ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

துனீ'pயாவில் அரசியல் இழுபறி ஜனாதிபதியின் கட்சி அமைச்சர்கள் விலகல்

துனீ'pயாவில் அரசியல் இழுபறி ஜனாதிபதியின் கட்சி அமைச்சர்கள் விலகல்

பிரதமரின் முடிவுக்கு ஆளும் கட்சி எதிர்ப்பு

துனீஷியாவில் ஆளும் இஸ்லாமியவாத கூட்டணியிலுள்ள ஜனாதிபதி மொன்கப் மர்சுக்கியின் மதச் சார்பற்ற கட்சியின் மூன்று அமைச்சர்களும் அமைச்சுப் பதவிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

துனீஷிய அமைச்சரவையில் இஸ்லாமியவாதிகளின் கையிலுள்ள வெளியுறவு மற்றும் நீதி அமைச்சுகளில் மாற்றம் கொண்டுவர விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையிலேயே ஜனாதிபதியின் கட்சி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. எனினும் மேற்படி கட்சி அரசிலிருந்து வெளியேறுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே துனீஷியாவின் பிரதான எதிர்க் கட்சி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிக்கும் நிலையிலேயே ஆளும் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. எனினும் அடுத்த தேர்தல் வரை கட்சி சார்பற்ற நிபுணர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படும் என பிரதமர் ஹம்தி ஜபலி கடந்த வாரம் அறிவித்தார்.

எனினும் பிரதமரின் கட்சியான அமைச்சரவையில் அதிக இடங்களை பிடித்திருக்கும் இஸ்லாமியவாத அன்ஹதா கட்சி இந்த முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இதில் இஸ்லாமியவாதிகளின் கைகளில் உள்ள வெளியுறவு மற்றும் நீதி அமைச்சுகள் எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை என குற்றம்சாட்டிய ஜனாதிபதியின்மைய இடதுசாரி குடியரசு கட்சி அந்த அமைச்சுகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என அண்மையில் கெடுவிதித்திருந்தது.

இந்நிலையில் தமது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் தமது வசமிருக்கும் மூன்று அமைச்சுப் பதவிகளில் இருந்து வெளியேற இருப்பதாக மேற்படி கட்சியின் உறுப்பினர் சமிர்பென் அமொர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராய்ட்டருக்கு கூறியிருந்தார்.

துனீஷிய மக்கள் எழுச்சிக்கு பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அன் ஹதா கட்சிக்கு அடுத்து மைய இடதுசாரி குடியரசு கட்சி 214 ஆசன ங்களில் 29 ஆசனங்களை வென்றது. இந்நிலையில் மேற்படி கட்சி அரசிலிருந்து வெளியேறினால் அங்கு மேலும் பதற்றம் அதிகரிக்கும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அன்ஹதா அரசு விலக வேண்டும் என நான்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த எதிர்க் கட்சிகள் துனீஷியாவுக்கான புதிய அரசியலமைப்பை வரையும் குழுவிலிருந்தும் வெளியேறியுள்ளன. மறுபுறத்தில் அரசுக்கு எதிராக மதச் சார்பற்றோர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்ட ங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட எதிர்க் கட்சி தலைவர் பிளைட்டியின் இறுதிக் கிரியை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதில் பங்கேற்ற இலட்சக் கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்நிலையில் இவ்வார மத்தியில் நிபுணர்களைக் கொண்ட புதிய அரசை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அதனை பாராளுமன்றம் நிராகரித்தால் பதவி விலகுவதாகவும் பிரதமர் ஜெபலி எச்சரித்துள்ளார். ஆனால் கூட்டரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அன்ஹதா கட்சியின் ஏனைய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி