வரு. 78 இல. 120

ஹிஜ்ரி வருடம் 1431 ஜ.ஆஹிர் பிறை 11
விகிர்தி வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, MAY 25, 2010

படைப்புகளில் ஏற்படும் மயக்கம்

படைப்புகளில் ஏற்படும் மயக்கம்

கிருங்கை சேதுபதி

கருத்தொற்றுமை கொண்ட சமகாலப் படைப்பாளி களின் படைப்புகளைத் தேடிப் படிக்கிற போதும், தொகுக்கின்ற போதும், எது, யாருடைய படைப்பு என்பதில் மயக்கம் தோன்றிவிடுவது உண்டு.

வடிவத்தாலும் உள்ளடக்கத்தா லும் தவிர்க்க இயலாத நிலையில் தோன்றும் இத்தகு மயக்கங்கள் தீர்க்கப்பட்டுத் தெளிவு படுத்தப்பட்டு உண்மை உணர்த்தப்பட்ட பிறகும், அவை குறித்த பதிப்பாக்கங்களில் இத்தவறுகள் களையப்படாமல் இருப்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்துவரும் வருந்தத்தக்க பதிவாகும். இத்தகு நிலைக்கு ஆளான படைப்பாளிகள் மகாகவி பாரதியாரும், பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர்.

ஆங்கில ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தப்பி, புதுவையில் இருந்து இதழியல் பணிகளைத் தொடரப் புதுச்சேரி புகுந்தவர் பாரதியார். புதுவை வந்த இரண்டாமாண்டுக்குள்ளேயே தமது இனிய தோழரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஸ்ரீ அரவிந்தரைப் புதுவைக்கு வரவழைத்துவிட்டார். 1910 இல் புதுவைக்கு வந்த அரவிந்தரை, தமது நண்பர்களின் துணையோடு வரவேற்று, கலவை சங்கரஞ் செட்டியார் இல்லத்தில் பாதுகாப்போடு தங்க வைத்த பாரதியார். ஒற்றர்களின் கண்களுக்கு அகப்படாமல் மாலை தொடங்கி நள்ளிரவு வரையிலும், அரவிந்தரோடு உரையாடுவதையும், வேத இலக்கிய ஆய்வுகள் நடத்துவதையும் தமது அன்றாடப் பணிகளாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், பாரதி கவிதாமண்டலத்தில் தம்மை இணைத்துக் கொண்ட புதுவைத் தமிழாசான், பாரதிதாசனாகிப் புரட்சிக் கவிதைகள் பல படைத்தவர். பாரதியாரின் தலைமைச் சீடர்களுள் தன்னிகரற்றவர். பாரதியாருடன் அரவிந்தரைச் சந்தித்தவரும் கூட. அதன் அடிப்படையில் பாரதிதாசன், அரவிந்தர் மீது ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். ‘அரவிந்தப் பாம்பு’ என்ற அக் கவிதை இதுவரையில் பாரதி தாசன் கவிதைகள் நூலில் இடம் பெறவில்லை. ஆனால், பாரதி யார் கவிதைகளில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

எனவே, அரவிந்தப் பாம்பு என்ற தலைப்பில், பாரதியார் கவிதைகளில் இடம்பெறும் பாடல் உண்மையில் பாரதியாரால் எழுதப்பெறாத கவிதை ஆகும். இப்பாடல், சி. சுப்பிரமணிய பாரதி எழுதி இதுவரை வெளிவராத பாடல், பெதூரன் தேடி உதவியது என்ற குறிப்புடன் 1942 ஆம் ஆண்டு கலைமகள் பொங்கல் மலரில் வெளிவந்த பாடல் இது. உண்மையில் இது பாரதிதாசனால் எழுதப்பட்ட பாடலாகும்.

அதற்கான சான்று பின்வருமாறு கலைமகளில் வெளிவந்த அப்பாடலைப் படித்துவிட்டு, ஆனந்த விகடன் இதழின் புதுவை வட்டார விற்பனையாளரும், பாரதிதாசனின் நூல்களை முற்காலத்தில் வெளியிட்டவருமான காசி ஈ. லட்சுமணப் பிரசாத் என்பவர் பாரதிதாசனிடம் ஓடிவந்து, இதைப் பாருங்க வாத்தியாரே. உங்க பாட்டை பாரதி எழுதியதாகப் போட்டிருக்காங்களே என்று கூறிக் கலைமகள் இதழைக் காட்டிவிட்டுத் தம் கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகைத் தொகுப்பையும் பிரித்து வைத்தார்.

