மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
சட்டமும் ஒழுங்கும் இலங்கையில் சீராகவே உள்ளன

சட்டமும் ஒழுங்கும் இலங்கையில் சீராகவே உள்ளன

ஏஞ்சல் தொலைக்காட்சியின் ஸ்தாபகர் சாது சுந்தர் செல்வராஜுடன் ஒரு சந்திப்பு...

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஏஞ்சல் தொலைக்காட்சியின் ஸ்தாபகரும் தமிழகத்தின் பிரபல சுவிஷேகரும் நற்செய்தியாளருமான சாது சுந்தர் செல்வராஜ் தென்னிந்தியாவில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு தபால் ஊழியராக கடமையாற்றினாலும், அவர் பகுதி நேர பூசகராக இருந்தவர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது இல்லத்தில் பூசை நடைபெறும். வருடத்திற்கு ஒருமுறை விசேட பூசை நடைபெறும்.

அவ்வாறான குடும்பத்தில் தலைப்பிள்ளையாக இருந்ததனால் தந்தையின் பாதையில் சென்று ஒரு பூசகராக வேண்டும் என்ற சிந்தனை சிறுவயது முதலே அவருக்கு உருவாகியது. சிறுவது முதல் மந்திரங்கள், சுலோகங்களை மனனம் செய்து பூசைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன், முழுநேர பூசகராக வேண்டும் ஆசையும் சிறுவயதிலேயே உருவாகியது. இதற்கான மதக் கடமைகளை சீராக செய்து வந்தார்.

பதினாறாவது வயதில் தனது ஊரில் நடந்த ஒரு சுவிசேஷ கூட்டத்திற்கு (1978.06.08) கிடைத்த அழைப்பினூடாக அங்கு சென்றிருந்த வேளையில்,’மனிதனின் உன்னதமான படைப்பு குறித்து கூறப்பட்டது. மனிதன் பாவம் செய்து தேவமகிமையை இழந்தவனாக இருக்கிறான். இயேசு கிறிஸ்துவின் மூலமே மீட்பு உண்டென கூறப்பட்டது. இயேசு கிறிஸ்து யார் என்ற கேள்வி எனது உள்ளத்தில் எழுந்தது. இதன் மூலமாகவே இயேசு கிறிஸ்துவை எனது மீட்பராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டேன் என்று அவர் கூறுகின்றார். அவர் தினககரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி....

கேள்வி: நீங்கள் தேவ சேவைக்கு எப்போது வந்தீர்கள், வந்ததின் நோக்கம் என்ன ?

பதில்: 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நான் பாடசாலைக்கு செல்லும் போது, எனது நினைவுகள் இறைவனை பற்றியதாயிருந்தது.இறைவனை குறித்து மேலும் தேட ஆரம்பித்தேன், ஜெபித்தேன்.

தேவ பணிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு ஒரு சுவிசேஷகனாக, துறவியாக, வீட்டை விட்டு வெளியேறி ஒரு சன்னியாசியாக சாதுவாக இந்தியாவின் நாலாபக்கத்திற்கும் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளியது. சுவிசேஷம் என் மேல் விழுந்த கடமையாயிற்று.

கேள்வி: காவியுடையுடன் வலம் வருகிறீர்களே காரணமென்ன, காவியுடையின் அர்த்தம் என்ன?

பதில்: இந்திய சரித்திரத்தில் 1889 இல் சாது சுந்தர்சிங் பிறந்து 1929 வரை இந்தியாவில் தேவபணி செய்தார். 2002 ஜூன் மாதம் எனது உறவினர் வீட்டில் இந்த மகானின் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. “தாய் தகப்பனை இழந்து, சகல சொத்துக்களையும் இழந்து இந்தியாவின் நாலா திசைகளிலும் அலைந்து திரிந்து ஒரு சாதுவாகதான் தேவபணியாற்றியதாக” இப்புத்தகம் சொல்கிறது. இதன் பின்னர் இவரின் புத்தகங்களை எல்லாவற்றையும் வாங்கி வாசித்தேன். இவரும் ஒரு சாதுவாக இருந்தே செயலாற்றினார். இதே அழைப்பினை எனக்குள் உணர்ந்தேன்.

இந்தியாவில் இந்து சந்நியாசிகள், சாதுக்கள் இது போன்ற உடைகளை அணிந்து, தாம் சமுதாயத்திலிருந்து வேறானவர்கள் என்று இறைதொண்டுக்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்று இனங்காணப்படுகிறார்கள். பூர்வகாலத்தில் சந்நியாசிகள் காடு, மலைகளில் தவமிருப்பதற்கு செல்வதுண்டு. இவர்களுக்கு காட்டிலுள்ள மிருகங்களின் அச்சுறுத்தல் உண்டு. ஆனால் சூரிய வெளிச்சம் படும் போது தீயைப் போன்று ஒரு தோற்றம் உருவாகுமாம். இதன் நிமித்தம் காட்டுமிருகங்கள் இவர்களை அண்டாது என்ற ஐதீகம் உண்டு.

இந்த காவியுடை சூரியனைக் குறிக்கும். சூரியன் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும். சூரியன் எப்படி ஜீவன் அளிக்கிறதோ அதேபோன்று ஒளி ஜீவன் அளிக்கிறது. அதாவது ஞானம் அல்லது முத்தி பெற்றதற்கு ஓர் அடையாளமாகும். இது தமது சரீரத்தை ஒடுக்கி, சுயவிருப்பத்தை விட்டு வாழும் வாழ்க்கையைக் குறிக்கும்.

கேள்வி: ஏஞ்சல் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன, எப்போது ஆரம்பித்தீர்கள், எத்தனை மொழிகளில் ஒளிபரப்பப்படுகின்றன?

பதில்: 1997 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொடராக நடத்த ஆயத்தம் செய்யப்பட்டது. ஆனாலும் 1999 இல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதற்காக ஒளிப்பதிவு செய்வதற்காக ஒரு சிறிய ஸ்டூடியோ உருவாக்கப்பட்டது. இதன் ஊடாக தேவதரிசனம் கிடைக்கப் பெற்றது, உலக முழுவதும் தேவசெய்தியை அறிவிக்கும் செயற்பாடாக என்று அறியப்ட்டபது. 2005.12.25 ஆம் திகதி ஏஞ்சல் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது. உலகத்திலுள்ள அனைத்து மக்களுடன் ஒரே நேரத்தில் பேசக்கூடிய ஊடகமான இது தமிழ் அலைவரிசையாகும். 2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய தேசத்தில் தமிழ் மக்களுக்காக அங்கு ஓர் அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் 12 ஒளிப்பரப்பு அலைவரிசைகள் உள்ளன. அத்துடன், எட்டு மொழிகளில் ஒளிப்பரப்பாகின்றன.

கேள்வி: இலங்கை வந்ததன் நோக்கம் என்ன?

பதில்: இலங்கையிலுள்ள தமிழ் சிங்கள மக்கள் ஏஞ்சல் தொலைக்காட்சியை அதிகமாக நேசிகின்றார்கள். இலங்கையில் தேவனின் தரிசனத்தை விளக்கவே வந்தேன். கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் மூன்று கூட்டங்களையும் கொழும்பில் மூன்று கூட்டங்களை நடத்தினேன்.

கேள்வி: எதிர்காலத்தில் கிறிஸ்தவ சேவையின் பங்களிப்பு பற்றிக் கூறுங்கள்?

பதில்: இந்த கடைசி காலத்தில் தேவன் மிகப்பெரிய காரியத்தை பூமியெங்கும் செய்யப் போகிறார். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அபிஷேகம் பெற்றுவார்கள். உலகத்தை அசைக்ககூடிய மகா பெரிய காரியங்களைச் செய்யப் போகிறார். மூத்தவர்களையும் அதிகமாக நேசித்து அவர்களையும் வழிநடத்துகின்றார். திருச்சபைகள் சாதாரண நிலையிலே இருக்கின்றன. முதலாம் நூற்றாண்டில் திருச்சபை மகா வல்லமையுடன் இருந்தது. தேசதலைவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதற்காக தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். கடைசிக் காலத்தில் இருளில் இருக்கும் ஜனங்கள் ஒரு வெளிச்சத்தைக் காணப்போகிறார்கள் என்று (யோவேல். 2:28, அப்போஸ்தலர் 2:17) வசனங்கள் கூறுகின்றன.

கேள்வி: கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரைகள் என்ன?

பதில்: வெளிப்படுத்தல் 2:17 இல் திருச்சபையானது மணவாட்டிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பரிசுத்தத்தில் புனிதத்தில் பக்தியில் ஒழுக்கத்தில் தங்களைப் பலப்படுத்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். திருச்சபைகள் அனைத்தும் ஒரு தாயின் பிள்ளைகள் போன்று இருக்க வேண்டும். நமக்கு ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரு நம்பிக்கை உண்டு. இது போன்றே நாமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பரந்த மனநிலையும் கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டும்.

கேள்வி: இலங்கையிலுள்ள கிறிஸ்தவ விசுவாசிகள் பற்றி கூறுங்கள்?

பதில்: கடந்த வாரம் மூன்று நாட்கள் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். இப்பொழுது கொழும்பில் இருக்கிறேன். சட்டமும் ஒழுங்கும் சீராக காணப்படுகிறது. இது இந்தியாவைப் பொறுத்த வரை மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைகவசம் அணிவது இல்லை. அத்துடன் முழுக் குடும்பமும் அதில் செல்லும். ஆனால் இலங்கையில் அப்படியில்லை. அத்துடன், எங்கும் சுத்தமாகவும் காணப்படுகிறது. ஆனால் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் போன்று வைராக்கிய பூர்வமான பக்தி குறைவாக இருக்கிறது. இனி அவைகள் எல்லாம் மாறும் இவர்களும் சிறந்து விளங்குவார்கள். தேவன் இவர்களையும் அழைத்துள்ளார். தெரிவு செய்துள்ளார்.

‘இயேசு கிறிஸ்துவின் இறுதி மாபெரும் கட்டளைக்கிணங்க, ‘நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” (மத். 28:19) என்ற வார்த்தைக்கு அமைய சுவிஷேக பணிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]