ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

நபியவர்களின் பிரார்த்தனை

நபியவர்களின் பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது மகத்தான வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடமே கேட்க வேண்டுமே தவிர அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்கக் கூடாது. எனவே பிரார்த்தனை என்பது, அல்லாஹ்விடத்தில் தனதும் ஏழ்மையை, தேவையை வெளிக்காட்டி, அடிமைத் தனத்தை வெளிக்காட்டி அவனிடமே கையேந்துவதாகும். “பிரார்த்தனை என்பது வணக்கமாகும்” என நபியவர்கள் கூறினார்கள்.

(நூல்: திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்து அடிபணிந்து அல்லாஹ்விடம் தனது ஏழ்மையை வெளிக்காட்டுபவர்களாக இருந்தார்கள். அன்னாரின் பிரார்த்தனையிலிருந்து; இறைவா! எனது விடயங்களுக்கு பாதுகாப்பளிக்கும் எனது மார்க்கத்தை சீர்படுத்துவாயாக! எனது வாழ்வளிக்கும் இவ்வுலகத்தை எனக்கு சீர்படுத்துவாயாக நான் மீளயிருக்கும் எனது மறுமையை எனக்கு சீர்படுத்துவாயாக! எல்லாவிதமான நலவுகளிலும் எனக்கு வாழ்வை நீளமாக்குவாயாக! எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெற மரணத்தை எனக்கு தருவாயாக!

(நூல்: முஸ்லிம்)

உள்ளரங்கத்தையும் வெளியரங்கத்தையும் அறிந்தவனே! வானம் பூமியைப் படைத்தவவே! வணக்கத்திற்குரியவன் உண்மையான இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகின்றேன். உன்னைக் கொண்டு எனது ஆத்மாவின் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கு, அதன் இணை வைப்பிலிருந்தும், மற்றும் எனக்கு ஒரு தீங்கை ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் அல்லது அத்தீங்கை மற்றொரு முஸ்லிமுக்கு தள்ளிவிடுவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் எனக் கூறுவார்கள்.

(நூல்: அபூ தாவூத்)

மேலும் “இறைவா! நீ தடுத்து ஹறாமாக்கியவைகளை விட்டும் ஹலாலானவற்றைக் கொண்டு எனக்கு போதுமாக்கிவிடு! உனது சிறப்பின் மூலம் நீ அல்லாத வேறு ஒருவனிலிருந்து என்னைத் தேவையற்றவனாக்கி விடு!’ எனவும் பிரார்த்திப்பார்கள். (நூல்:- திர்மிதி)

இறைவா! எனது பாவங்களை மன்னித்து, எனக்கு அருள் புரிந்து விடு! உயர்வான நேசனிடம் என்னைச் சேர்த்துவிடு

(நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நபியவர்கள் மகிழ்ச்சிகரமான நேரத்திலும், துக்ககரமான நேரத்திலும் அல்லாஹ்லிடம் அதிகமாகப் பிரர்த்திப்பார்கள். பத்ர் யுத்தத்தின் போது, நபியவர்களின் மேலாடை கீழே வழுகி விழும் வரைக்கும் இணைவைப்பார்கள் தோல்வி கண்டு முஸ்லிம்கள் வெற்றி கொள்ள பிரார்த்தித்தார்கள். நபியவர்கள் தனக்காக மட்டுமல்லாது, தனது குடும்பத்தினருக்காக, தனது தோழர்களுக்காக, தனது சமூகத்துக்காகவும் பிரார்த்திக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

பிரார்த்திக்கும் முன் தயார்படுத்தி இறைவனிடம் கேட்கும் விடயங்களைப் பட்டியலிட வேண்டும். எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே விடயத்தை திரும்பத் திரும்ப கேட்பதை தவிர்க்க வேண்டும். புதிய புதிய வேண்டுதல்களை உட்சேர்க்கவேண்டும். பிரார்த்திக்கும் போது ஆரம்பமாக இறைவனைப்புகழ வேண்டும். பின்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பின் தான் விரும்பியதை அல்லாஹ்விடம் கேட்கலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி