மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
மலையக தலைமைகள் முன்பாக உள்ள பாரிய பொறுப்புக்கள்

மலையக தலைமைகள் முன்பாக உள்ள பாரிய பொறுப்புக்கள்

வடக்கு கிழக்கு தமிழ்த் தலைமைகள் முன்பாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பாரிய பொறுப்பு உள்ளது போலவே மலையகத் தமிழ்த் தலைமைகள் முன்பாக இதனுடன் இணைந்ததாக மலையகத் தோட்டத் தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் மேலுமொரு பாரிய பொறுப்பும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. தேசியப் பிரச்சினையில் பங்கெடுக்கும் அதேவேளை தமது சமூகத்தில் மிக நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பும் இந்த மலை யகத் தலைமைகளுக்கு உள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தீர்க்கப் படாதிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் போலவே தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாத நிலை மலையகத்தில் காணப்படுகிறது. அதிலும் குறிப் பாக சுமார் ஐம்பது வருட கால தொழிற்சங்க வரலாற் றுப் பின்னணியைக் கொண்ட மலையக அரசியல் வர லாற்றில் அந்தத் தலைமைகள் இவ்விடயத்தில் இது வரை காலமும் தவறிழைத்து விட்டதோ என எண்ணு மளவிற்கு அம்மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப் படவில்லை என்றே கூற வேண்டும்.

இப்போது இதற்கான விடை காணும் காலம் கனிந்து ள்ளது. வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண சந்தர்ப்பம் கிடைத்துள்ளது போலவே தற்போது தோட் டத்துறைசார் தமிழ் மக்களது வாழ்வாதாரப் பிரச்சி னைகளுக்கும் தீர்வினைக் காண அரியதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனைத் தமிழ்த் தலைமைகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை காலமும் போன்று இனியும் அரசாங்கத்தைக் குறை கூறிக் கொண்டு சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது. அவ்வாறு செய்யின் அது வரலாற்றுத் தவறாகிவிடும்.

மலையகத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு முதற் தடவையாக ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அதி காரம் பெற்ற மலையகத் தலைமைகளில் மாற்றம் ஏற் பட்டுள்ளது. இதுவரை காலமும் இருந்து வந்த தலை மைகள் விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி குறை கூறி வந்தோரின் கைகளுக்கு அந்த அதிகாரம் வந்துள்ளது. அத்துடன் மலையக மக்கள் உட்பட நாட்டிலுள்ள பெரும்பாலான தமிழ் மக்களது பூரண ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள அரசாங்கமும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதில் உறுதியாக உள்ளது.

எனவே மலையகத்தில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் கேட்டுப் பெற்றுக் கொடுப்பது மலையகத்தில் தோற்றம் பெற் றுள்ள புதிய தமிழ்த் தலைமைகளின் தலையாய கடமை யாக உள்ளது. குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் கூட்டணி அமைத்துத் தேர்தலில் பெரு வெற்றி கண்ட அமைச்சர்களான பி.திகாம்பரம், மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்பாக பாரிய பொறுப்புக்கள் பல உள்ளது.

கடந்த ஜனவரி 08ஆம் திகதியிலிருந்து இவர்கள் தமது மக்களுக்கான பணிகளை ஆரம்பித்துள்ள போதிலும் அது ஆகஸ்ட் 17இற்குப் பின்னர் மேலும் வலுவுள்ள தாகியுள்ளன. அமைச்சு அதிகாரங்கள் பல இவர்களைத் தேடி வந்துள்ளது. பல வருடங்களுக்குப் பின்னர் மலை யகத் தலைநகர் கண்டியில் தமிழர் ஒருவருக்குப் பாராளு மன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இரண்டு அமைச்சரவை அமைச்சுக்கள் உட்பட இராஜாங்க அமைச்சுப் பதவியும் மலையகத்திற்குக் கிடைத்திருக் கிறது. இவற்றின் மூலமாக பல சேவைகளை ஆற்றலாம்.

முன்னர் அதிகார ஆட்சியிலிருந்த மலையகத் தலை மைகள் ஐம்பது வருடங்களாக எதனையும் செய்ய வில்லை எனத் தேர்தல் காலத்தில் இவர்கள் செய்த பிரசாரத்திற்கு அடுத்த ஐந்து வருட காலத்தில் முடிந் தளவு தீர்வினை இவர்கள் பெற்றுக் கொடுக்க வேண் டும். குறிப்பாக தொழிலாளர்களது வீடில்லாப் பிரச்சி னைக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும். இதற் கான உறுதிமொழிகள் பல வழங்கப்பட்டுள்ளன. எனி னும் அவை சற்று வேகங் குறைந்ததாகவே காணப் படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் இவர்கள் மேலும் உத்வேகத்துடன் செயலாற்ற வேண்டும்.

சுமார் 200 வருட கால பழைமையான லயன் காம் பராக்களில் இன்றும் வாழ்ந்துவரும் ஒரு தொகுதி தொழிலாளர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அத்தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித் தது போன்று சொந்தக் காணிகளை வழங்கி அதில் வீட மைத்துக் கொடுக்க வேண்டும். தோட்டக் கம்பனிகளின் அதிகார தோரணைகளால் தொழிலாளர்கள் நசுக்கப்படு வதனைத் தடுத்து நிறுத்துவதுடன் அவர்களது சம்பளப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

அத்துடன் மலையகப் புத்திஜீவிகளால் கடந்த பல வருட காலமாக முன்வைக்கப்பட்டுவரும் மலையகப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் புதிய மலையகத் தலைமைகள் செய்ய வேண்டும். இவ்விடயம் மலையகத்திற்கு மிகவும் அவசியமாகவும், அவசரமாகவும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. மலையகத்தில் கல்வி கற்ற சமூகத்தை தோற்றுவிப்பதன் மூலமாக அம்மக்கள் தாமாகவே முன்வந்து தமது பிரச்சினைகளை இனங்கண்டு உரிய தரப்புக்களிடம் எடுத்துரைக்கும் நிலை ஏற்படும்.

எனவே மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமையப் பெறுவதில் மலையகத்தின் புதிய தலைமை கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். முன்னர் இது தொடர்பாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அவை யாவும் முன்னைய ஆட்சியாளர்களால் தட்டிக் கழிக்கப்பட்டது. இவ்விடயத்தில் முன்னர் அதிகாரத்திலிருந்த மலையகத் தலைமைகளும் அதிக அக்கறை காட்டாமல் இருந்து வந்தமையை புதிய தலைமைகள் நன்கு அறியும். எனவே இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்துவது இவர்களது கடமையாகும்.

இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக பேராசிரியர்களான சோ. சந்திரசேகரன், மூக்கையா, சந்திரபோஸ் ஆகியோர் பல முயற்சிகளை மேற் கொண்டனர். தமது திறமைகளை முடிந்த மட்டும் பயன் படுத்தினர். ஆனால் அரசியல் ஆதரவும், பின்புலமும் இல்லாமையினால் அது கைகூடாமல் இருந்து வந்தது. இப்போது அதிகாரமும், ஆதரவு வழங்கும் மலையகத் தலைமைகளுடன் நல்லாட்சி அரசாங்கமும் இணைந்தே உள்ளமையால் இதனைச் செய்து முடிப்பது இலகுவான காரியம் என்பதைத் தலைவர்கள் உணர வேண்டும்.

எனவே மலையக மக்கள் உட்பட தோட்டத் தொழி லாளர்கள் எதிர்நோக்கும் இவ்வாறான பல தேவை களையும், பிரச்சினைகளையும் கண்டறிய மலையகத் திலுள்ள கல்விமான்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அக்குழு சிபாரிசு செய்யும் விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றுக்குத் தீர்வு காண புதிய அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]