விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

Print

 
வசதிகளை வேண்டி நிற்கும் வேலணை சாட்டி கடற்கரை

வசதிகளை வேண்டி நிற்கும் வேலணை சாட்டி கடற்கரை

 

நெடுங்கிள்ளி...

வடக்கில் உள்ள சிறந்த நீச்சலுக்கான கடற்கரையாக சாட்டி கடற்கரையைக் குறிப்பிட முடியும். இக்கடற்கரை இப்பொழுது நாட்டின் பல பாகங்களில் இருந்து வரும் மக்கள் மத்தியில் பிரபல்யமாகிக் கொண்டிருக்கிறது. நிறையவே மக்கள் வந்து குவியும் உல்லாச பொழுது போக்குக்கு உகந்த ஒரு கடற்கரைப் பிரதேசமாக இது மாற்றியமைக்கப்பட வேண்டுமானால் அபிவிருத்திப் பணிகள் பல இங்கு இடம்பெற வேண்டியுள்ளது. உல்லாசமாக நீச்சலடித்து தமது பொழுதை மகிழ்ச்சியாக களிக்க வந்தவர்களிடம் சாட்டி கடற்கரையின் தேவைகள் குறித்துக் கேட்ட போது அவர்கள் அது குறித்து மனந்திறந்து பேசினார்கள்.

பி. பி. எச். பெரேரா:

(கொழும்பு தேசிய வைத்தியசாலை)

முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்துள்ளேன். இது ஒரு மகிழ்ச்சியான பிரயாணமாக இருந்தது. இந்தக் கடற்கரைக்கு வந்து குளித்ததில் சந்தோஷம். எங்களது பகுதிகளில் இது போன்ற கடற்கரையில் பலதரப்பட்ட அபிவிருத்தி கள் உண்டு. இங்கு வசதிகள் இல்லை.

அதனால் உல்லாசமாகப் பொழுதை போக்க வேண்டும் என்ற நினைப்புடன் வருபவர்கள் ஏமாற்றமடைவார்கள்.

முதலில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இதற்குப் பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிள்ளைகள் பொழுதுபோக்கக் கூடியதாக விளையாட்டுச் சாதனங்கள் அவசியம். சிறுவர்களின் நலன்களைக் கவனிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்து பனம் பொருள்களினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் கண்டிப்பாக இங்கு கிடைக்க வேண்டும். தென் பகுதி மக்களுக்கு அதுவே மிகப் பெரிய மகிழ்ச்சியாகும்.

இவை கிடைக்கக் கூடிய கடைகள் இருந்தால் நல்லது. யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய உணவுகளான கூழ், புழுக் கொடியல் போன்றவை தென் பகுதி மக்களுக்குப் பிடித்தமான ஒன்று.

ஒரு உல்லாசக் கடற்ரைக்கு என்னென்ன இருக்க வேண்டுமோ அவை இருந்தால் இந்தக் கடற்கரைக்கும் இந்தக் கிராமத்திற்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

அசந்தறேலா வெல்லாயகே,

இசிபத்தான கல்லூரி,

கொழும்பு

நல்ல கடற்கரை, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக் கிறது. உடனடியாக கழிப் பறைகள், பொழுதுபோக்குப் பிரிவுகள் மற்றும் வசதிகள் அமைக்கப்பட வேண்டும். என் போன்ற சிறுவர்களுக்கு பொழுது போக்க உகந்த இடம் இது.

திருமதி இ. கெளரி,

ஓய்வுபெற்ற ஆசிரியை,

யாழ்ப்பாணம்.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கடற்கரை அனைத்து மக்களையும் கவரக்கூடிய ஒரு இடமாக உருவாவது மகிழ்ச்சியைத் தருகின்றது.

இங்கு வரும் ஒவ்வொருவரும் சந்தோசமான பொழுது போக்கிற்காகத்தான் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து இங்கே வருகிறார்கள்.

