விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

Print

 
இங்கிலாந்தின் இரும்புப் பிரதமர் தாட்சர்

இங்கிலாந்தின் இரும்புப் பிரதமர் தாட்சர்

இங்கிலாந்து சரித்திரத்தை மட்டுமல்ல; உலகத்தின் சரித்திர த்தையே புதிய பாதைக்கு திசை திருப்பியதில் மார்க்கரெட் தாட்சருக்குப் பெரும் பங்கு உண்டு. ஐரோப்பிய நாடுகளி டையே கம்யுனிஸ்டு களின் சோஷலிச பொருளாதார கொள்கை ‘ஃபேஷனாக’ இருந்த காலத்தில் இதெல்லாம் சரிப்படாது. தாராளமயமாக்கல் கொள்கைதான் உலகுக்கு பொருத்தமானது என்று அவர் இங்கிலாந்தில் நிரூபித்துக் காட்டினார். இதை அடுத்து அமெரிக்கா உட்பட ஏகப்பட்ட நாடுகள் தாராளமயமாக்கல் கொள்கைக்கு தாவின. பெண் வாசனையே அறியாத இங்கிலாந்தின் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த முதல் பெண்மணி தாட்சர்தான்! பிரதர் பதவிக்கு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப் பட்ட பெருமையும் தாட்சர் ஒருவருக்கு மட்டுமே உண்டு.

1979 ஆம் ஆண்டு தாட்சர் முதல் முதலாக பிரதமரான போது தொழிற் சங்கவாதிகளின் செங்கொடிகளால் நாடே ஆர்ப்பாட்டக் கோலம் பூண்டிருந்தது. வேலை நிறுத்தம், போராட்டம், கதவடைப்பு, ஊர்வலம் என்று நாடு ஸ்தம்பித்துபோன நேரம்... பிரதமர் தாட்சர் பிரிட்டிஷ் ஏர்வேஸில் தொடங்கி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அத்தனை நிறுவனங்களை யும் துணிந்து தனியார் மயமாக்கினார்.

தாட்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியிடமிருந்து எதிர்ப்பு வெடித்தது. இருந்தும் இதைப் பற்றியொல்லாம் கவலைப்படாத தாட்சர் பொருளாதார சீர்த்திருத்தத்தை துணிச்சலாக செய்தார். இத்தனைக்கும் தாட்சருக்குப் பெரிய அளவில் அரசியல் பின்னணி எல்லாம் இருக்கவில்லை.

சாதாரண மலிகைக் கடைக்காரனின் மகளாக பிறந்து கல்லூரிக்குப் போய் வேதியலும் சட்டமும் படித்துவிட்டு மாதம் பிறந்தால் சம்பளம் வாங்கும் உத்தியோகத்தில் தான் ஆரம்பத்தில் இருந்தார். பிறகு அரசியலில் ஆர்வம் பிறக்க இரண்டு முறை தேர்தலில் குதித்தார். இரண்டு முறையும் தோல்வியே கிடைத்தது. தாட்சர் மனம் தளரவில்லை. அரசியலில் இருந்தும் விலகவில்லை.

1959 இல் நடந்த தேர்தலில் எம். பி. ஆனார். 1970ல் அமைச்சரானார். 1979ல் பிரதமரானார். 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வசமிருந்த பாஃக்லேண்ட் தீவுகளை அர்ஜென்டீனா ஆக்கிரமித்த போது தாட்சர் ஆவேசமாக போர்தொடுத்து மீட்டார். (இதை அடுத்து 1983 ஆம் ஆண்டு நாடே எழுச்சியோடு கிளர்ந்து எழுந்து தாட்சரை இரண்டாவது முறையாக பிரதமராக்கியது) ‘இதனாலேயே’ ‘இரும்பு மனுஷி’ என்று வர்ணிக்கப்பட்டார்.

தாட்சர் எத்தகைய குணம் கொண்டவர் என்பதை விளக்க இங்கிலாந்தில் ஒரு ஜோக் உண்டு.

றேகன், கோர்பச்சேவ், தாட்சர் என்ற மூன்று பேரும் ஒரு நாளில் மேல் உலகம் போகிறார்களாம். இவர்கள் அனைவருமே வி. வி. ஐ. பி. கள் என்பதால் கடவுளை தரிசிக்க காவலாளி உடனே கதவுகளை திறக்கிறார். உள்ள மிகப் பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கடவுள் றேகனைப் பார்த்து “என் நேசத்திற்குரிய மகனே, நீ உன் நாட்டுக்கு என்ன நன்மைகள் செய்தாய்?” என்று கேட்க, றேகன் தான் செய்த நன்மை களை மூச்சுவிடால் சொன்னார். “அப்படியா சரி! வா! வந்து என் இடது பக்கம் இருக்கும் நாற்காலியில் உட்கார்” என்றார்.

கடவுள் இப்போது கோர்பச்சேவை பார்த்து “ என் பாசதிற்கு சரிய மகனே... உன் நாட்டிற்கு நீ என்ன நன்மைகள் செய்தாய்?” என்று கேட்க கோர்பச்சேவ் தான் செய்த நன்மைகளை அடுக்கினார். “மகிழ்ச்சி நீ வந்து என் வலது பக்கம் இருக்கும் நாட்காலியில் உட்கார்” என்றார்.

கடவுள் அடுத்ததாக தாட்சரை நோக்கி ‘என் அருமை மகளே, நீ உன்நாட்டுக்கு என்ன செய்தாய்” என்று கேட்டு முடிப்பதற்குள் தாட்சர் சொன்னார்.

“நான் பதில் சொல்வது இருக்கட்டும். முதலில் நீங்கள் இரண்டு விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். முதலாவது நான் உங்கள் மகளில்லை. இரண்டா வது இருக்கையை விட்டு எழுந்திருங்கள் அது என்னுடைய நாற்காலி”

தாட்சர் உயிரோடு இருக்கும் வரை பிரதமர் பதவி தங்களது கட்சிக்கு கிடைக்கவே கிடைக்காது என்று எதிர்க் கட்சியினரே மனம் வெறுத்துப் போகும் அளவுக்கு தாட்சர் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சமயம் அதாவது 1990 ஆம் ஆண்டு தனது சொந்தக் கட்சி சகாக்களாலேயே பதவியிலிருந்து இறக்கப்பட்டார் என்பது ஒரு சோகமான அரசியல் திருப்பம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2008 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]