மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
சோசலிச பாதையில் 100 ஆண்டு பயணம்

அக்டோபர் புரட்சி

சோசலிச பாதையில் 100 ஆண்டு பயணம்

மா பெரும் அக்டோபர் புரட்சி குறித்து பல வரலாறுகள் எழுதப்பட முடியும். 2017 ல் அதன் ஒரு நூறு ஆண்டுகள் முடிவடையும் போது, அப்புரட்சி குறித்து தமிழில் கூட பல வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும், பேசப்பட்டிருக்கும். உலக அளவில் மிக மிக அதிகமாகப் பேசப்பட்ட விடயமாக அது ஆகியிருக்கும். சமீப காலங்களில் இவ்வளவு அதிகமாக வேறு எந்த சம்பவமும் பேசப்பட்டிருக்காது. அக்டோபர் புரட்சி குறித்து அப்படிப் பல வரலாறுகள் தேவையாகவும் உள்ளது. விரிவாக ஏராளமாக எழுதப்பட, பேசப்பட வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்வு அது.

அக்டோபர் புரட்சி எவ்வளவு பெரிய ஒரு வெற்றியைக் குறித்ததோ, அதே அளவு அல்லது அதைவிட அதிகமாக அதன் தோல்வி ஒரு மிகப்பெரிய சோகத்தைக் குறித்து நிற்கிறது. ஒரு சங்கடமான சோகம் பல கோடிக்கணக்கான மக்களைப் பற்றிக் கொண்டது. இன்றுவரை அந்த சங்கடத்திலிருந்தும் சோகத்திலிருந்தும் வெளியே வரமுடியாதவர்கள் உண்டு.

இவ்வாறாகத்தான் அந்த மாபெரும் சம்பவத்திற்கு பல வரலாறுகள் எழுதப்பட இருக்கின்றன. அதன் வெற்றிகள், சாதனைகள் குறித்த வரலாறுகள். அதன் தோல்விகள், தவறுகள், படிப்பினைகள் குறித்த வரலாறுகள். அக்டோபர் புரட்சியின் சோசலிசத்தை அதன் எதிரிகள் வீழ்த்தியதாகத் தெரியவில்லை, அதன் சொந்த மனிதர்களே அதனை வெட்டிச் சாய்த்தார்கள். அதனால்தான் அதன் சோகம் மிகப் பெரிதாக உள்ளது.

இருபதாம் நூற்றாண்டு என்ற காலப்பரப்பின் வரலாற்றை அக்டோபர் புரட்சியைத் தவிர்த்து விலக்கி எழுதமுடியாது. அக்டோபர் புரட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்தான் இருபதாம் நூற்றாண்டு என்று சொல்லுமளவிற்கு இந்த நூற்றாண்டின்மீது அக்டோபர் புரட்சியின் செல்வாக்கு அடியாழமானது. இந்த நூற்றாண்டில் தான் சோசலிசமும் முதலாளியமும் நேருக்கு நேர் மிக உக்கிரமாக முட்டி மோதிக் கொண்டன என்று சுருக்கிச் சொல்லுமளவிற்கு இருபதாம் நூற்றாண்டு அமைந்து போயிற்று. வேறு எந்த நூற்றாண்டுக்கும் இல்லாத ஒரு முக்கியத்துவத்தை இருபதாம் நூற்றாண்டு பெறுவதற்கு அக்டோபர் புரட்சி காரணமாகிவிட்டது, அதன் வெற்றியும் தோல்வியும். இருபது முப்பது நூற்றாண்டுகளாக மனித குலம் சுமந்து கொண்டு திரிந்த துக்கங்களும் வேதனைகளும் இன்னும் பல ஏக்கங்களும் கனவுகளும் மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் போது ஒரு முடிவுக்கு வந்து, ஒரு மகத்தான புதிய வாழ்வு பிறந்து விட்டது போலத் தோன்றியது. ஆயின் ஓர் எழுபது எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த ஓர் அக்கறையுமில்லாத பாவனையுடன் அது சரிந்து போய்விட்டது என்பதை நம்ப முடியவில்லை.

அக்டோபர் புரட்சியுடன் இரண்டறக் கலந்தது இருபதாம் நூற்றாண்டில் ரஷ்ய மக்களின் வரலாறு. ஒரு மிகப் பெரிய மக்கள் தொகுதி ரஷ்ய மண்ணில் ஒரு மகத்தான வரலாற்றைச் சாதித்துக் காட்டியது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருநூறு, முந்நூறு ஆண்டுகளாகச் சாதித்த சாதனைகளை, அதற்கு எதிர் திசையில் அமைந்த கோட்பாட்டுப் பிடிவாதத்தோடு வெறும் அறுபது, எழுபது ஆண்டுகளில் ரஷ்யர்கள் சாதித்துக் காட்டினார்கள். “சோசலிசம் வென்றது” என்ற பெருமிதத்தை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ரஷ்ய மக்கள் மிகப்பெரும் தியாகங்களைச் செய்தார்கள் – ஒரு குறிப்பிட்ட காலம் வரை. பின் ஏன், எப்படி, எப்போது, எங்கே ரஷ்யர்கள் தேங்கிப் போனார்கள்?

அக்டோபர் புரட்சியோடு சேர்த்து இன்னும் பல சிறிய, பெரிய வரலாறுகள் எழுதப்பட முடியும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் உருவான வரலாறு, இரண்டாம் உலக யுத்தத்தின் வரலாறு, அமெரிக்கா – சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கு இடையிலான பனிப் போரின் வரலாறு, உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு..இன்னும் பல..

அக்டோபர் புரட்சியும்

மார்க்சியத்தின் வரலாறும்

இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம், சோசலிசப் புரட்சி என்று மார்க்சியப் பாடங்களை வரிசைப் படுத்தும்போது, அது அக்டோபர் புரட்சி இல்லாமல் நிறைவடையாது. கார்ல் மார்க்சின் படைப்புக்களில் சோசலிசப் புரட்சி குறித்த நேரடி அனுபவம் சார்ந்த எழுத்துக்கள் கிடையாது. எனவே புரட்சி குறித்த கோட்பாட்டு உருவாக்கமும் மார்க்சிடம் குறைவாகவே இருந்தது. ஆயின் அக்டோபர் புரட்சியும் லெனினியமும் மார்க்சியத்தின் மகுடங்களாக அமைந்தன. லெனினியம் புரட்சியின் அத்தனை அனுபவங்களிலும் நனைந்தது. லெனினியம் என்ற சொல்லாக்கமே புரட்சி அனுபவங்களின் கோட்பாட்டு உருவாக்கம்தான். புரட்சிக்கான அகவயக் காரணிகள் எவை? புறவயக் காரணிகள் எவை? பொது நெருக்கடி என்றால் என்ன? கட்சி உறுப்பினர் என்றால் யார்? கட்சி மாநாட்டின் பணிகள் யாவை? கட்சியின் வேலைத்திட்டம் என்றால் என்ன? கட்சியின் வெகுசன அமைப்புகள் என்றால் எவை? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? இன்னும், சோசலிச கட்டுமானம் என்றால் என்ன? மார்க்சின் பொருள்முதல்வாதத்தையும் இயங்கியலையும் அக்டோபர் புரட்சியின் தலைவரான லெனின் செழுமைப்படுத்தினார். ஒரு பின்தங்கிய விவசாய சமூகத்தில் முதலாளிய உறவுகள் எவ்வாறு பரவுகின்றன, எப்படி ஆட்கொள்ளுகின்றன? முதலாளியம் ஏகாதிபத்தியமாக எவ்வாறு உருவெடுக்கிறது? அது குறித்துத் தனியாகப் பேசவேண்டிய அவசியம் என்ன? சர்வதேச புரட்சி இயக்கத்தில் தேசிய விடுதலை இயக்கங்களின் பாத்திரம் என்ன? என்பதை லெனின் தெளிவுபடுத்தினார். மார்க்சியத்தின் பல்வேறு கோட்பாட்டு விவாதங்களில் அக்டோபர் புரட்சி தனது நேரடியான பங்களிப்பை வழங்கியது. மார்க்சியம் வரையறுக்கப்பட்ட வடிவில், திட்டவட்டமாக ரஷ்ய மார்க்சியர்களால் மீட்டு எழுதப்பட்டது. அக்டோபர் புரட்சியின்றி, சோவியத் சோசலிசம் இன்றி மார்க்சியத்தை இன்று கருதுவது இயலாது.

ஓர் அறியப்படாத பாதையில் சோசலிசம்

அக்டோபர் புரட்சிக்குப் பிறகான பாதை யாராலும் அறியப்படாத ஒன்றாக இருந்தது. சோசலிசத்தை எந்த ஒரு உலக நாடும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வில்லை. ஆயின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களிடையில் அது ஒரு கனவாக, நம்பிக்கையாக, எதிர்பார்ப்பாக, ஒரு புதிய செய்தியாகப் பரவத் தொடங்கியது. ஜார் ஆட்சியின் வீழ்ச்சி, சமத்துவம், பொது உடமை, உழைப்பாளிகளின் ஆட்சி, சுரண்டலற்ற சமூகம், அடக்குமுறை அற்ற சமூகம் போன்ற செய்திகள் பரவத் தொடங்கின. பண்பாட்டு நினைவுகளிலும் சமய நம்பிக்கைகளிலும் ஒளித்துக் கிடந்த ஏக்கங்கள் இப்போது உண்மையாகப் போகின்றன, என உலகெங்கும் உள்ள கவிஞர்களும் சிந்தனையாளர்களும் அந்நாட்டை ஆர்வத்துடன் உற்று நோக்கினர். எமது சோசலிசம் விஞ்ஞானபூர்வமானது என்று மார்க்சிய அறிஞர்கள் கூறுவதுண்டு. ஆயின் அதன் விஞ்ஞானபூர்வமான ஆற்றலைவிட அதன் கற்பனாபூர்வமான ஆற்றல், உணர்ச்சிபூர்வமான ஆற்றல் மிகப்பிரம்மாண்டமானது. சோசலிசம் குறித்த கனவுகள் எல்லா மக்களிடையிலும் எல்லா மொழிகளிலும் எல்லா இலக்கியங்களிலும் உண்டு. இந்த உலகம் நிலையற்றது, பொய்யானது, பிறிதோர் உலகுக்குச் செல்லுவோம், துக்கமே எதார்த்தமல்ல, துக்க நிவாரணம் சாத்தியமே என்பது போன்ற சொல்லாடல்கள் தற்செயலானவை அல்ல. சோசலிசம் பற்றிய கனவுகளுக்குள் மானுட சமூகத்தின் மிகப் பழமையான நீதி, நியாயம் குறித்த ஏக்கங்கள் மறைந்து கிடக்கின்றன. அந்த மிகப் பழைய நினைவுகளைத் தொட்டு எடுத்து மார்க்ஸ் மீட்டிக் காட்டினார். அவை வெறும் கனவுகளல்ல, அவை சாத்தியமே என்று அவர் கூறினார். அதுவே அவரது மகத்துவம்.

ரஷ்ய சோசலிசமும் மேற்கு உலகும்

மேற்கு உலகு என்பது பெரும்பாலும் முதலாளிய நாடுகளைக் கொண்ட உலகு. அக்டோபர் புரட்சி மிக முக்கியமாக மேற்கு நாடுகளைத்தான் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கோட்பாட்டுரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் சோசலிசப் புரட்சி அடுத்து உடனடியாக மேற்கு நாடுகளில்தான் நிகழும் என்று மார்க்சியரும் மார்க்சியர் அல்லாதோரும் எளிதில் கணக்கிட்டனர். ஆம், அதுதான் எங்கள் திட்டம், என்று கம்யூனிஸ்டுகளும் வெளிப்படையாக அறிவித்தார்கள். சோசலிசம் முதலாளியத்திற்கு மாற்று, என்ற கருத்து மேற்கு நாடுகளை அச்சுறுத்தியது. அந்த மாற்று ஏற்பாடு மிகப்பெரிய ஒரு கோட்பாட்டுப் பின்புலத்துடனும் அதைவிடப் பெரிய வெகுமக்களின் அரசியல் செயல்பாட்டுடனும் இணைத்து முன்வைக்கப்பட்டது. “அவர்கள் ஆயுதம் ஏந்தவும் தயாராக உள்ளார்கள்” என்ற செய்தி முதலாளிகளைத் தூக்கமில்லாமல் ஆக்கியது.

1930 களில் மேற்கு நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி, அடுத்த ஆண்டுகளில் பாசிசத்தின் எழுச்சி, இரண்டாம் உலகப் போர், கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசம், சீனாவில் சோசலிசப் புரட்சி போன்ற சம்பவத் தொடர்ச்சிகளால் மேற்கு நாடுகள் அலறத் தொடங்கின. இப்படியே நெருக்கடியும் போருமாகத் தொடருமெனில் உலகமெங்கும் சோசலிசம் வருவது நிச்சயம் என்பதை அதன் எதிரிகள் நன்கு புரிந்து கொண்டனர். அந்தோனியோ கிராம்சி ஒருமுறை குறிப்பிட்டார்: புரட்சியை அதற்கு உரியவர்கள் புரிந்து கொள்ளுவதை விட அதன் எதிராளிகள் வேகமாகவும் சரியாகவும் புரிந்து கொள்ளுகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஆண்டுகளில் மேற்கு நாடுகளின் வேலைத்திட்டங்களில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டன. மேலை நாடுகளில் தொழிலாளர் எழுச்சிகள் உருவாகாமலிருக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொழிலாளர் சட்டங்கள், பாதுகாப்புகள், மனித உரிமைகள், மக்கள்நலப் பொருளாதாரம் என்ற திசைகளில் மேற்கு நாடுகள் வேலை செய்தன. மேற்குலகின் முதலாளியம் சோசலிசத்திற்கு எதிராக சனநாயகம், மனித உரிமைகள் என்பது போன்ற நடைமுறைகளை முன்நிறுத்தியது. முதலாளியம் சோசலிச அமைப்பை நுகர்வுப் பொருளாதாரம், தொழில்நுட்பப் புரட்சி, அணு ஆயுத உற்பத்தி ஆகிய போட்டிகளுக்குள் உள்ளிழுத்தது. அந்தப் போட்டிகளினின்றும் சோசலிசத்தால் தப்பிக்க முடியவில்லை. போட்டியின் இயங்கியல் எதிராளிகளை ஒருபடித்தானவர்களாக மாற்றியது. சோசலிசத்தின் சொந்த இலக்குகள் தவறத் தொடங்கின. சோவியத் மக்கள் கட்சியோடும் அரசாங்கத்தோடும் ஒன்றுபட்டு நின்றவரையில் அரசின் மிகப்பெரிய பொருளாதார இலக்குகளையும் சாதிக்க முடிந்தது. ஆயின் பார்வைகள் வேறுபட்டபோது, இலக்குகளை எட்ட அதிகாரவர்க்கத்தின் பலத்தை நம்பவேண்டிவந்தது.

இரண்டாம் உலகப் போருக்கு அடுத்து வந்த காலத்திலேயே, சோசலிச அமைப்பில் சில அடிப்படையான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும். புதிய சூழல்கள் கண்டறியப்பட்டு பொருத்தமான மாற்றுத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வாய்ப்புகள் மிகக் கொடூரமாகத் தவறவிடப்பட்டன. மிகயில் கர்பச்சேவ் அதே பிரச்சினைகளை மீண்டும் கையிலெடுத்தபோது, அவர் தாமதமாகிப் போனார். கட்சியால் பிரச்சினைகளையும் மக்களையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளமுடியவில்லை. எத்தனை படைவரிசைகள், அணு ஆயுதங்கள் இருந்த போதும்- மக்கள் ஆதரவும் சரியான தலைமையும் இல்லாது போனபோது- சோசலிசத்தைக் காப்பாற்ற முடியவில்லை!

சோசலிசமும் மூன்றாம் உலக நாடுகளும்

1917 ல் ரஷ்யா ஐரோப்பாவிலேயே மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. அது முழுக்க ஓர் ஐரோப்பிய நாடு என்று கூட சொல்லிவிட முடியாது. ரஷ்ய உளவியல் ஏராளமாக கீழை நாட்டு மாந்தர்களின் பண்புகளைக் கொண்டிருந்தது. ரஷ்ய கிறித்தவம் கத்தோலிக்கமும் அல்ல, சீர்திருத்த கிறித்தவமும் அல்ல. பழைமைவாத கிறித்தவம் என அது அழைக்கப்பட்டது. கத்தோலிக்கக் கிறித்தவம் ரோமாபுரி ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டது, சீர்திருத்த கிறித்தவம் நவீன ஐரோப்பிய முதலாளிகளுடன் சமரசம் செய்துகொண்டது, பழமைவாத ரஷ்ய கிறித்தவம் மட்டுமே பூர்வீக கிறித்தவத்தின் தூய்மையை இன்னும் தன்னில் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்று தஸ்தயேவ்ஸ்கி எழுதுவார். இத்தனை பழமைத் தன்மை கொண்ட ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை என பல சோசலிஸ்டுகளே கருதினர். மேற்கு நாடுகளின் சோசலிஸ்டுகளில் சிலர் ரஷ்யர்களைத் தமது ஐரோப்பிய மையவாத பார்வையோடு நோக்கினார்கள் என்று லெனின் வருந்திய சந்தர்ப்பங்கள் உண்டு. இத்தகைய சூழல்களை எதிர்கொள்ளவே லெனின், ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியில் நிகழ்ந்த புரட்சி இது என்று சித்தரிப்பார். அந்தோனியோ கிராம்சி ரஷ்யப் புரட்சியைப் பற்றி எழுதியபோது, அது மார்க்சின் “மூலதனம்” நூலுக்கு எதிராக நடந்த புரட்சி என்றார். ரஷ்யா, முதலாளியத்தின் வளர்ச்சியடைந்த புள்ளி அல்ல, பலவீனமான புள்ளி அது என்பதையே அவரும் குறிப்பிட்டார். 80 சதவீதத்திற்கும் அதிகமாக விவசாயிகளைக் கொண்ட நாட்டில் நடந்த புரட்சி அது என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டனர். நூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் அன்றைய ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் வாழ்ந்தன. ஜார் மன்னரின் ஆட்சி என்பது பல தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று லெனின் எழுதினார். அக்டோபர் புரட்சி அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசிய இனங்களை விடுதலை செய்யும் என்று லெனின் புரட்சியின் போது அறிவித்தார். 1917 டிசம்பர் 31 ஆம் நாள் முடிந்து புத்தாண்டு பிறந்தபோது பின்லாந்து நாடு ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்றது.

