்டதா?

உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி!” என்றான் கிழவன்.

வள்ளி திடுக்கிட்டு. “என்னால் ஏற்பட்டதா? நன்றாயிருக்கிறதே கதை! என்றாள்.

“உன்னால் ஏற்பட்டதுதான். இத்தனை நாளும் உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்லப்போகிறேன், வள்ளி! காலம் ரொம்ப அபாயமான காலம். நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ, தெரியாது. இந்த மாரப்ப பூபதி யுத்தததுக்குப் போகமாட்டான். என்று மட்டும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாயிருக்க வேண்டும்”

“என்ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய் இந்தக் கரிமுஞ்சியிடம் எனக்கு என்ன பயம்?”என்று வள்ளி கேட்டாள்.

“நான் சொல்கிறதைத் கொஞ்சம் கேள், அம்மா! ஒரு காலத்தில் இந்த மாரப்ப பூபதி தனக்கு உன்னைக் கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தான்...”

“அவன் தலையிலே இடிவிழ!” என்றாள் வள்ளி.

“அவன் தலையிலே இடி விழவில்லையே. அம்மா! என் தலையிலே அல்லவா விழுந்தது! கிரக சஞ்சார ரீதியாக அப்போது நம் குடும்பத்துக்கு ஏதோ பெரிய விபத்து வரப்போகிறதென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மாரப்ப பூபதி தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து உன்னைத் தூக்கிகொண்டு போவதாக இருந்தான், இதுவும் எனக்குத் தெரிந்தது. நீயும் உன் தமையன்மார்களும் அப்போது வீட்டில் இருந்தால் ரத்தக்களரியாகுமென்று எண்ணித்தான் எல்லோரையும் அக்கரையில் நடந்த கலியாணத்துக்குப் போங்கள் என்று அனுப்பினேன். யமன் நடு ஆற்றில் சூறாவளிக் காற்றாக வந்தான். உன் அண்ணன்மார் எல்லாரும் செத்துப் போனார்கள், சுவாமி உன்னை மட்டும் எனக்குக் கொடுத்தார்...”

இப்படிச் சொல்லிவிட்டுக் கிழவன் பெருமூச்சுவிட்டான். ஆகாயத்தைப் பார்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

வள்ளி,”இத்தனை நாளும் சொல்லவில்லையே, தாத்தா? இவன்தான் என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன்? அப்புறம் என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

‘நீங்கள் எல்லோரும் படகேறிப் போன பிறகு நான் எதிர்பார்த்தப்படி இவன் தன் ஆட்களுடன் வந்தான். வீட்டில் நீ இல்லை என்று கண்டதும் தம், தம் என்று குதித்தான். அவனைச் சமாதானப்படுத்துவதற்காக நான் சோதிட சாஸ்திரத்தை உபயோகப்படுத்தினேன். ‘நீ பெரிய சக்கவர்த்தியின் மருமகன் ஆகப் போகிறாய், அப்பா! இந்த அற்ப ஆசைகளையெல்லாம் விட்டுவிடு’ என்று சொன்னேன். அதுமுதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்துவிட்டான். ஜோசியம் கேட்பதற்கு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்.”

“இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம் புரிகிறது, தாத்தா! ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என் செய்வேன்? நீதான் என்னைக் காப்பாற்றவேணும்” என்று சொல்லிக் கிழவனுடைய கையை வள்ளி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு நடுங்கிற்று.

கிழவன், பைத்தியமே! ஏன் இப்படி நடுங்குகிறாய்? பொன்னன் சண்டைக்குப் போகமாட்டான். அவனை மகாராஜா அழைத்துக் கொண்டு போகமாட்டார். என் குடும்பத்துக்கு நேர்ந்த பெரிய விபத்து மகாராஜாவுக்குத் தெரியும். என் குலத்தை வளர்க்க நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்றும் தெரியும். ஆகையால்தான் பொன்னனைச் சண்டைக்கு வரவேண்டாம் என்றார், நிச்சயமாக அழைத்துப் போகமாட்டார்!” என்றான்.

அச்சமயம் வாசலில் முரசடிக்கும் ஓசை கேட்டது. பின் வருமாறு கூவும் குரலும் கேட்டது:-

“வெற்றிவேல்! வீரவேல்! யுத்தம் வருகுது! யுத்தம் வருகுது! சோழ தேசத்தின் மானத்தைக் காக்க யுத்தம் வருகுது! படையில் சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி குருடு, சப்பாணி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை இவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லோரும் வரலாம் வெற்றிவேல்! வீரவேல்!!”

இதைத் தொடர்ந்து முரசின் சத்தம் ஊர் அதிரும்படியாக எழுந்தது.

(தொடரும்...)

இந்தப் போர் முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப் பக்கம் சென்றார்கள். முரசு யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க் கொண்டிருந்தார்கள். முரசும் முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானைமேல் இருந்தனர். இந்த ஊர்வலம் தெருக்கோடி போகும்வரையில் பாட்டனும் பேத்தியும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும் கிழவன் ஒரு பெருமூச்சு விட்டுச் சொன்னான்.

“வள்ளி, உன்னைப் பொன்னனும் பகவானும் காப்பாற்றுவார்கள்! இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான் தான் போகப் போகிறேன்” என்றான்.

தெற்கு வானத்தில் திடீரென்று ஒரு நட்சத்திரம் நிலைபெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பZரென்று ஒளிவீசி வானவெளியில் அதி வேகமாய்ப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது.

இதைப் பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது.

அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல் சிலிர்த்தான்.

அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.

பெளர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வான வெளியில் ராஜ ஹம் சத்தைப்போல் சஞ்சரித்து வெற்றி நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்ற சொப்பன லோகம்போல் காட்சியளித்தன.

“ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்” என்று சொல்வதுண்டல்லவா? இந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெரிய நகரமாயும் உறையூர் சிற்றூராயுமிருக்கிறது. அந்ந நாளிலோ உறையூர்தான் தலைநகரம்; திருச்சிரப்பள்ளி சிற்றூர். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இடைவெளியில்லாமல் கடைவீதிகளும், பலவகைத் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த தெருக்களும் இருந்தன. சிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து சேர்வதற்கு முன்னால் பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான்.

மகாராஜா, சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில் நின்று இளவரசருக்கு என்னத்தைக் காட்டியிருப்பார் என்பது அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அங்கேதான் சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப மகராஜாவின் தந்தை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.