புதுவையில் மிகப் பழைய நாளில் வெளிவந்த கற்பகம் என்ற இலக்கிய இதழின் தொகுதி அது. அதிலே பாரதிதாசன் எழுதியிருந்த பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதே பாடல்தான் கலைமகள் இதழில் பாரதியார் எழுதி இதுவரை வெளிவராத என்ற குறிப்புடன் வெளியாகியிருந்தது. இதைப்பற்றிக் கலைமகள் நிறுவனத்தார்க்கு லட்சுமணப் பிரசாத் மடலும் எழுதினார். கலைமகள் எதுவும் மறுமொழி எழுதவில்லை என்று குறிப்பிடும் மன்னர் மன்னன் (பாரதிதாசனின் மகன்) அப்பாடல் முழுவதையும் தருகிறார். அப்பாடல் இதோ

ஆடு பாம்பே எழுந்தாடு பாம்பே

அன்னை துயில் நீங்க நலம் துன்னப்பாம்பே (ஆடு)

உண்மை நிலை கண்டுறங்கும்பாம்பே உன்

உலகத்தைச் சமன்செய்ய எண்ணுபாம்பே

இப்பாடலுள் உண்மை நிலை கண்டுறங்கும் பாம்பே எனத் தொடங்கும் பகுதியின் நான்கு அடிகளும், ஆதிசிவன் மேலிருந்த நாகப்பாம்பே எனத் தொடங்கும் பகுதியின் நான்கு அடிகளும் பாரதியார் பாடலாக வெளியிடப்பட்டவையாகும்.

இது தொடர்பாக மேலும் ஒரு கருத்தை மன்னர் மன்னன் தமது கருப்புக்குயிலின் நெருப்புக் குரல் நூலில் தருகிறார். பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியின் (ஈரோடு குடியரசுப் பதிப்பான 1944 ஆம் ஆண்டு) மூன்றாம் பதிப்பின் ஆசிரியர் வாழக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இவரது பாட்டுக்கள் நமது பாரதியாரின் பாடல்கள் போலவே இருக்கும். பாரதிதாசன் எழுதிய பாம்புப் பாட்டை பாரதியாரின் நண்பரான ஓர் ஆசிரியரே பாரதியார் பேரால் தம் பத்திரிகையில் வெளியிட்டது சிலருக்கேனும் ஞாபகமிருக்கலாம் என்கிறது அந்தக் குறிப்பு.

இதன் அடிப்படையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் நூற்றாண்டுப் போதில் வெளியிட்ட பாரதி பாடல்கள், ஆய்வுப்பதிப்பில் இப்பாடலைத் தந்து ‘இப்பாடல் பாரதியார் இயற்றியதன்று பாரதிதாசனார் பாடல் என்று ஆய்வாளர்கள் தெளிவுறுத்தியுள்ளனர் என்ற குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது.

எனினும் இப்போது வரை வெளிவந்து கொண்டிருக்கும் பாரதியார் கவிதைகள் தொகுப்பில் தவறாது இப்பாடல் இடம்பெற்று வருவதோடு, பாரதிதாசன் கவிதைகள் தொகுப்பில் இப்பாடல் இன்னும் சேர்க்கப்படாமலும் இருக்கிறது.

இனி வரும் காலத்திலேனும் இத்தவறு திருத்தப்பட வேண்டியது இன்றியமையாதது.

ஆகஸ்ட் 15ம் திகதி அரவிந்தர் பிறந்த தினத்தையொட்டி பாரதியாரும், அரவிந்தரைப் புகழ்ந்து தமிழில் ஒரு வாழ்த்துப் பாடல் பாடினார். பின்னர் அதை அரவிந்தருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார். அதைக்கேட்டு அரவிந்தர் மகிழ்ச்சியடைந்தார். என்று பாரதியாரைப் புதுவையில் நேரில் அறிந்து பழகியபடி விஜயராகவாச்சாரியார் குறிப்பிடுகிறார்.

ஆண்டு சுட்டப்பெறாத இச்செய்தியின் மூலமாக பாரதியார், அரவிந்தரைப் பாடியதும் உண்மை என்று தெரியவருகிறது. ஆகவே அந்த ஆண்டோடு, பாரதியார் பாடிய அந்தப் பாடலும் பாரதியன்பர்களின் தேடலுக்கு உரியதாக அமைகிறது. தேடினால் கண்டடைய முடியும் என்பது நம்பிக்கை.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •