இந்தியாவில் நடைபெற்றுவரும் 6வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முதற் சுற்று
ஆட்டங்கள் இன்று இரவு 7.00 மணிக்கு இமாச்சல் பிரதேச நகரான தர்மசாலாவில் நடைபெறும்
பங்களாதேஷ்- ஓமான் அணிகளுக்கிடையில் நடைபெறும் 12வது போட்டியுடன் நிறைவுக்கு
வருகின்றன.
பிரதான சுற்றான சுபர்-10 சுற்று நாளை மறுதினம் 15ம் திகதி செய்வாய்க்கிழமை இந்தியா
- நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாக்பூரில் நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகி
தொடர்ந்து நடைபெறவுள்ளன.
இம்முறை சுபர்-10 சுற்றில் மொத்தம் 10
அணிகள் கலந்து கொள்கின்றன. குழு-1, குழு-2 என
இரு குழுவாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒரு குழுவில் 5 அணிகள்
இடம்பெறுகின்றன. குழு-1ல் இலங்கை. தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள்,
இங்கிலாந்து அணியுடன் முதல் சுற்றில் ஏ பிரிவில் வெற்றி பெறும் அணியும் இடம்
பெறுகின்றன. குழு-2 இல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதல்
சுற்றில் பி பிரிவில் வெற்றி பெறும் அணியும் இடம்பெறுகின்றன.
இரு பிரிவுகளிலுமுள்ள 5 அணிகளும் அப்பிரிவிலுள்ள மற்றைய அணிகளுடன் ஒவ்வொரு
போட்டியில் மோத வேண்டும். அவ்வடிப்படையில் இச்சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா நான்கு
போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள்
அரையிறுதியில் மோதும். குழு-1ல் முதலிடம் பெறும் அணி குழு-2ல் இரண்டாம் இடம்பெறும்
அணியுடனும், குழு-2ல் 1ம் இடம்பெறும் அணி குழு-1ல் இரண்டாம் இடம்
பெறும் அணியுடனும் அரையிறுதிப் போட்டிகளில் மோதவிருக்கின்றன. இதில் வெற்றிபெறும்
அணிகள் ஏப்ரல் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இம்முறை கிண்ணம் கைப்பற்றும் முனைப்பிலும், ஆருடங்கள் கூறுவதிலும் இந்திய அணிக்கே
சாதகமாக அமைந்துள்ளது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும். கிரிக்கெட்
விமர்சகர்களும் இந்திய அணிக்கே இம்முறை கிண்ணம் வெல்லும் வாய்ப்புள்ளது என்று
அடித்துக் கூறுகிறார்கள்.
மேலும் இந்திய அணி அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட
டுவெண்டி-20 தொடர். இலங்கைக்கு எதிரான தொடரிலும் சென்ற வாரம் முடிவுற்ற ஆசியக்
கிண்ணத் தொடரிலும் தொடர்ச்சியாக அவ்வணி விளையாடிய 12 போட்டிகளில் ஒரு போட்டியில்
மாத்திரமே தோல்வியடைந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் அவ்வணி பந்து
வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு ஆகிய சகலதுறைகளிலும் சிறந்து விளங்குகின்றது.
மேலும் சொந்த மண்ணில் தொடர் நடைபெறுவதால் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு அவ்வணிக்கே
அதிகமாகவுள்ளது.
மற்றைய அணிகளைப் பொறுத்தவரையில் அவுஸ்திரேலிய அணியிலும் சிறந்த வீரர்கள்
களமிறங்குகின்றனர். அவ்வணியின் பலம் பெரும்பாலும் துடுப்பாட்டத்திலேயே தங்கியுள்ளது.
பந்து வீச்சு பலம் சற்றுக் குன்றினாலும் எதிரணியினர் நிர்ணயிக்கும் பாரிய ஓட்ட
எண்ணிக்கையையும் எட்டக் கூடிய தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் அவ்வணி கிண்ணம்
வெல்வதற்கு கைகொடுக்கலாம்.
தென்னாபிரிக்க அணியைப் பொறுத்த வரையில் அதிர்ஷ்டமற்ற அணியென்றே சொல்ல வேண்டும்.
எந்த மைதானத்திலும் திறமையாக விளையாடும் இவ்வணி பிரதான ஆட்டங்களில் கோட்டைவிட்டு
விடுவதையே வரலாறாகக் கொண்டுள்ளது. இம்முறை கிண்ணம் வெல்ல நிறையவே போராட
வேண்டியிருக்கும்.
ஏனெனில் அண்மைக் காலமாக அவ்வணியின் பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளதே அதற்குக் காரணம்.
அவ்வணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்ரைன், பிளெண்டர் ஆகியோர்
காயத்தால் அவதிப்படுகிறார்கள். அவ்வணியினரின் களத்தடுப்பும், துடுப்பாட்டமும்தான்
கிண்ணம் வெல்லக் கைகொடுக்கும்.
நியூசிலாந்து அணியும் இம்முறை கிண்ணம் வெல்லும் என எதிர்பார்க்கப்படும் முக்கியமான
அணியாகும்.
அவ்வணி அண்மையில் டுவெண்டி-20 போட்டிகளில் திறமையாக விளையாடி வருகிறது. நீண்ட அதிரடி
துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அவ்வணியில் இந்தியாவின் மெதுவான மைதானங்களில்
அதிரடியாக விளையாடக் கூடிய பிரெண்டன் மெக்கலம் இல்லாமை சற்று பின்னடைவுதான்.
என்றாலும் ரிம் சவுத்தி, போல்ட், மெக்லஹனன் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள்
விளையாடுவதால் எதிரணிகளுக்கு நெருக்கடியாக அமையலாம்.
இந்த நான்கு அணிகளும் கிண்ணம் வெல்லும் அல்லது அரையிறுதிக்குத் தெரிவாகும் என்று
ஆருடங்கள் கூறப்பட்டாலும் கிரிக்கெட் விளையாட்டில் இறுதி வரை இதுதான் நடக்கும் என்று
சொல்ல முடியாது. மேலும் ஏனைய அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.
டுவெண்டி-20 போட்டிக்கேயுரிய அதிரடித் துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத்
தீவுகள் திடீரென மீண்டெழலாம். அதே போல் அண்மையில் டுவெண்டி-20 போட்டிகளில்
பிரகாசித்து வரும் இங்கிலாந்து அணி மற்றைய அணிகளுக்கு சவால் விடுமளவிற்கு சம பலம்
கொண்ட அணியாக மிளிர்ந்துள்ளது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் போட்டி முடியும் வரை எது நடக்கும் என்று சொல்ல
முடியாத நிச்சயமற்ற அணி. வழமை போல் பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்களைக் கொண்ட அவ்வணி
களத்தடுப்பில் கோட்டை விடுவதால் அரையிறுதிக்கு முன்னேறுவதே சந்தேகம்.
இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்குப் பின் அவசர அவசரமாக புதிய தேர்வுக் குழுவையும்
அமைத்து அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட புது முக வீரர்களையும், அனுபவ வீரர்களையும்
உள்ளடக்கிய அணியொன்றை டுவெண்டி-20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அனுப்பியுள்ளது.
டுவெண்டி-20 அணித் தலைவர் லசித் மலிங்க காயம் காரணமாக தலைவர் பொறுப்பிலிருந்து
விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மெத்தியூஸே இவ்வகைப் போட்டிக்கும் தலைமைப்
பொறுப்பேற்றுள்ளார். லஹிரு திரிமான்ன, மற்றும் வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மால்
ஆகியோரும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டு சமபல அணியாக நடப்புச் சம்பியனான இலங்கை
அணி டுவெண்டு-20 உலகக் கிண்ணத்துக்கான கோதாவில் இறங்கியுள்ளது.
இம்முறை நடைபெறும் உலகக் கிண்ண முதற் சுற்று ஆட்டங்களைப் பார்க்கும் போதும் பிரதான
அணிகளுக்கு கத்துக்குட்டி அணிகளால் கூட கடுமையான சவால்களுக்கு முகம் கொடுக்க
நேரிடலாம்.