புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
சரத் பொன்சேகாவின் கருத்து ஆழமானது; இது ஆரம்பமே, இன்னும் பல வெளிவரும்

சரத் பொன்சேகாவின் கருத்து ஆழமானது; இது ஆரம்பமே, இன்னும் பல வெளிவரும்

அமைச்சர் மனோ கணேசன் நம்பிக்கை

அமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன். இது ஒரு சிறு கதை அல்ல, ஒரு தொடர்கதை. இதையே நாங்கள் சொன்னால் இட்டுக்கட்டிய புனைகதை. அதையே அவர் சொல்லும்போது அது உண்மைகளை புட்டுப் புட்டு வைக்கும் வாக்குமூலம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எங்கள் பத்து வருட போராட்ட பணிகளின் காரணமாக மஹிந்த அரசு வீழ்ச்சியடையும் சூழல் உருவான பின் பலர் எங்களோடு இணைந்து இந்த அரசின் உருவாக்கத்துக்கு ஒத்துழைத்தார்கள். இன்னமும் சிலர் மஹிந்தவுடன் இருந்துவிட்டு நாங்கள் இந்த அரசை உருவாக்கிய பின் எங்களுடன் வந்து இணைந்துக்கொண்டார்கள். இன்னும் சிலர் இன்னமும் மகிந்தவுடன் குடித்தனம் செய்கிறார்கள். இவர்களை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். இந்த அரசை உருவாக்கிய முதல் ஐந்து பேரில் நானும் ஒருவன். நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் பட்டபாட்டின் பிரதிபலன்தான் இந்த அரசாங்கம்.

இன்று இந்த அரசை உருவாக்கி, மஹிந்த கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பியதில் மாத்திரம் நின்று விடாமல் யுத்தம் நடத்திய இராணுவ தளபதியின் வாயின் மூலமாகவே உண்மைகளை எங்கள் அரசு வெளியே கொண்டு வருகிறது. யுத்தத்தை தலைமை தாங்கி நடத்தியதில் தனக்கு உள்ள நியாயமான பெருமையை கோரும் அவர், அந்த யுத்தத்தின் போது தனது கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் மீறி நடந்த மானிட உரிமை மீறல்களையும், அதனால் முழு நாட்டுக்கும், முழு இராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியையும் பற்றி மனந்திறந்து சொல்லுகிறார். உலகம் கேட்க தொடங்கியுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.