விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

Print

 
நெடுந்தீவின் காட்டுக் குதிரைகளும் குயிண்டாக் கோபுரமும்

நெடுந்தீவின் காட்டுக் குதிரைகளும் குயிண்டாக் கோபுரமும்

நெடுந்தீவு போர்த்துக்கேயர் கோட்டை

செங்கையாழியான்

நெடுந்தீவு வட கரையில் பிரதான இறங்கு துறைக்கு அருகில் பாழடைந்த ஒரு கோட்டையின் எச்சங்கள் காணப்படுகின்றன. இதனைப் போர்த்துக்கேயக் கோட்டையின் பகுதிகள் என்பர். அக்காலத்தில் போர்த்துக்கேயக் கலங்கள் வந்து இறங்கக் கூடிய கடற்கரையில் இக் கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. முருகைக் கற்களினால் ஆக்கப்பட்ட இக்கோட்டையின் சில சுவர்களைப் பார்க்க முடிகிறது. ஒல்லாந்தர் காலத்தில் இது முக்கியத்துவம் பெறாததால் பாதுகாக்கப்படவில்லை.

நெடுந்தீவு பாவோபாப் மரம்

மத்திய ஆபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட பாவோபாப் மரங்கள் வடிவில் போத்தல்கள் போன்றிப்பதால் போத்தல் மரங்கள் எனப்படுகின்றன. அராபிய வர்த்தகர்களால் இம்மரங்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன.

இரண்டே இரண்டு இவ்வகை மரங்கள் இலங்கையி லுள்ளன. ஒன்று மன்னாரிலும் மற்றையது நெடுந்தீவுலும் உள்ளன. நெடுந்தீவில் இருக்கின்ற மரம் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. நீரில்லாமல் பல காலம் வளரக்கூடியது. அகன்ற அடிமரத்தையும் கொண்டது. மேலும் விழுதுகள் பரப்பி பரந்து விரிந்த ஒரு ஆலமரம் நெடுந்தீவிலுள்ளது.

பாவோபாப் மரம்
 

நெடுந்தீவு குயிண்டாக் கோபுரம்

நெடுந்தீவின் தென் கிழக்குக் கரையோரத்தில் ஒரு கோபுரம் காணப்படுகின்றது. இதனைக் குயிண்டாக் கோபுரம் என்பர். இது வெளிச்ச வீடு மாதிரி உயர்ந்தமைந்த கோபுரமாகும். இக்கோபுரம் கடலில் பயணப்படும் மாலுமிகளுக்கு வழி காட்டும் ஒரு அமைப்பாக இருந்தது. எனினும் வெளிச்ச வீட்டிலிருந்து இது வேறுபட்டது. இக்குயிண்டாக் கோபுரம் உண்மையில் ஒரு புகை போக்கி போன்றது.

இக்கோபுரத்தின் அடியில் மூட்டப்படும் தீயினால் ஏற்படும் புகை இக்கோபுரத்தின் உச்சியில் வெளிவரும். இந்தக் கோபுரத்தின் மத்தியில் புகை செல்லக் கூடிய வகையில் துவாரம் உள்ளது. கடலில் வரும் கலங்களுக்கு புகை மூலம் இக்கோபுரம் வழி காட்டுகின்றது. இதைப்போன்ற ஒரு குயிண்டாக் கோபுரம் அனலை தீவுக் கரையிலுமுள்ளது.

குயிண்டாக் கோபுரம்

நெடுந்தீவு காட்டுக் குதிரைகள்

நெடுந்தீவு வெளிகளில் தன்னிச்சையாக மேய்கின்ற குதிரைகளைக் காணலாம். இவை கட்டைக்குதிரைகளாகும். போர்த்துக்கேயர் காலத்திலிருந்து இவை இத்தீவில் உள்ளன. இக்குதிரைகளில் சில தனியாருக்குச் சொந்தமான குதிரைகளாகும். ஏனையவை காட்டுக் குதிரைகளாகும். மனிதர் நெருங்கியதும் பாய்ந்து தறிகெட்டு ஓடிவிடுகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன.

இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.

நெடுந்தீவு சாராப்பிட்டி

நெடுந்தீவில் சாராப்பிட்டி என்றவிடம் முக்கியமானதாகும். நல்ல தண்ணீர் இங்குதான் கிடைக்கின்றது. ஆடுகால் துலா மூலம் கிணற்றிலிருந்து இங்கு தண்ணீர் கிடைக்கின்றது. மிகப்பழைய காலக்கிணறு இங்குள்ளது. இங்கிருந்து தண்ணீர் தீவு முழுவதும் இன்று குழாய் வழியே வழங்கப்படுகின்றது. இதற்கு வடக்கே சுண்ணாம்புக் கற்றரையில் ஒரு பெரிய பாதம் பதிவாகிவுள்ளது. கரைசலினால் இயற்கையாகத் தோன்றிய வடிவம் இதுவாகும். இங்கு குதிரை லாயம் இருந்ததென்பதற்கு அடையாளமுள்ளது. பிரித்தானியனான நோலானால் அமைக்கப்பட்ட பழைய லாயத்தின் கட்டடத் தூண்களை இங்கே காணலாம்.


நெடுந்தீவு


காட்டுக் குதிரைகள்


நெடுந்தீவு சாரப்பிட்டி கிணறு


சாரப்பிட்டி குதிரை லாயம்

(முற்றும்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2008 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]