புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள் 15

ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள் 15

மொசு மொசுக்கை

வேறுபெயர் - முசுமுசுக்கை, ஐலேயம், இரு குரங்கின்கை

தாவரவியற் பெயர் - mukia Scabrella (முக்கியா ஸ்கப்ரில்லா)

குடும்பம் -cucurbitaceae (குக்கா பிற்றேசியே)

மழைக்காலம் முடிவடைந்து விட்டது! பனிக்காலம் ஆரம்பமாகிவிட்டது. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களும் சளி, இருமல், முட்டுத்தொய்வு போன்ற நோய்களால் அவதிப்பட நேரிடும் காலம் இது. சூழல் மாற்றங்கள் நோய்களை ஏற்படுத்துகின்றன என்று கூறும் அதே வேளை அதற்குரிய மருந்துகளையும் சூழலில் உற்பத்தியாகி இருப்பதைக் காணலாம். இயற்கையின் அற்புதம் அது. அந்தவகையில், மழைக்காலம், பனிக்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, தொய்வு, இருமல் முதலிய நோய்களுக்கும் இயற்கை அற்புத மூலிகை ஒன்றை வழங்கியுள்ளது. அதுதான் மொசுமொசுக்கை மொசு என்றால் குரங்கு. இம்மூலிகையில் இரண்டு தடவை மொசு என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இருகுரங்கின்கை என்று நகைச்சுவையாக அழைக்கப்படுகிறது. மற்றப்படி இம்மூலிகைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

மொசு மொசுக்கை கொடி வர்க்கத்தைச் சேர்ந்தது. மழைக்காலம், பனிக்காலத்தில் வேலியோரங்களிலும், பற்றைகளிலும் தானாகவே முளைத்துப் பிறமரங்களில் படர்ந்து காணப்படும். இதன் தண்டு, இலைகளில் சுணைமயிர்கள் போன்று காணப்படும். தனி இலைகள். வட்டவடிவம். சோனைகளுண்டு. பூக்கள் மஞ்சள் நிறம், காய் பச்சை நிறம், பழம் சிவப்பு நிறம். தூதுவளங்காய் போன்றது.

“இருமலுடனீளை யிரைப்பு புகைச்சல்

மருவுகின்ற நீர்த்தோடம் மாறுந்- திருவுடைய

மானே! முசுமுசுக்கை மாமூலி யல்விலையைத்

தானே யருந்துவார்க்குத் தான்”

அதாவது, இருமல், ஈளை, இரைப்பு, புகையிருமல், மூக்கால் நீர்பாய்தல் (பீனிசம்) என்பன முசுமுசுக்கையால் தீரும் என்கிறது குணவாகடம்.

மழை, பனிக்காலங்களில் மூட்டு, தொய்வு, இருமல் போன்றவற்றால் வருந்துபவர்கள் மட்டுமன்றி ஏனையோரும் மொசுமொசுக்கை இலையைத் தமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நன்மை பெறலாம்.

மொசுமொசுக்கை அடை

தேவையானவை

புழுங்கலரிசி -1 சுண்டு

மொசுமொசுக்கை இலை -1 கைப்பிடி அளவு

செய்முறை - புழுங்கலரிசியை நன்கு ஊறவைத்து அதனுடன் சுத்தப்படுத்திய மொசு மொசுக்கை இலை சிறிதளவு மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு என்பவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். இந்த மாவைத் தோசைக்கல்லில் சிறிது நெய்தடவி, அடையாகச் சுட்டுச் சாப்பிட்டுவர கோழைக்கட்டு, இருமல், தொய்வு முதலியன நீங்கும்.

பெரியவர்கள் மட்டுமன்றிச் சிறுவர்களும் விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவு இதுவாகும். தற்காலத்தில் குழந்தைகளுக்குச் சளி, இருமல், முட்டு முதலியன அதிகளவில் ஏற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவர்களுக்கு மொசுமொசுக்கை கூடியதாக உள்ளது. அவர்களுக்கு மொசுமொசுக்கை அடை சிறந்த மூலிகை உணவு மருந்தாகிறது.

மொசுமொசுக்கை அரையல்

மொசுமொசுக்கை இலை - 1 கைப்பிடி அளவு

செத்தல் மிளகாய் -10

தேங்காய்ப்பூ - (1பாதி துருவியது)

உப்பு - தேவையான அளவு.

தாச்சியில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, அதில் முதலில் மிளகாயையும், பிறகு மொசுக்கை இலையையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். இலைகள் நன்கு வதங்கியதும் தேங்காய்ப்பூவைப் போட்டு பொன்னிறமாக வரும்வரை கிளறி எடுக்கவும் இத்துடன் தேவையான அளவு உப்பு சிறிது பழப்புளி என்பவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். இதைமதிய உணவு அல்லது இரவு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர,

“தேடு நன்முசுமுசுக்கை சேடமே வரட்சி தாகம்

ஓடரு மிருமல் பித்தமுழை சுரத்தை மாற்றும்”

என்ற பதார்த்த சூடாமணிப் பாடலுக்கிணங்க கபம், வரட்சி, தாகம், இருமல் பித்தம், உள்அழல், சுரம் என்பன மாறும்.

இத்தி

வேறுபெயர் - இச்சி, இந்திரி, இறலி

தாவரவியற் பெயர் - Ficus retusa

ஃபைகஸ் ரெற்றியூசா)

குடும்பம் urticaceac

(ஏர்ட்டிகேசியே)

சிங்களப்பெயர் - பனுநுக

சமஸ்கிருதப்பெயர் - பிலக்ஷம்

இத்தி மரவகுப்புக்குரியது. உலர் வலயத்தில் சாதாரணமாகக் காணப்படும். பட்டை கபில நிறமானது. அழுத்தமானது. தனி இலைகள் நீள்வட்டவடிவானவை. ஒன்று விட்ட இலை ஒழுங்கு, நுனி கூரானது. காய் பச்சை நிறம். கனி மஞ்சள் நிறம். அத்திக்காயைப் போலவே இத்திக்காயும் உணவாகப் பயன்படுத்தத் தக்கது.

“வாயுமலக்கட்டு மலக்கழிச்சல் கால்வழியே

சாயு மசிர்க்குள்ளே தங்கு வெப்பி - னோயினங்கள்

எத்திக்கா தாரமுற்றிருப்பன விராவே நல்

இத்திக்காய்ப் பிஞ்சுகளை யென்”

என்று இத்திப்பிஞ்சு, காய்களின் மருத்துவகுணங்களை எடுத்தியம்பியுள்ளது, பதார்த்த குணசிந்கதாமணி அதாவது, இத்திக்காய், இத்திப் பிஞ்சு என்பன கழிச்சல், பெரும்பாடு, உட்சூட்டினால் ஏற்படுகின்ற பிணிகளைப் போக்கும் என்பதாம்.

இத்திப் பிஞ்சுகளை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கிச் சிறிது உப்பும் சேர்த்துச் சோற்றுடன் சாப்பிட்டுவர முற்கூறிய நோய்கள் நீங்கும்.

பாற்சொதி

இத்திப் பிஞ்சுகளை இரண்டிரண்டாக நறுக்கி, நல்லெண்ணெய் விட்டு வதக்கி அத்துடன் வெங்காயம், கறி மிளகாய், தேங்காய்ப்பால், தேவையான அளவு உப்பு என்பன சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இறக்கி, ஆறிய பின் தேசிப்புளிவிட்டு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாயவியல், மலச்சிக்கல் என்பன நீங்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.