மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
சிலனிதர்களும் . . . .

சிலனிதர்களும் . . . .

ஆதித்தியாவின் மனம் குமுறிக் கொண்டி ருந்தது. வேகமாகக் கதவைத் தட்டினாள். எப்படியும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று துடித்துக்கொண்டு நின்றாள்.

வேகமாகக் கதவு தட்டும் சத்தம் கேட்டுத் தன் நிலைக்குத் திரும்பிய மதிவதனி கதவைத் திறந்தாள்.

ஆதித்யா அவளை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைத்தாள். மதிவதனிக்கு வியப்பாக இருந்தது. அதுவும் சாரங்கன் இல்லாமல் தனியாக வந்திருக்கிறாள்.

மதிவதனி எதனையும் வெளிக்காட்டாமல் வாம்மா என்ன இந்த நேரம் தனியாக வந்திருக்கிறாய்? என்று சாதாரணமாகவே கேட்டாள். பதில் எதுவும் வரவில்லை.

மயான அமைதி.

ஆதித்யா ஏன் வந்திருக்கிறாள் என்ன கதைக்கப் போகிறாள் என ஒன்றுமே புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் மதிவதனி.

அம்மா நாள் இலங்கைக்குப் போகப்போறன் என்று அமைதியைக் குலைத்தாள்.

ஏன் இரண்டு பேருக்கும் இப்ப என்ன விடுமுறையே என்று மதிவதனிகேட்டாள்.

சட்டென்று தாயைத் திரும்பிக் கோபமாகப் பார்த்த ஆதித்யா.

இல்லை நான் மட்டும் தான் போகப் போறன். அவர் வரேல்லை. என்று வெடுக்கென்று கூறினாள்.

அவளுடைய எந்தப் போக்கையும் தான் கவனிக்காதவள் போல்

ஏன் இப்ப அப்படி என்ன அவசரம்.

அப்பா அங்கை தனிய இருந்து கஸ்டப்பட்டநான் இஞ்சை சந்தோஷமாய் இருக்கேலாது.

சிறிது நேரம் யாரும் எதுவும் கதைக்கவில்லை. இதுக்குச் சாரங்கனையும் கூட்டிப் போகலாம் தானே. ஏன் கொப்பர் வரச் சொன்னவரே?

சாரங்கனுக்கு இந்த நாடுதான் பிடிச்சிருக்காத தன்னாலை அங்கை வந்து சமாளிக்கேலாதாம்.

அதனாலை நீத போறது சரியே?

ஏன் அப்பாவை விட்டிட்டு நீங்கள் இருந்தனீங்கள்தானே?

மதிவதனிக்கு செருப்பால் அடிச்சதைப்போல இருந்தது.

அப்பாவுக்குச் சரியான வருத்தம். அங்கை அவரைக் கவனிக்கிறதுக்கு யாரும் இல்லை. கட்டின மனைவிக்கும் அந்த எண்ணம் இல்லை. பெத்த பிள்ளையள் எண்டாலும் அவரைப் பார்க்கத்தானே வேண்டும்.

திரும்பத் திரும்ப தன்னை யாரோ சவுக்கால் அடிப்பது போல் மதிவதனி நெளிந்தாள்.

மதிவதனி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். சாரங்கனோடை இதைப்பற்றிக் கதைச்சிட்டியே?

ஓம் போறதெண்டால் போவெண்டு சொல்லியிட்டார். அவர் உன்னைப் போல ஒரு மனிதாபிமானம் இல்லாதவரில்லை.

ஆதித்யாவின் ஒவ்வொரு வசனங்களும் மதிவதனியை ஈட்டிபோல் குத்தின.

ஓவென்று கத்தவேண்டும் போல இருந்தது.

நீ போறதை விட்டிட்டு அப்பாவை இஞ்சை கூப்பிடலாமே?

ஆதித்யாவின் கோபம் எல்லை கடந்து விட்டது.

அப்பா ஒரு முழு மனிசன். அவரை இஞ்சை உன்ரை அரைகுறைப் பிரண்டுகள் மத்தியிலை கூப்பிட்டு சீரழிக்க எனக்கு விருப்பமில்லை. உன்ரை ஆசையே அதுதானே.

ஆதித்யாவின் இந்த வசனங்கள் மதிவதனியை நன்கு காயப்படுத்தின. மனதைக் காயப்படுத்துவதென்பது சரியோ பிழையோ நிரம்பத் துயரமானது. ஆதித்யா மதிவதனியைப் பிழையாக விளங்கிகொண்டாளா அல்லது தான் சுயநலமாக சில காரியங்களைச் செய்து ஆதித்யாவின் மனதைக் காயப்படுத்தி இருந்தாளா என்று புரியாமல் தவித்தாள் மதிவதனி. மனசு கூறியது.

அம்மா எப்ப இந்த நண்பர்களைக் கண்டனீங்கள். எங்கேயோ மூலையில் இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் காசைக் கண்டவுடன் ஆடுகிற கூத்துக்குப் பெயர்தான் நாகரிகமா அம்மா? இவர்கள் மத்தியிலை மடிப்புக் கலையாமல் சட்டை போட்டு வந்தால் மட்டும்தான் அப்பாவுக்கும் உனக்கும் கெளரவமோ? என்ன துணிவிலை ஆரணி அப்பிடிக் கதைக்கேலும்? அதை எப்பிடி நீ பார்த்துக் கொண்டிருந்தனீ? அதை உன்ரை அண்ணரும் ஆமோதிக்கிறார். எப்பிடி... எப்பிடி இதெல்லாம் நடக்குது. உன்ரை அண்ணர் என்ரை அப்பாவின்ரை கால்தூசுக்குக் கூட சமனில்லை... அப்பாவோடை நடந்து போனாலே அவளுக்குக் கெளரவம் இல்லையாம். அப்பாவின்ரை பல்லெல்லாம் காவி ஏறிப் போய்ச்சுதாம். அவளின்ரை பிறன்டுகள் அவளைப் பகிடிபண்ணுகினமாம். எப்ப அவளுக்கு இந்தக் கெளரவம் வந்தது? என்ன நினைச்சுக் கொண்டாள் அவள்? How the hell she can talk like this? அப்பா என்ன உங்களுக்குக் கிள்ளுக் கீரையா? இந்தச் சமூகத்தை எப்ப கண்டனீங்கள்? நீங்கள் கெளரவமாக வாழ்ந்த சமூகத்தை எப்பிடி உங்களாலை மறக்க முடிந்தது? இந்த இரண்டும் கெட்டான் சமூகத்தை எப்ப கண்டனீங்கள்.

ஆதித்யா பொரிந்து கொண்டேயிருந்தாள்.

மதிவதனியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் கதைக்கிற அளவுக்கு அவளின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த தன்னைப்பார்த்து ஆதித்யா கதைப்பதைக் கேட்டு அவளின் மனது சங்கடப்பட்டது. சங்கடம் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. ஆரணியின் பேச்சுகள் தவறு என்பது மதிவதனிக்கு புரியும். அதே போல் இப்ப ஆதித்யா தாயைக் கேட்கும் கேள்விகளும் தவறுதானே!

(அடுத்த வாரம் தொடரும்...)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]