ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

எகிப்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விற்பனை இடைநிறுத்தம்

எகிப்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விற்பனை இடைநிறுத்தம்

அடக்குமுறைக்கு பயன்படுத்தப்படும் ஆயுத உபகரணங்களை எகிப்துக்கு ஏற்றுமதி செய்யும் அனுமதிப் பத்திரத்தை ஐரோப்பிய ஒன்றியம் இடை நிறுத்தியுள்ளது.

எனினும் எகிப்துக்குத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்க அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

எகிப்தில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் பிரஸல்சில் நேற்று முன்தினம் நடத்திய அவசர கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைகளுக்கான தலைவர் கதரின் அஷ்டன் அறிவித்தார். எகிப்து மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் தமது வலுவான ஆதரவை வழங்குகிறது என்று அஷ்டன் வலியுறுத்தினார்.

எகிப்தில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளை நிறுத்தி தேசிய அளவிலான பேச்சுவார்த்தைக்கு அனைவருக்கும் வழிவிடுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய முடியும் என அஷ்டன் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் எகிப்துக்கு இராணுவ உதவிகளை வழங்கும் பிரிட்டன் ஏற்கனவே தனது ஒரு சில உதவிகளை நிறுத்திக் கொண்டுள்ளது.

கதரின் அஷ்டன் கடந்த மாதம் எகிப்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சமரச முயற்சிகளில் ஈடுபட்டார். இதன் போது அவர் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹம்மட் முர்சியையும் சந்தித்தார். “அவர்கள் அழைப்பு விடுத்தால் நான் மீண்டும் அங்கு செல்ல தயாராக உள்ளேன்” என்று பிரஸல்ஸ் கூட்டத்திற்கு முன்னர் அஷ்டன் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் எகிப்துக்கு 5 பில்லியன் யூரோக்களை வழங்க இணங்கி யிருந்தது. எனினும் ஊழல் மோசடிகள் காரணமாக அவைகளில் பெரும் தொகை முடக்கி வைக்கப்பட்டது.

எனினும் பிரஸல்ஸ் கூட்டத்தில் சுவீடன் வெளியுறவு அமைச்சர் கார்ல் பில்ட், எகிப்து வன்முறையில் பெரும் பங்கு அந்நாட்டு அரச படைக்கு உள்ளது என குற்றம் சாட்டினார். ஏற்க முடியாத வன்முறைகள், ஒடுக்குமுறைகள் இடம்பெற்றுவருவதாகக் கூறிய அவர் அது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் குரலெழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் வரி வழங்குவோரது பணத்தை படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறுபவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும் கார்ல் பில்ட் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்டுக்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மூன்று ஆண்டுகளில் 450 மில்லியன் யூரோக்களை எகிப்துக்கு வழங்கியுள்ளது. எனினும் இந்த நிதிகள் எகிப்து அரசுக்கு வழங்கப்படவில்லை. இவை அடிப்படை வசதிகளை சீர் செய்யும் திட்டங்களுக்கே வழங்கப்பட்டன.

எகிப்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவ உதவிகள் ஆண்டுக்கு 140 மில்லியன் யூரோ பெறுமதியானதாகும். இதனுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா எகிப்துக்கு வழங்கும் 1.3 பில்லியன் டொலர் உதவி மிக அதிகமாகும். தவிர அமெரிக்கா ஏனைய உதவிகளாக 250 மில்லியன் டொலர்களை எகிப்துக்கு வழங்குகிறது.

மறுபுறத்தில் இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைட் ஆகிய நாடுகள் அனைத்தையும் விட அதிக தொகையாக 12 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கி இருந்தது. அத்துடன் மேற்கு நாடுகள் நிறுத்தும் நிதியுதவிகளை ஈடுகட்டுவதாகவும் சவூதி அரேபியா வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிட த்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி