வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

வடக்கின் கல்வி வளர்ச்சிக்கு உரமூட்டிய அமெரிக்கன் மிசன் இலங்கை திருச்சபை

வடக்கின் கல்வி வளர்ச்சிக்கு உரமூட்டிய
அமெரிக்கன் மிசன் இலங்கை திருச்சபை
 

அடுத்த மாதம் 200வது நூற்றாண்டைக் கொண்டாடுகிறது

ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் நடைபெற்ற கொடிய யுத்தம் நிறைவு கண்டுள்ளது. ஆனாலும் இந்த யுத்தம் விட்டுச் சென்ற காயங்கள் எண்ணிலடங்காதவை. அவற்றில் தமிழ் மக்களுடைய புலம்பெயர்வும் சமூகச் சீரழிவுகளும் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொள்கின்றன. இவற்றின் மத்தியிலும் வட பகுதியில் காணப்படுகின்ற கல்வி வளர்ச்சிக்கும், மருத்துவ சாதனைகளுக்கும், சமூக மேம்பாட்டிற்கும், 1816ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வருகை தந்த மிசனரி மாரே அதிகம் பங்களிப்புச் செய்துள்ளனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

இவ்வருடம் இவர்களை இங்கு அனுப்பிய இவர்களுடைய தாய்ச் சங்கமான ‘பிறதேசத்திற்கு மிசனரிமாரை அனுப்பும் அமெரிக்க சங்கத்தின்’  (American Board of Commissioners for Foreign Mission - ABCFM)  200ஆவது ஆண்டு நிறைவு அமெரிக்காவில் நன்றியுடன் அனுசரிக்கப்பட்டது.

அதன் பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையும் இந்த மிசன் தொண்டர்களின் தியாக வாழ்வை நினைந்து 200வது ஆண்டு நிறைவை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டாடுகின்றனர்.

அமெரிக்கன் மிசனின் தோற்றம்

17ம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் சமய சார்பான அறவாழ்வு, அரசியல் ஆள்கை முறைமை என்பவற்றை விரும்பாதவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறி 1620இல் அமெரிக்காவில் வட கிழக்குக் கரையோரத்திலே குடியேறினர். இவர்கள் தாம் குடியேறிய இடத்தை ‘நியூ இங்கிலாந்து’ எனப் பெயரிட்டனர். இவர்களுடைய வாழ்வைக் கண்ட அப்பகுதி மக்கள் இவர்களை ‘புனித பிதாக்கள்’  (Pilgrim Fathers) என அழைத்தனர். அங்கு அவர்கள் மிக ஆர்வத்துடன் பாடசாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், குருத்துவப் பள்ளிகள் என்பவற்றை ஆரம்பித்ததுடன் சமூகப் பணிகளையும் சிறப்பாக செய்து வந்தனர்

இவர்கள் வாழ்ந்த ‘மசாட்ஸ்சுசட்ஸ்’ (Machatchusats) மாநிலத்தில் ‘வில்லியம்ஸ் கல்லூரி’ மிகச் சிறப்பான ஒரு கிறிஸ்தவக் கல்லூரியாகத் திகழ்ந்தது. அங்கு சாமுவேல் மில்ஸ் என்ற வாலிபன் தன்னுடைய 23வது வயதில் (1806ஆம் வருடம்) இக்கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்தான். அவனும் அவனுடைய நண்பர்கள் நான்கு பேரும் வாரத்தில் இருமுறை கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு பூங்காவில் ஒழுங்காகக் கூடி செபித்து வந்தனர்.

ஒருநாள் இவர்கள் செபிப்பதற்காக பூங்காவிற்குள் சென்ற போது பலத்த புயல், இடியுடன் கூடிய மழை பொழிந்தது. அவ்வேளையில் இவர்கள் செபிப்பதற்காக வைக்கோலில் செய்யப்பட்ட ஒரு குடிசைக்குள்ளே புகுந்து தொடர்ந்து ஒருமனப்பட்டு செபித்தனர். இதன் விளைவாக சாமுவேல் மில்ஸ் அவர்களும் அவருடைய நண்பர்களும் தம்மைத் தூரதேச மிசன் பணிக்காக ஒப்புக்கொடுத்தனர். இவர்களே அமெரிக்கன் மிசனின் முன்னோடிகள் ஆவர்.

இவர்களில் சாமுவேல் மில்ஸ் என்பவர் 1810 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கிறிஸ்தவ இறையியலைக் கற்பதற்காக ‘அன்டோவர் நியூட்டன் இறையியல் கல்லூரியில்’ இணைந்துகொண்டார். இக்கல்லூரியில் மில்ஸ் அவர்களும் அவருடைய நண்பர்களும் தம்மை பிறதேச மிசன் பணிக்காக அர்ப்பணித்தனர் இதன் விளைவாக ‘பிறதேசத்திற்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க சங்கம்’ அமெரிக்கன் மிசன் சங்கத்தின் முதல் மிசனரிமார் 1812ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இறை பணிக்காகப் புறப்பட்டனர்.

பிரித்தானிய ஆட்சியாளர்கள் இவர்களை அனுமதிக்காமையினால் அவர்களில் ஒருவரான சாமுவேல் நியுவெல் மனைவி, குழந்தை ஆகியோரது இழப்புக்களோடும் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்த சாமுவேல் நியுவெல் தெல்லிப்பழையிலிருந்த ஒல்லாந்தர் பாவித்த ஆலய வீட்டில் குடியேறி அமெரிக்கன் மிசனுடைய பணிகளை பல சவால்களுக்கு மத்தியிலும் ஆரம்பித்தார்.

இங்கிருந்து, யாழ்ப்பாணம் மிசன் பணிக்கு மிகவும் பொருத்தமான இடம் என்றும் இங்கு ஆளுகை புரியும் அரசினர் மிசனரிமாருக்கு அதிகம் உதவியாக உள்ளனர் என்றும் இலங்கையில் குடிசனம் மிகக் குறைவானது என்றும் இவர்களை மிசனரிமார் சந்திப்பது இலகுவானது என்றும், இலங்கையில் தமிழ், சிங்களம் எனும் மொழிகள் மட்டும் பாவனையில் உள்ளது என்றும் மினசரிமாரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புங்கள் என்றும் கடிதம் எழுதினார்.

இதன் விளைவாக 1816 இல் வந்த இரண்டாவது அணியிலே வண. ஜேம்ஸ் றிச்சட்ஸ், திருமதி ஜேம்ஸ் றிச்சட்ஸ், வண பி. சி. மெக்ஸ், திருமதி மெக்ஸ், வண. டானியல் பூவர், திருமதி டானியல் பூவர், வண. எச். பார்ட்வெல், திருமதி பார்ட்வெல், வண. எட்வேர்ட் வொறன் ஆகியோர் அடங்கியிருந்தனர். இவர்கள் நற்செய்திப் பணியோடு கல்விப் பணியையும் வைத்தியப் பணியையும் சமூகப் பணியையும் மேற்கொண்டனர்.

மிசனரிமாரின் வருகையினால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்

இவர்கள் யாழ்ப்பாணம் வந்தபொழுது மக்கள் கல்வியிலே மிகவும் பின்தங்கியிருந்தனர். பெண்கள் கல்வி கற்பது இழிவான செயல் என்று எண்ணினர். ஆனாலும் வண. மெக்ஸ் ஐயர் தமது நாட்குறிப்பில் தாம் அளவெட்டியில் ஒரு பெண்ணையும், உடுப்பிட்டியில் ஒரு பெண்ணையும் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக கண்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைத்து இரண்டு வருடத்திற்குள்ளேயே 400 பிள்ளைகளுடன் 12 பாடசாலைகளை ஸ்தாபித்து நடத்தினர்.

1823ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் ‘பற்றிக்கோட்டா செமினரி’ என்னும் ஓர் உயர் கல்விக் கூடத்தை வண. டானியல் பூவர் அவர்கள் ஆரம்பித்தார். இங்கே வானசாஸ்திரம், மெய்யியல் போன்ற அனைத்துப் பாடங்களும் புகட்டப்பட்டன. இந்த உயர் கல்விக்கூடமே 1872ஆம் ஆண்டிற்குப் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.

1824இல் உடுவிலில் திருமதி ஹரியற்வின்சிலோவினால் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் பாடசாலையே தெற்காசியாவில் முதல் முதல் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் விடுதிப் பாடசாலையெனப் பெயர் பெற்றது. கல்வி கற்கத் தம் பிள்ளைகளை அனுப்ப தயங்கிய பெற்றோர் இங்கு கல்வி கற்ற பெண் பிள்ளைகளுடைய அதீத முன்னேற்றத்தைக் கண்டு காலப் போக்கில் தம் பிள்ளைகளையும் இக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

1834 இல் மிசனரிமார் மானிப்பாயில் ஒரு மிசன் அச்சகத்தை ஆரம்பித்தனர். இதன் மூலமே இலங்கையில் இரண்டாவது ஆங்கிலப் பத்திரிகையான “Morning Star” ரும் உலகிலேயே முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகையும் வெளியிடப்பட்டது. ஏறத்தாழ இலங்கை அரசு மிசன் பாடசாலைகளை சுவீகரித்தபொழுது 185 மிசன் பாடசாலைகள் வட பகுதியிலிருந்ததாகக் கூறப்படுகிறது.

உலக அரங்கில் மருத்துவத் துறையில் பல சாதனைகள் மிசனரிமாரால் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்டன. 1820ல் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட மருத்துவக் கலாநிதி ஜோன் ஸ்கடர் அவர்களே உலகின் முதலாவது மருத்துவ மிசனரி ஆவார். இவர் தன்னுடைய பணியை பண்டத்தரிப்பிலேயே ஆரம்பித்தார். அவர் வாழ்ந்த வீடு பண்டத்தரிப்புச் சந்தியில் உள்ள ஆலயத்திற்கு அருகில் காணப்படுகின்றது.

இது இன்றும் ‘ஸ்கடர் கவுஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள வெல்லூர் மருத்துவமனையையும், வெல்லூர் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பித்தவர் இவருடைய மகள் ஐடாஸ்கடர் அவர்களே.

அதன் பின்னர் மருத்துவக் கலாநிதி சாமுவேல் பிஸ்க் கிaன் அவர்கள் 1848இல் மானிப்பாயில் ஒரு மருத்துவக் கல்லூரியையும் பொது மக்களிற்கான ஒரு வைத்தியசாலையையும் ஸ்தாபித்தார். இதுவே பொது மக்களுக்காக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வைத்தியசாலை எனவும் தெற்காசியாவிலே முதல் முதல் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி எனவும் பெயர் பெற்றது. கிaன் அவர்களிடம் பயின்ற முதலாவது மருத்துவ அணியினர் வைத்தியர்களாக 1850ல் வெளியேறினர். கிaன் அவர்கள் மருத்துவ நூல்கள் பலவற்றை தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழிலேயே பாடங்களையும் நடத்தினார். இது தமிழ் மாணவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. வைத்தியர் கிaன் அவர்கள் சுகயீனம் காரணமாக அமெரிக்காவிற்குச் சென்றிருந்த வேளை பிரித்தானிய அரசினர் ‘கிaன் அவர்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் வருவாரோ’ என்று அமெரிக்கன் மிசன் சங்கத்திற்குக் கடிதம் எழுதினார்கள். அவர் வரமாட்டார் என்பதற்கு பின்பே அரசினால் பொதுமக்களுக்கென ஒரு வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இன்று யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையாக விளங்குகிறது. இங்கு பணியாற்றிய முதல் வைத்தியர்கள் டாக்டர் கிaன் அவர்களிடம் கற்றவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆனால் அங்கு அதிகம் பெண் பிள்ளைகள் கல்வி கற்க முன்வரவில்லை. அவ்வேளையில் அங்கு கொலரா நோய் மிக வேகமாகப் பரவியது. கிராமத்தவர்கள் இந்த வெள்ளையர்கள் இங்கு வந்தமையினாலேயே இந்நோய் பரவிற்று என்றும், அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டுமென்றும் வேண்டினர். இதனாலே இப்பாடசாலை உடுப்பிட்டிக்கு மாற்றப்பட்டு இன்று உடுப்பிட்டி மகளிர் கல்லூரியாக திகழ்கிறது.

மிசனரிமார் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் கல்வி வளர்ச்சியிலும் மருத்துவ வளர்ச்சியிலும் சமூக விழிப்புணர்விலும் அர்ப்பணிப்புமிக்க பணிகளைச் செய்துள்ளமை நினைவுகூரப் படவேண்டிய ஒன்றாகும்.

தங்களுடைய வளம் மிக்க சொந்த நாடான அமெரிக்க தேசத்தை விட்டு இறை பணியாற்ற வேண்டுமென்று கிறிஸ்தவ நற்செய்தியை உலகெங்கும் பறை சாற்ற வேண்டுமென்றும் தம்மை முழுமையாக இறை பணிக்கென அர்ப்பணித்து மிகப் பயங்கரமான நீண்ட பல மாதங்கள் அடங்கிய கடல் பயணங்களை மேற்கொண்டு நம் தேசம் வந்து நோய்கள், காலநிலை மாற்றங்கள், ஒவ்வா உணர்வுகள் என்பவற்றுக்கு மத்தியிலும் இவர்கள் இறை பணியாற்றியமையினால் நாம் இன்று யுத்தத்தின் அழிவுகளுக்கு மத்தியிலும் கல்வி, மற்றும் சமூக முன்னேற்றங்கள் முன்னிலையில் உள்ளோம்.

மக்கள் விழிப்புடனும் உயர்ச்சியுடனும் வாழ தங்களை அர்ப்பணித்து பணியாற்றிய இந்த மிசனரிமார் அனேகருடைய கல்லறைகள் இன்றும் இறைபணிக்குச் சாட்சியாக வட்டுக்கோட்டையில் யாழ்ப்பாணக் கல்லூரியின் ‘பிக்னல்’ விளையாட்டு அரங்கிற்கு அருகிலும் உடுவில் மகளிர் கல்லூரியின் முன்பாகவும், தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகிலும் மிசன் கல்லறைத் தோட்டத்தில் சாட்சியாக மிளிர்கின்றன

‘வாழுகின்ற நமக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி’ என்பது அழிவுகளிற்குப் பின்பும் வாழ்வதற்கு அனுமதி கிடைத்த நம்மவர்களிற்கு கொடுக்கப்பட்ட அறைகூவலாகும்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »