புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்

தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்

மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான்.

முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஓர் உறுதியான நாள், நேரம் கிடையாது.

இவர்களில் வேலைக்கு செல்லும் ஆண்கள்/ பெண்கள், பள்ளி/கல்லூரியில் பயிலுபவர்கள் என அனைவரும் இவர்கள் அழைக்கும் போது எல்லாம் அந்த CHECKINGக்கு வந்துவிட வேண்டும். இந்த CHEKCING என்பது மாதம் ஒருமுறையாக இருந்து பின்னர் 15 நாட்களுக்கு ஒருமுறையாக மாறி, இப்பொழுது வாரத்திற்கு மூன்று நாட்கள் வரை என அவர்கள் நினைத்த படியெல்லாம் வடிவம் எடுக்கும்.

கர்ப்பிணி பெண்கள் வந்து வரிசையில் நிற்க வேண்டும், கல்லூரி பெண்கள் வந்துவிட வேண்டும், வீட்டில் நடமாட முடியாத நிலையில் முதியவர்கள் இருந்தால் அவர்களை தூக்கிக் கொண்டு வர வேண்டும்.

இந்த முகாமில் வசிப்பவர்கள் எல்லாம் வசதிபடைத்தவர்கள் இல்லை மாறாக அனைவரும் தினக்கூலிகள், தினசரி வேலை செய்தால் தான் பட்டினி இல்லாமல் நித்திரைக்கு செல்ல முடியும் என்கிற நிலையில் 25 ஆண்டுகளாக அதே நிலையில் இருப்பவர்கள்.

இந்த CHECKINGக்கு நீங்கள் ஆஜராகாமல் தக்க காரணங்களை ஆவணங்களுடன் சமர்பிக்கலாம், அப்படி மூன்று முறை நீங்கள் ஆஜராகவில்லை என்றால் வருவாய் அதிகாரிகள் உங்களை பற்றி Q BRANCH இல் புகார் அளிக்க வேண்டும் அவர்கள் விசாரித்து உங்களுக்கு விளக்கு அளிக்கலாம் அல்லது இந்த நடைமுறைகளுக்கு பின்னர் தான் உங்களை அதிகாரிகளால் நீக்கம் செய்ய இயலும். அண்மையில் வழக்கமான CHECKING நடந்தது, அதில் ரவிச்சந்திரன் என்பவர் தன் மகன் கடந்த இருபது நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் முழங்காலில் ஏற்பட்ட வலிக்காக சிகிச்சை பெற்று வருவதாக ஆவணங்களுடன் தகவல் தெரிவித்தார். அதை ஏற்க வருவாய் அதிகாரி துரைப்பாண்டி மறுத்தார். உடன் அவரது மகனை மருத்துவமனையில் இருந்து அழைத்து வரவேண்டும் என்றார்.

உங்களின் இந்த அராஜகத்திற்கு ஓர் எல்லையில்லையா என்று கோபத்தில் ரவிச்சந்திரன் தான் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு அருகாமையில் இருந்து உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சார கேபில் நோக்கி ஏறினார். இதனை அதிகாரி தடுக்கவில்லை, முகாமில் இருந்தவர்கள் உடன் அவரை தடுக்க முயற்சித்திருக்கிறார்கள், அவரை பின் தொடர்ந்து அந்த கம்பத்தில் ஏறியிருக்கிறார்கள், உடன் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள், யாரும் ஊரிய நேரத்தில் வரவில்லை.

1.20PM போல் ரவிச்சந்திரன் இறந்தார், அகதிகள் முகாமில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் பிரதேதத்தை எடுக்க அனுமதிப்பதில்லை என போராட்டத்தை தொடங்கினர். தகவல் அறிந்து அய்யா நெடுமாறன் மற்றும் மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திப்பேன் ஆகியோர் அங்கு மாலையில் விரைந்தனர். சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி துரைப் பாண்டியன் மீது காவல் துறை FIR போட்ட பிறகு தான் ரவிச்சந்திரன் அவர்களின் சடலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கு எடுக்கவே அனுமதிப்பட்டது.

உலகின் உள்ள கொடிய வதை முகாம்கள் தமிழகத்திலும் உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். அகதிகளாக இவர்களின் படகுகள் வேறு நாடுகள் நோக்கி சென்று இருந்தால் இந்த நிலைமை நிச்சயம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. இந்த வதை முகாம்கள் நம் தேர்தல் முழக்கங்களாக மாறாத வரை இதற்கு தீர்வு இல்லை. தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனங்கள் தெரிவிக்காத வரை இதற்கு தீர்வு இல்லை, இதை கற்று வாழும் நாமக்கும் இந்த வதையில் பங்கு இருக்குதானே, நம் மெளனம் எப்பொழுதுமே அதிகாரத்திற்கும் சம்மதம் தானே.

அ. முத்துகிருஷ்ணன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.