லெனின் ஆசிய மக்களின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்தார். ஆசிய தேசிய இனங்கள் எழுச்சி அடைவதை லெனின் பெரிதும் எதிர்நோக்கினார். சர்வதேச அரசியலில் ஆசிய தேசிய இனங்கள் ஒரு மிகப்பெரும் இடத்தை வகிக்கமுடியும் என்பதை லெனின் அறிந்திருந்தார். லெனினது இரண்டு கருத்தாக்கங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு பெரிதும் உதவின. ஒன்று, ஏகாதிபத்தியம் என்ற கருத்தாக்கம். மற்றது, தேசிய விடுதலை இயக்கங்கள் என்ற கருத்தாக்கம். முந்தியது உலக முதலாளியத்தின் உருவாக்கத்திலும் நிலைகொள்ளலிலும் காலனிய நாடுகள் வகிக்கும் இடம் பற்றியது. இரண்டாவது, ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியில் தேசிய விடுதலை இயக்கங்களின் பாத்திரம் குறித்தது. இரண்டாவது கருத்தாக்கத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தும் இடம்பெறும்.

உலக முதலாளியத்தை ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் தனியாக நின்று வீழ்த்திவிடமுடியாது என்பதில் லெனின் உறுதியாக இருந்தார். தேசிய விடுதலைச் சக்திகள் உலக முதலாளியத்தைக் கடுமையாகப் பலவீனப்படுத்தும் என அவர் எதிர்பார்த்தார்.

எனவே தேசிய விடுதலை இயக்கங்களின் சுயாதீனமான ஆற்றலை லெனின் பெரிதும் நம்பினார். சர்வதேச அரசியலில் லெனினின் வேலைத்திட்டம் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியிருக்க முடியும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தேசிய விடுதலைச் சக்திகளின் ஆற்றல் சோசலிச முகாமால் போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை. தேசிய விடுதலை சக்திகள் பற்றிய லெனினது பார்வை புறம் தள்ளப்பட்டது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கடி யுத்தத்தில் சோவியத் முகாமிற்கு ஆதரவளிப்பது மட்டுமே விடுதலை பெற்ற நாடுகளின் வேலை என்பது போலக் கருதப்பட்டது. மூன்றாம் உலக நாடுகள் சோசலிசத்தின் தொங்கு சதையாக விளங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளின் சொந்தப் பிரச்சினைகள் அவற்றுக்கே உரிய தனித்த பண்புகளுடன் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பேசப்படவில்லை.

சில முடிவுகள்

மாபெரும் அக்டோபர் புரட்சியின் வெற்றிகளிலிருந்து எவ்வாறு மார்க்சிய கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்படுகிறதோ, அது போலவே சோசலிசத்தின் தோல்விகளிலிருந்தும் கோட்பாட்டு உருவாக்கம் நிகழ்த்தப்பட வேண்டும். அக்டோபர் புரட்சியின் பல வரலாறுகள் எழுதப்பட்டால்தான் அது தொடர்பான விரிவான விவாதங்களிலிருந்து அது செய்யப்படமுடியும். மார்க்சியத்தின் தோற்றம் பற்றி ஒரு மார்க்சியர் சொல்லும்போது, அது கீழிருந்து உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடு என்பார். அதாவது மார்க்சியத்தின் அடிப்படைப்பண்பே அதன் சனநாயகம் என்பார் அவர். சோசலிசப் புரட்சியை மக்களே அவர்களது விரிந்த பங்கேற்பால், சனநாயகபூர்வமான செயல்பாடுகளால் நிகழ்த்த வேண்டும் என்பார் அவர். மார்க்சியத்திற்கு முன்பே சோசலிசம் என்ற இலக்கு அறியப்பட்டிருந்த போதிலும், அது ஒரு சனநாயக வேலைத்திட்டத்தை எட்டியபோதே மார்க்சியமாகியது. அக்டோபர் புரட்சியின் அனுபவங்கள் மிகப் பிரும்மாண்டமானவை. அதன் வெற்றிகள் மட்டுமல்ல, தோல்விகளும் மிக விரிவாகப் பயிலப்படவேண்டும். தோல்விகளிலிருந்து படிப்பினைகள் எடுத்துக் கொள்ளப்படும்வரை, அவை புரட்சிகளின் முடிவைக் குறிக்காது. தொடர்ந்து செல்லுவதற்கான திசைவழிகளையே குறிக்கும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]