அதற்கு ஏற்றவகையில் இந்தக் கடற்கரையை அபிவிருத்தி செய்ய வேண்டியது வேலணை பிரதேச சபையின் பொறுப்பாகும்.

எதிர்காலத்தில் வேலணை கிராமத்திற்கு மேலும் மெருகூட்டக் கூடியதாக பிரதேச சபையின் நடவடிக்கைகள் இங்கு அமைய வேண்டும். இக்கடற்கரையில் கற்கள், பாறைகள் கிடையாது.

கடலில் இஷ்டம் போல் நீந்தி மகிழக் கூடியதாக மணற் பாங்கான பகுதி உள்ளது. தென் பகுதியில் இருந்துவரும் மக்கள் மட்டுமல்ல, எந்தப் பகுதியில் உள்ள மக்களும் இந்தக் கடலில் குளித்து அதில் கிடைக்கும் சந்தோஷத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்க வேண்டும்.

அட, சாட்டி கடற்கரை தானே என்று எமது பகுதி மக்கள் அதனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது என்பதே எனது அபிப்பிராயம்.

எம். ஏ. இசற். பசீர்,

மாநகர சபை உறுப்பினர்,

பெரியமுல்லை.

ஐம்பது பேருடன் வந்து மகிழ்ச்சியாக கடலில் குளித்த முதல் இடம் இந்த சாட்டி கடற்கரைதான். எங்களது பிரதேசத்திலும் பார்க்க சந்தோஷமாகக் குளிக்கக் கூடிய இடமாக இது இருக்கிறது.

இந்தக் கடற்கரையில் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க பிரதேச சபை முனைய வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டால் தென் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருந்திரளாக இங்கு தமது ஓய்வுநாளைக் கழிக்கக் கூடுவார்கள். மலசல கூடம் போக்குவரத்து வசதிகள் குடிதண்ணீர் என்பதை முதலில் சீராக அமைய வேண்டும்.

வெறும் சுற்றுலா மையமாக இல்லாது பிரதேச சபைக்கு வருமானத்தைத் தரும் ஒரு நிலையமாகவும் இதனை மாற்றியமைக்கக் கூடிய வகையில் பிரதேச சபை உரிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத் தலாம்.

இப்போது சில அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள் கூட இல்லாத நிலையில் இரண்டொரு நாட்கள் என்னால் தங்கி நிற்கக் கூடியதாக இல்லை. எதிர்வரும் வருடங்களிலா வது சுகாதாரம் குடிதண்ணீர் விடுதி வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

க. கேதீஸ்வரநாதன்,

அ. சேரன் (கொழும்பு 6)

இந்தக் கடற்கரைக்கு மக்கள் இப்போது வரத் தொடங்கியுள்ளனர். பாதை திறந்துள்ள நிலையில் நயினதீவுக்கு வரும் தென் பகுதி மக்களின் பார்வையிலும் இது இருக்கும் என்பதால் அவர்கள் தங்கி நிற்கக் கூடியதாக விடுதி மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து கடற்கரைக்கு வரும் மக்களுக்கென இருக்கைகள் நிழற்குடை படகு சவாரிகள், குடிதண்ணீர், சுகாதார வசதிகள் என்பன ஒழுங்குமுறையில் அமைந்திருக்க வேண்டும்.

இப்போது வருபவர்களுக்கு இந்த வசதிகள் இல்லை என்பதுடன் உடை மாற்றுவதற்கான இடவசதியும் இல்லை. இவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. பிரதேச சபை மக்களின் தேவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

கடற்கரைக்குச் செல்லும் மக்களிடம் அதற்கென ஒரு நியாயமான கட்டணத்தை அறவிடலாம். உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிக்கக் கூடியதாக இந்த பீச் பற்றிய விளம்பரங்க ளையும் வெளியிடலாம் எனக் கருதுகின்றோம்.

(படங்கள்: நெடுந்தீவு தினகரன் நிருபர்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2008 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]