புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
காங்கிரஸை நம்பினோர் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை

காங்கிரஸை நம்பினோர் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை

"பால் பிரச்சினை தொடர்பில் வதந்திகள் பரப்பப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியிருந்தன. உண்மையில் என்னதான் நடக்கிறது?"

"பால் பிரச்சினை என்னவென்றால், நாம் முதலில் பொறுப்பெடுத்த வேலையைவிடத் தற்போது பால் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. உதாரணமாக முன்பு 185,000 லீற்றர் பெறப்பட்டது. தற்போது 2,15,000 ஐயும் தாண்டியிருக்கிறது. இது ஒரு நாள் சேகரிப்பு. அதேநேரம் உங்களுக்குத் தெரியும் தற்போது இருக்கும் நான்கு தொழிற்சாலைகளிலும் உள்ள இயந்திர உபகரணங்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்டவை. அதனுடைய கொள்ளளவு போதுமானது அல்ல.

அதேநேரம் சில பகுதிகளில் உள்ள பால் நிறுவனங்கள் குறிப்பிட்ட திகதியில் இருந்து பால் கொள்வனவு செய்வதில்லை என்று அறிவித்துள்ளன.

இதனைக்கேட்டு ஹட்டனில் சிலர் பாலை வீதியில் ஊற்றினார்கள். ஆனால், ஏனையவர்கள் அவ்வாறு முட்டாள்தனமாக நடக்கவில்லை. பால் பண்ணை வைத்திருப்பவர்களிடமே நாம் (மில்கோ) பால் கொள்வனவு செய்கிறோம். இடைத்தரகர்களிடம் கொள்வனவு செய்ய முடியாது. பாற்பண்ணையாளர்கள் கொண்டு வந்து கொடுத்தால் மில்கோ பெற்றுக்கொள்ளும். அதேவேளை தொழிற்சாலைகளை மேம்படுத்தி கொள்ளளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதேநேரம், கொழும்பில் உள்ள தொழிற்சாலையை மூடிவிட்டுப் புறநகரப் பகுதியொன்றுக்குக் கொண்டு செல்கிறோம். ஏனென்றால், கொழும்பில் சுற்றிலும் வைத்தியசாலை இருக்கின்ற சூழலில் பால் தொழிற்சாலையை வைத்திருக்க முடியாது. பால் கொள்வனவு நிறுத்தப்பட்டிருப்பதாக வதந்தியைப் பரப்பியிரு கிறார்கள். ஆனால், பாற்பண்ணையாளர்கள் கொண்டு வந்தால் மில்கோ நிறுவனம் கொள்வனவு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை."

"உங்களுடைய புதிய திட்டங்களால் வதந்தியைப் பரப்புகிறார்களா, அல்லது என்ன காரணம் என்று கண்டறிந்திருக்கிaர்களா?"

"ஹட்டனில் பாலை ஊற்றினார்கள் அல்லவா, அதற்கு முதல் நாளில் இருந்து நான் கொட்டகலையில்தான் இருந்தேன். ஏன் என்னை வந்து சந்திக்கவில்லை? என்னிடம் முறையிட்டிருந்தால் நான் உடனே நடவடிக்கை எடுத்திருப்பேன். இதெல்லாம் அரசியல் பிரசாரத்திற்காக சிலர் செய்யும் வேலை. அதனைப் பற்றியெல்லாம் நான் வருத்தப்படுவதில்லை. எங்காவது பிரச்சினை என்றால் எனக்குத் தெரியும். அன்று பண்டாரவளையில் ஒரு பிரச்சினை. ஊவாவில் உள்ள சகல பாற்பண்ணையாளர்களையும் சந்தித்துவிட்டேன். அதுபோல் சப்ரகமுவ, நுவரெலியா பாற்பண்ணையாளர்களைச் சந்தித்தேன். அடுத்ததாக பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, புத்தளம், குருணாகல் முதலான பகுதிகளில் உள்ள பாற்பண்ணையாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினையை இனங்கண்டு தீர்த்து வைக்கவிருக்கிறேன்.

அரசியல் தேவைக்காக இதனையொரு பிரச்சி னையாக்கி வேடிக்கை பார்ப்பதற்குச் சிலர் செயற்படுகிறார்கள்."

"மலையகத்தின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்துகூட பட்டதாரிகளைக் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்தீர்கள். அதேநேரம் தற்போது மலையகக் கல்வித்துறை மோசமடைந்து வருவதாகவே தகவல்கள் வருகின்றன. மலையகக் கல்வித்துறையில் அதிபர், ஆசிரியர்கள், பணிப்பாளர்கள் அரசியல் தலையீடு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இஃது உண்மையா? இதுபற்றி என்ன சொல்கிaர்கள்?

