புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
கதம்பம்

உங்கள் பதில்கள்

பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பது அறிவா? அடக்கமா? என்று 07.03.2010 கதம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குத் தேர்வு பெற்ற வாசகர்களின் பதில்கள்:

அடக்கமே!

பெண்களுக்கு அறிவு என்பதைவிட அடக்கம்தான் பெருமை சேர்க்கிறது. கற்றோர் மத்தியில் கூட, ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாக நடக்கும் பெண்களைத்தான் மதிக்கிறார்கள். அமைதியின் தூதுவராக விளங்கிய அன்னை தெரேசா சிலுவை, ஜெபமாலை, சேலை ஆகியவற்றை மட்டுமே உடைமையாகக் கொண்டு உலகை வலம் வந்தார். அவரது எளிமையும், மனித நேயமும் உலகில் போற்றப்படுகிறது. ஆகவே, அமைதியுடன் கூடிய அடக்கத்தையே பெண்களிடத்தில் எதிர்பார்க்கிறார்கள்.
 

எம். எல். எப். ஷ¤ரைபா,

வெலிப்பன்ன.
 

அறிவே!

பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பது அறிவுதான். அறிவினால்தான் இன்று ஆண்களுக்கு நிகராகப் போட்டி போடுகிறார்கள். சகல துறைகளிலும் பெண்களுக்கு அவர்கள் பெற்ற அறிவுதான் பெருமை சேர்க்கிறது. உலகளாவிய ரீதியில் பெண்கள் பிரபல்யம் பெற்றுப் பெருமையடைகிறார்கள் என்றால் அவர்களின் அறிவுதான். அமெரிக்காவில் கொண்டலீஸா ரைஸ், ஹிலாரி கிளின்ரன் மற்றும் உலகப் பெண்கள் பலர் அறிவினால்தான் உயர்ந்த இடத்துக்குச் செல்கிறார்கள். ஆகவே, அறிவே பெண்களுக்குப் பெருமையானது.
 

ந. சசிகலா,

திருகோணமலை


இவ்வார அறிமுகம் செல்வம் விஜயகுமார் பத்தனை

1964 முதல் ஊடகங்களில் பிரவேசித்து 70களில் இலத்திரனியல் ஊடகத்தில் ஏற்றம் பெற்றேன். அதேபோல் அச்சு ஊடகங்களையும் பயன்படுத்தி எனது எழுத்தார்வத்தை ஊக்கப்படுத்திக் கொண்டேன். அந்த வகையில் இலங்கை வானொலியின் இரு சேவைகளிலும் எனது ஆக்கங்கள் கவிதையாக, கட்டுரையாக, விமர்சனமாக நாடகமாக, கடிதமாக, பல்வேறு படிமங்களில் வெளிவந்தன. அதிலும் வானொலியில் தான் எனது பங்களிப்பு பிரகாசமாக மிளிர்ந்தது. 1970கள் “வானொலியின் பொற்காலம்” என வர்ணிக்கப்பட்ட போது என்னைப் போன்று சிலர் அனைத்து நிகழ்ச்சிகள் மூலமாகவும் வலம் வந்து ஒரு நிலையான பெயரைப் பதித்துக் கொண்டோம்.

 இது அன்றைய வானொலி நேயர்கள் அறிவார்கள். குறிப்பாக வீ. என். மதியழகன் ஆடவர் அரங்கு நிகழ்ச்சியை தொகுத்தளித்த போது வாராவரம் எனது ஒரு படைப்பாவது இடம்பெறத் தவறாது. அறிவிப்பாளர் அப்துல் ஹமீத், சரா இமானுவேல், திருமதி ராஜேஸ்வரி சண்முகம், விமல் சொக்கநாதன் வீ. ஏ. சிவஞான சுந்தரம் போன்றவர்கள் கொடுத்த உற்சாகத்தால் மேலும் பல நிகழ்ச்சிகளிலும் எனது எழுத்துக்களைப் படைப்புகளாக பதிவாக்கி கொண்ட பொழுதுகளை எண்ணிப் பார்க்கிறேன்.

பின்னர் ‘80 களில் சில காலம் மட்டும் எழுதினேன். அப்போது மணிலா (பிலிப்பைன்ஸ்) ‘ரேடியோ வெரித்தாசும்’ எனக்கு பரிச்சயமாகி எனது கட்டுரை ஒன்றுக்கு சர்வதேச ரீதியில் மூன்றாம் பரிசினையும் நல்கியது. அன்பாய் பேசி நெஞ்சத்தைத் தோட்ட எம். ஏ. சுவாமி அவர்களின் அன்பொழுகும் குரல் இன்னும் என்னில் ரீங்காரமிடுகின்றது.

