புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

குட்டிக்கதை

குட்டிக்கதை

இலண்டனிலிருந்து இரண்டு மாத லீவில் ஊருக்கு வந்த சலீம் மீண்டும் அங்கு செல்ல வேண்டிய காலம் நெருங்கியதால் பயணத்திற்குரிய ஆயத்தங்களைப் படிப்படியாகச் செய்து கொண்டிருந்தான். செல்ல வேண்டிய உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்துப் பிரியாவிடை பெற்றான். கொண்டு செல்வதற்குரிய பொருட்களைச் சேகரித்தான். கடவுச்சீட்டு, விமானப் பயணச்சீட்டு, திகதி, புறப்படும் நேரம் அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டான். திங்கள் காலை 10.00மணிக்கு அவன் விமானம் புறப்படுவதால் அன்று காலை 7.00 மணிக்கு அவன் விமான நிலையத்தில் நிற்க வேண்டும். அதற்கேற்ப இரவுப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். பிரயாணியைச் சந்திக்கவும் வழியனுப்பவுமாக நண்பர்களும் உறவினர்களும் வருவதும் போவதுமாயிருந்தனர்.

இரவுணவு அருந்தி முடிந்ததும் பெட்டி படுக்கைகள் வாகனத்திலேற்றப்பட்டன. தனது கைப்பையைத் தூக்கி அதன் பட்டியைத் தோளில் போட்டு விட்டுத் தன் நெருங்கிய உறவினர்களைக் கட்டித் தழுவியும் கைகுலுக்கிய உறவினர்களைக் கட்டித் தழுவியும் கைகுலுக்கியும் விடைபெற்றுக் கொண்டு வெளியேறப் போகும் தருணத்தில் கதீஜா தன் மக்கள் இருவரோடும் முன்னோக்கி வந்தாள். “பிள்ளைகள் சாச்சா போறத்தப் பாக்கணுமிண்டு ஒரே புடியா புடிச்சாங்க; நான் எவ்வளவு சொல்லியும் கேக்காம அடம் புடிச்சாங்க; அதனால கூட்டிக் கொண்டு வந்திட்டேன்” என்றாள். சலீம் தன் அண்ணியின் முகத்தைப் பார்க்காமல் குழந்தைகளை அனைத்து முத்தமிட்டான். திடீரென சலீமின் தாய் ஆமினா ஓடிவந்து” ‘தம்பி’ நீ இண்டைக்குப் பயணம் போக வேண்டாம்; பயணத்த ஒத்திப் போடு மகனே;” என்று கூறிப் பயணத்தைத் தடுத்து விட்டு கதீஜாவின் மீது சீறப் பாய்ந்தாள்.

“ஒனக்குத் தெரியாதா? என் புள்ள வெளிநாட்டுப்பயணம் போகப் போறானெண்டு; ஒரு வெதவப் பொண்ணு மூளிவிசகழமா பயணம் போகக்கே முன்னுக்குவரலாமா? அது அபசகுண மில்லியா? இதுக்குப் பயந்துதான் மூணு நாளுக்கு முன்னால ஒன்ட ஊட்டுக்கு வந்து கதச்சிப் பேசி எல்லா விசயமும் சொல்லிட்டு எம் புள்ள வந்தவன்; அதுக்குள்ள சிவபூசைக்குள்ள கரடி வந்த மாதிரி வாரிச் சுருட்டிக்கிட்டு நீ வரணுமா?” எனப் பொரிந்து தள்ளினாள். “மாமீ!... என்ன மன்னிச்சிடுங்க... எவ்வளவு சொல்லியும் ஒங்க பேரப்புள்ளைங்க கேக்கல்ல; அழுது அடம் புடிச்சி... அமர்க்களம் பண்ணிட்டாங்க” அவங்களோடு நான் படுறபாட்ட அடுத்த ஊட்டுல கேட்டுப்பாருங்க; இவங்களக் கூட்டிவாறதுக்கு வேற யாரும் கெடைக்கல்ல; அதனால்தான் நானே கூட்டிக்கிட்டு வந்தேன்; காகம் நிக்க பனம்பழம் விழுந்த மாதிரி நானும் நுழையவாச்சி அவரும் வெளியேற வாச்சி” என கதீஜா தன் நிலைப்பாட்டை விளக்கினாள். “எவ்வளவு செரமத்தோட ஏற்பாடு செஞ்ச பயணம்; அநியானமாப் போச்சே, இப்ப டிக்கட் மாத்தணும்; தெண்டங் கட்டணும் எவ்வளவு ஓட்டம் ஓடணும், ஓடுற ஓட்டமும் பண்ணுற செலவும் ஒனக்கென்ன தெரியும்” என்றாள்.

கூடிநின்றவர்களும் ஆளுக்கொரு கதை பேசவே கதீஜாவின் நிலை மிகப்பரிதாபமாயிருந்தது” பயணம் தடையானதில ஏதோ ஒரு நலவிருக்கும்; சும்மா அந்தப் புள்ளயப் போட்டு ஏசாதீங்க” என அஹமதுப்புள்ள என்னும் முதியவர் சொன்ன வார்த்தைகள் கதீஜாவுக்குக் கொஞ்சம் ஆறுதலளித்தது. அத்துடன் எல்லோருங் கலைந்து தத்தம் வீடு நோக்கிச் சென்றனர்.

பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்த கதீஜா அவர்களுக்கு உணவூட்டித் தூங்கப் பண்ணிவிட்டுத் தானும் தன் படுக்கையில் அமர்ந்துகொண்டு நடந்தவற்றை எண்ணித் தனிமையிலிருந்து கொண்டு கவலைப்பட்டாள். ஒரு விதவைப் பெண்ணுக்குச் சமூகம் விதித்துள்ள பத்தியங்களை எண்ணி விசனப்பட்டாள். குடும்ப இன்ப துன்பங்களிற் கூடக் கலந்துகொள்ள முடியாமல் ஓரங்கட்டப்படுவதை அவளால் சகிக்க முடியாமல் தன்படுக்கையிலே உருண்டு புரண்டு இரவைக் கழித்தாள்.

எங்கோ தொலை தூரத்தில் ஒரு சாமக்கோழிச் சேவல் கூவுங் குரல் கேட்கின்றது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆங்காங்கே ஒன்றையொன்று போட்டியிட்டுக் கூவுவது போல் ஊரெங்கும் சேவல்கள் கூவத் தொடங்கின. முற்றத்தில் நின்ற மாமரத்தில் குயில்களும் தம் குரலினிமையைக் காட்டத் தொடங்கின. விடியலின் சாயல் தெரிகின்றது. என் போன்ற விதவைகளின் விரகதாபத்திற்கும் ஒரு விடிவு வருமா? என்ற வினாவைத் தனக்குள் கேட்டுக் கொண்டவளாக தன் படுக்கையை மூடிவிட்டுத் தன் வழக்கமான பணிகளைச் செய்யத் தொடங்குகிறாள்.

ஆமீனாவுக்கு அன்றைய நாள் ஒரு கரிநாள். அன்று நாள் முழுவதும் அவள் முகம் கடுகடுப்புடனேயே காணப்பட்டது. காலை 10.00 மணியானபோது அவள் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்து விட்டு” என்ர புள்ள விமானத்தில் இருக்கிற நேரமிதுவா இது” என்று கண்கலங்கி அங்கலாய்த்தாள்... அன்று மாலை சம்பவத்தைக் கேள்விப்பட்ட அயலவர்களும் உறவினர்களும் ஆமினாவின் வீட்டிற்கு வந்து அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிக் கொண்டிருந்தனர்.

 அவள் ஒரு பாயில் உட்கார்ந்து கால்களை நீட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்த வண்ணம், வெற்றிலை மடித்து அதில் சுண்ணாம்பு பூசிச்சுருட்டி வாயில் வைத்த போது இரு வாலிபர்கள் அவசரமாக உள்ளே வந்து “ ஆச்சி செய்தி தெரியுமா? என்றனர் “என்ன மவனே! என்ன சேதி? எனக்கு ஒண்டும் தெரியாதே” என்றாள் . “இன்று காலை 10.00 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஏதோ யந்திரக் கோளாறா மெண்டு வானிலே தத்தளித்துக் கெய்றோ விமான நிலையத்தில் தரையிறக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.

பிரயாணிகள் அனைவரையும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளார்களாம். விமானம் புறப்பட சில நாட்களாகும் என்று விசேட வானொலிச் செய்தியில் சொன்னாங்க” என்று சொன்னதும் “அல்லாஹ்!” என்று இரு கைகளையும் மேலே உயர்த்தி” என் புள்ள போவாதது நல்லதாப் போச்சி; அஹமதுப்புள்ள நேத்து சொன்னாரு, பிரயாணந் தடைப்பட்டதுல நலவொண்டு இருக்கு மெண்டு. அந்தப் புள்ளைக்கும் அநியாயமா ஆத்திரப்பட்டு வாயில வந்தபடி ஏசிப் போட்டன், பாவம் அறுதலிப் பிள்ளை. நடந்தது நலவுக்குத்தான்” எனச் சொல்லிக் கொண்டு கதீஜாவின் வீட்டுக்குச் செல்ல அவசரமாகப் புறப்பட்டாள் ஆமினா.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.