"அரசியல் தலையீடு இருக்கிறதா, அல்லது அவர்கள் அரசியலில் ஈடுபடுகிறார்களா?"

"அப்படியும் வைத்துக்கொள்ளலாம்..........."

"..இல்லை.. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுமாதிரி ஒன்று அரசியல் தலையீடு இருக்கிறதென்று வெளிப்படையாகச் சொல்லச் சொல்லுங்கள் நான் நடவடிக்கை எடுக்கிறேன். காங்கிரஸார் யாரும் அரசியல் தலையீடு செய்வதில்லை. அதேநேரம் அவர்கள் அரசியலில் ஈடுபடுகிறார்களா என்பதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை திருமதி சிவராஜாதான் பொறுப்பாக இருக்கிறார். அவருக்கு சுதந்திரமான முறையில் இயங்குவதற்குப்பூரண அதிகாரம் கொடுத்திருக்கிறேன்.

அதேநேரம் எங்கள் எம்பிமாரோ மாகாண சபை உறுப்பினர்களோ எந்தத் தலையீடும் செய்வதில்லை. சில தலையீடுகள் வரும்போது நாங்களும் முட்டுக்கட்டைகளைக் கொடுத்திருக்கிறோம். அதேநேரம் இன்றைக்கு பாடசாலைகளைப் பொறுத்தளவில் ஒன்றை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள், ஆங்கிலத்தில் நல்ல பெறுபேற்றைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஆசிரியர்களையும் அதிபர்களையும் முதன்முதலாகப் பாராட்டியது காங்கிரஸ்தான்.

எல்லோரும் வாய்கிழியப் பேசுவார்கள் அவர்களை அங்கீகரித்துப் பாராட்டியது காங்கிரஸ்தான். இதனைத் தலையீடு என்று சொல்ல முடியுமா? அவர்களை அங்கீகரித்தால்தான் அடுத்த முறை இன்னும் சிறந்த பெறுபேற்றைக் கொண்டு வருவார்கள். பாடசாலைகளுக்குத் தேவையான கட்டடங்கள் முதற்கொண்டு அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுத்திருக்கிறோம். ஆகவே, பாடசாலை எப்படி இருக்கிறது என்று போய் பார்ப்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா? அது தலையீடா?

"சில அதிபர், ஆசிரியர்கள் தமக்கு அரசியல் பின்புலம் இருப்பதாகக் கூறிக்கொண்டு கட்டுப்படாத ஒரு நிலைமை காணப்படுவதாகச் சொல்கிறார்களே.?"

"நான் ஒரு பிரதேசத்திற்குப் போயிருந்தபோது ஒரு மாணவன் என்னிடம் வந்து முறைப்பாடொன்றைச் செய்தார். "சார், நேற்று நான் எங்கள் அதிபரைப் பார்ப்பதற்காகப் போயிருந்தேன். அவர் என்னை தன் சாப்பாட்டுக் கோப்பையைக் கழுவுமாறு சொன்னார். நான் இதற்கு வரவில்லை. படிப்பதற்கே வந்தேன் என்று மறுமொழி சொன்னதால், எனக்குப் புலமைப் பரிசில் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாக எனது விடுகைப்பத்திரத்தைத் தந்துவிட்டார் சார்" என்று. இதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிaர்கள்? அந்த மாணவன் கோப்பை கழுவுவதற்கா அங்கு சென்றார்? அதனால், குறித்த அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு திருமதி சிவராஜாவிடம் கூறினேன்."

"அதுதான் தமக்கு அரசியல் பக்கபலம் இருப்பதாகக் கூறிக்கொண்டு சில அதிபர்கள் தாம் நினைத்ததைச் செய்யப்பார்க்கிறார்கள் என்றுதான் குற்றஞ்சாட்டுகிறார்கள்."

"இப்படித்தான் சில இடங்களில் நடக்கின்றது. ஆனால், சில அதிபர், ஆசிரியர்கள் பிள்ளைகளை முன்னுக்குக்கொண்டு வர வேண்டும் என்று மிகத் தீவிரமாகப் பாடுபடுகிறார்கள். தங்களுடைய கடமை நேரத்தைவிடவும் மேலதிகச் செலவிட்டுப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார்கள். அஃது உங்களுக்கே தெரியும் நான் பெயர் சொல்லத் தேவையில்லை. ஹட்டன், கொட்டகலை, நாவலப்பிட்டி, மாத்தளை, கண்டி எனப் பல பாடசாலைகளில் இப்படி பாடுபடுகிறார்கள். ஒரு சிலர்தான் மாறி நடக்கிறார்கள்."

"மலையகத்தில் ஒரு பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டும் என்று பேராசிரியர் சந்திரசேகரன் போன்றோர் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள். இது சாத்தியப்படுமா, எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்களா? உங்களின் நிலைப்பாடு என்ன?"

"என்னவானாலும் அறிக்கைகள் விடுகிறார்கள். மலையகப் பல்கலைக் கழக விடயத்தில் எனக்கெனக் குறித்தொதுக்கப்பட்ட பங்களிப்பு இருக்கிறது. எனக்கெனத் தனிப்பட்ட உரிமை இருக்கிறது. ஆனால், கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கான பணிகளை முன்னெடுப்பேன்."

"கட்சி தீர்மானித்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?"

"நிச்சயமாக. அதன் பின்னரேயே அதற்கான பணிகளை முன்னெடுப்பேன்."

"அப்படியென்றால், மலையகப் பல்கலைக் கழகம் சாத்தியம் என்கிaர்கள்?"

"நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு"

"மலையகப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து பஸ் வண்டிகளைக் கொண்டு வந்தீர்கள். ஆனால், சில பஸ் வண்டிகள் உடைந்து ஆங்காங்கே அப்படியப்படியே கிடப்பதாகச் சொல்கிறார்களே, உண்மையா?"

"பஸ் உடைந்து எங்காவது அப்படியப்படியே கிடக்கிறதென்று யாரையாவது சொல்லச்சொல்லுங்கள். சொல்கிறவர் வாய்க்கு மெல்லுவதற்கு ஏதாவது வேண்டும் என்பதற்காக எதனையாவது சொல்வார்."

"சேவை எப்படி இருக்கிறது?"

"பஸ் சேவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது".

"மத்திய மாகாணத்தில் கல்வித்துறையில் ஏதாவது மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கம் இருக்கிறதா?"

"அப்படியென்றால்...?

"மத்திய மாகாணத்தில் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கு ஏதாவது புதிய திட்டங்கள், மாற்றங்களைச் செய்யும் நோக்கம் இருக்கிறதா?"

"ஆமாம், அனுஷா அக்காவின் மேசையை வாஸ்து முறைப்படி மாற்றவிருக்கிறேன்.."

"இல்லை, மாற்றங்களைச் செய்யவிருக்கிaர்கள் என்று சில தகவல்கள் வெளியாகினவே?"

" அதுதான், நான் அன்று சென்றேன். அக்காவின் மேசை வாஸ்துப்படி சரியாக இல்லை. அதனால் அதனை மாற்றிச் சரியாகப் போடலாம் என்றிருக்கிறேன்.." என்று எம்மை அமைச்சர் மடக்கியபோது, பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர், அவவையல்ல, மேசையைத்தான் மாற்றுவீர்கள்? என்றதற்கு,

"வாஸ்து சரியில்லை என்றால் மேசையைத்தானே மாற்றலாம்..இல்லையென்றால், கதவைக் கழற்றிப் போட வேண்டும்" என்று பிடிகொடுக்காமலேயே பதில் அளிக்கிறார் அமைச்சர் மாற்றம் இல்லை என்பதை உறுதிப்படுத்துபவராய்..

"அரசாங்கத்துடன் மனக்கசப்பான ஒரு நிலை வந்து வந்து போகிறது. அண்மையில் பதவியை இராஜினாமா செய்வதாகக்கூடக் கூறப்பட்டது. ஏன் இப்படியான நிலை ஏற்படுகிறது?"

"உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் மனக்கசப்பு வருவதில்லையா, அதுபோல்தான் இதுவும்."

"இலங்கையில் ஊடகச் சுதந்திரம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிaர்கள்?"

"என் வாயைக் கிளறாதீர்கள். அந்தக் கேள்வியைத் தவிர்ப்பது நல்லது. ஊடகச் சுதந்திரம், சுதந்திரம் என்கிறோம். ஊடகத்தின் முக்கிய பணி சமூகத்தை மேன்மையுறச் செய்வதுதான். அதனைவிட்டுவிட்டு வெளிப்படையாகக் கூறினால், அடுப்பில் பூனை படுத்துறங்குகிறது என்று சில பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.

எங்காவது ஓர் அடுப்பில் பூனை படுத்திருப்பதைக் காண்பியுங்கள். பிறகு சொல்வீர்கள் இடிந்த கட்டடத்தைப் பாருங்கள் என்று. சில இடங்களில் வீடு கட்டிக்கொடுத்தோம். 3500 வீடுகளை விற்றிருக்கிறார்கள்.

வீடுகள் கூடுதலாக இருக்கவும்தானே விற்பனை செய்திருக்கிறார்கள்.. நீங்கள் பிரசுரிப்பது சரி. ஒரு தொழிலாளியின் கருத்தைப் போடுவதைப்போல், அரசியல் ரீதியாக அப்படிச் செய்கிறார்கள். அதேநேரம் எங்களின் கருத்தையும் அறிந்து பிரசுரிக்கலாம் இல்லையா? நாங்கள் விளக்கமளிப் போமல்லவா.. அதனால்தான் சொன்னேன் வாயைக் கிளறாதீர்கள் என்று."

"சில ஊடகவியலாளர்களுக்கு ஓர் ஆதங்கம் இருக்கிறது...அதாவது காங்கிரஸ் தலைவரைப் பிடிக்க முடியவில்லை என்று..இதற்கு என்ன சொல்கிaர்கள்?"

"என்னை ஏன் பிடிக்க வேண்டும்? எல்லா இடத்திலும் காங்கிரஸ் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். லிந்துலையில் இருப்பவரிடம் கேட்டாலும் ஒன்றுதான் ஹட்டனில் இருப்பவரிடம் கேட்டாலும் ஒன்றுதான். நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்.."

"இருந்தாலும், அமைச்சர், தலைவர் என்ற ரீதியில் உங்களின் கருத்தை அறிய முற்படலாமே..?

"இல்லை, நான் கூறுவதைத்தான் என் பிரதிநிதிகளும் சொல்வார்கள். அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது."

"மலையகத்தில் அரசியல் செயற்பாடு இல்லை என்ற ஒரு கருத்து கல்வி கற்றோர் மத்தியில் நிலவுகிறது. ஐயாவின் காலத்தில் காங்கிரஸ் அரசியல் பிரிவு செயற்பட்டது. தற்போது முற்று முழுதான தொழிற்சங்கச் செயற்பாடு மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது என்கிறார்கள்.. இதைப்பற்றி..?"

"இல்லை. இப்போது அரசியலும் தொழிற்சங்கமும் கலந்து முன்னெடுக்கப்படுகிறது. தொழிற்சங்கத்திற்கு அரசியல் அதிகாரமும் அவசியம். ஆகவே இரண்டும் ஒன்றாகப் பயணிக்கிறது."

"அரசாங்கத்திற்கும் காங்கிரஸ¤க்குமான உறவு தற்போது எப்படி இருக்கிறது, அபிவிருத்திப்பணிகள் எல்லாம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.?"

"அரசாங்கத்திற்கும் எமக்குமான உறவு நன்றாக இருக்கிறது. சில பத்திரிகையாளர்கள் அதற்குப் புகைபோட முயற்சிப்பதும் எனக்குத் தெரியும்.

கடந்த நடவடிக்கைகளையெல்லாம் பார்த்தீர்கள் என்றால் அரசாங்கத்திற்கும் எமக்குமான உறவு எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்."

"மலையகத்தில் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றிப் பேசப்படுகிறது. இதுபற்றி தங்களின் அபிப்பிராயம்?

"யார் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். ஏழுபேர் சேர்ந்தால் ஒரு தொழிற்சங்கமே அமைக்கலாம். அஃது அவரவர் விருப்பம்."

"திகாம்பரம் போன்றவர்களுடன் காங்கிரஸ் உறவு எப்படி இருக்கிறது?"

"யார் அவர்கள்? " ,” எனக்கு அவரைத் தெரியாது.”

"நுவரெலியாவில் காங்கிரஸ¤க்கே கூடுதல் ஆசனங்கள் வரும். இப்போது அது பிரிந்துள்ளதா?

"இங்கே பாருங்கள்! ஐயாவின் காலத்தில் இருந்தே காங்கிரஸ¤க்கு மூன்று ஆசனங்கள் வரும். அதே ஆசனங்கள் கிடைத்துள்ளன. புதியவராக ராஜதுரையும் வந்திருக்கிறார். ராதாகிருஷ்ணனையும் எடுத்தோம். அவர் தாவிவிட்டார். யார் யாரை காங்கிரஸ் நிறுத்தியதோ அவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள்."

"ராதாகிருஷ்ணனும் நந்தகுமாரும் விலகிச் செல்வதற்கு என்ன காரணம்?"

"அஃது அவர்களின் சொந்தக் காரணம். இவ்வளவுகாலம் சேவை செய்யக்கிடைத்தமைக்கு நன்றி என்று எழுதிக்கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள். அதற்கு நான் என்ன செய்வது?"

"அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்ததா?"

"காங்கிரஸில் ஒரேயொரு பிரச்சினை. மிகவும் பெருந்தன்மையாக இருக்கும். ஐயாவின் காலத்தில் இருந்தே மிகவும் பெருந்தன்மையாக நடந்து வருகிறது." என்று கலகலப்பான பெருந்தன்மையுடன் முத்தாய்ப்பு வைக்கிறார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.