“அட்டன் பொஸ்கோ அறிவுச் சுடரில் நமது நாடு கவிதையோடு சுடர்விடத் தொடங்கிய அச்சுப்பதிப்பு வீரகேசரி ஊடகத்துக்கு “ஓடும் எண்ணங்களே” என்ற எனது சிந்தனைக் கட்டுரைக்கு ஆசனம் போட்டுத் தந்ததால் தினகரன், சிந்தாமணி, மித்திரன் வாராந்தரிகளோடு சஞ்சிகைகள், சிற்றேடுகளான மாணிக்கம், கலசம், வானோசை, வானொலி மஞ்சரி கன்னி போன்றவற்றோடு இளவேனில், மலைக்குருவி போன்ற கையெழுத்து இலங்கை ஏடுகளிலும் பதிவாக்கியது.

நாவல் நகர் வந்தபோது ஆன்மீகத்தேடலின் ஆர்வத்தால் சத்தியத்தின் சக்தி நிலைச் சங்க பவானி (தமிழகம்) கிளையினை காயத்திரி சித்தர் கலாநிதி முருகேசு சுவாமிகளின் வழிகாட்டலில் முதல் கிளையை அமைத்து அதன் செயலாளராக பல ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டேன்.

நண்பர்களின் ஐக்கியத்தோடு 91ல் இலக்கிய உலகத்துக்கு வந்து கே. பொன்னத்துரை, அ. வைத்திலிங்கன், இவருடன் சேர்ந்து நாவல்நகரில் மலையக ஆன்மீக கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி அவர்களோடு நான் செயலாளராகி மலையகம் போற்றும் வண்ணமாக மகாகவி பாரதிக்கு விழாவெடுத்து பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, மலர் வெளியிட்டு சிறப்பாக செய்தோம். சமுதாய மேம்பாட்டுக்காக எனது சிறுபராயத்தில் ஓவியத்திலேயே நாட்டம் அதிகம் அந்த நாட்டம் இருபது வயதுவரையில் தொடர்ந்தது. ஓவியத்தை மட்டும் தற்போது ரசித்து உணரும் நான் வெகு சீக்கிரத்தில் தூரிகையை கையில் எடுக்கும் நோக்கமும் உண்டு. எடுத்து, ஓவியம், ஆன்மீகத்தோடு எனக்கு சுற்றாடலை பாதுகாக்கும் விருப்பும், பசுமையை நேசிக்கும் ஆர்வமும் அதிகம்.


இவ்வார கேள்வி

மனிதனுக்கு நாணயம் முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா?

இதற்குப் பொருத்தமாகவும் சுருக்கமாகவும் பதில் எழுத வேண்டும். நாணயம் எனின் அதனைச் சுருக்கமாக விளக்க வேண்டும். அதுபோல் ஒழுக்கம் எனப் பதில் அளிக்க விரும்பினால், அதற்கான காரணத்தைச் சுருக்கமாக எழுத வேண்டும். சிறந்த பதில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்படும்.


நிகழ்வுகள்

கூடை வாசிகள் வெளியீட்டு விழா

ஆசிரியர் சா. றொபட் தொகுத்த ‘கூடைவாசிகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும் கலைநிகழ்வும் எதிர்வரும் 25ம் திகதி காலை 10.00 மணிக்கு ப/ மடுல்சீமை த/ ம/ வி தமிழோவியன் அரங்கில் பாடசாலையின் அதிபர் பெ. முத்துலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது.

நூல் விமர்சனத்தை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். இராஜேந்திரன் வழங்கவுள்ளார்.


பாரதியாரின் புதுக்கவிதைகள்

காற்றுக்குக் காது இல்லை
அவன் செவிடன்
காதுடையவன் இப்படி
இரைச்சலிடுவானா?
காதுடையவன் மேகங்களை
ஒன்றோடொன்று
மோதவிட்டு
இடி இடிக்கச் சொல்லி
வேடிக்கை பார்ப்பானா?
காதுடையவன்
கடலைக் கலக்கி
விளையாடுவானா?
காற்றுக்கும் காதில்லை.

சூரியன்

இருள் நினக்குப் பகையா?
கட்டி முத்தமிட்டு
மறைத்து விட்டாயா?
இருள் உனக்கு
உணவுப் பொருளா?
அது நின் காதலியா?
இரவெல்லாம்
நின்னைக் காணாத
மயக்கத்தில்
இருண்டிருந்ததா?

(இதயம் பேசுகிறது)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.