மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி தவறாக வழிநடத்தமுற்படாதீர்கள்

முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி தவறாக வழிநடத்தமுற்படாதீர்கள்

கேள்வி – அண்மையில் மீண்டும் இனவாதச் செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதே. இதனைத் தடுக்க முடியாதா?

பதில் – கடந்த ஆட்சியில் சிலதீயசக்திகள் இனவாதத்தை தூண்டி நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளிவிட்டன. அன்றைய நாட்டின் தலைவரிடம் நாம் பல தடவைகள் இதனைத்தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தோம். எமது அதிருப்தியையும் வெளிக்காட்டினோம். ஆனால் அவர் இவ்விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். சில நாட்களுக்குள் அடங்கிவிடும் என்று எம்மை சமாதானப்படுத்தினார்.

ஆனால் நடந்தது மோசமான விளைவுகளே ஆகும். நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தூண்டி விடப்பட்டன. பாரிய அளவில் எமது சமூகம் அழிவுகளை எதிர்கொள்ளும் நிலை உருவானது. இதில் தர்காநகர் சம்பவம் சர்வதேச மட்டம் வரை கொண்டு கொல்லப்பட்டது. அந்த நேரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் மஹிந்த ஆட்சிக்கு எதிராகச் சென்றிருக்கு மாட்டார்கள். 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவதற்கு பிரதான காரணம் முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதச் செயற்பாடுகளே .

2015 உருவான நல்லாட்சியின் பின்னர் இனவாதச் சக்திகள் சிறிது காலம் அடங்கிப் போயிருந்தன. அண்மைக் காலமாக மீண்டும் அது தலைதூக்கியுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சக்தியொன்று இருப்பதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனை ஒடுக்குவதற்குரிய கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதியும், பிரதமரும் எம்மிடம் உறுதியளித்துள்ளனர். எனவே, முஸ்லிம் சமூகம் ஆத்திரமடையாமல் பொறுமைகாக்க வேண்டும்.

கேள்வி – அரசியலமைப்பு மாற்றத்தின் போது முஸ்லிம் தனியார் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்போவதாகக் கூறப்படுவதால் முஸ்லிம்கள் மத்தியில் அரசு மீதான அதிருப்தி தலைதூக்கியுள்ளதே?

பதில் – இன்றைய சூழ்நிலையில் அரசியலமைப்பு மாற்றம் மிக முக்கியமானது. அதனை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் இன்னமும் ஆராயப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. திருமண வயதெல்லை தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை.

முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் ஷரீஆவுக்கு முரணாக செயற்பட முடியாது. குர்ஆன், சுன்னா வழிகளை தடுக்க முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அதே சமயம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தான் கை வைக்கப் போவதில்லை என ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்திருக்கின்றனர். எனவே இதுவிடயத்தில் முஸ்லிம் சமூகம் அவசரப்படத் தேவையில்லை. ஆர்ப்பாட்டங்களால் சமூகத்தை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து விடக்கூடாது.

கேள்வி – அடிப்படியானால் முஸ்லிம்களின் அச்சத்தைப்போக்க எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்?

பதில் – 30 வருடகால தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தால் நாடு எதிர்கொண்ட சவால்களை நாம் ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும். ஆயுதப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் எமது பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரப் போவதில்லை. பதிலாக சமூகம் பாரிய நெருக்கடிகளையே சந்திக்க வேண்டி ஏற்படும்.

முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முதலில் முஸ்லிம் தலைவர்களும், அமைப்புகளும் ஒரே மேடையில் கூடிப்பேச வேண்டும். பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயவேண்டும். அனைவரும் ஒத்தமுடிவுக்கு வந்து அதனை உரிய இடங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம் ஓர் இணக்கப்பாட்டை எட்டமுடியும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மிக அவசரமாக மேற்கொள்வது அவசியமானதாகும்.

கேள்வி – முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் ஓர் அமைப்பு முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் – இது அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகவே தான் பார்க்கின்றேன். ஆத்திரப்படுவதன் மூலம் ஏனைய மதத்தவரின் எதிர்ப்புகளுக்கே முகம்கொடுக்க வேண்டிவரும். அந்த அமைப்பின் ஆர்ப்பாட்டச் செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

சமூகத்தை தவறாக வழிநடத்த எவரும் முனையக் கூடாது. வீதிப் போராட்டங்கள் அல்ல எமக்குத் தேவை. முதலில் நாம் ஒன்றுபடவேண்டும். எமக்கிடையே யான முரண்பாடுகளை முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் பலவாக பிளவுபட்டுப் போயுள்ளோம். மக்களைத் தூண்டிவிடுவதால் அழிவுகளின் பக்கமே சமூகம் கொண்டு செல்லப்படும் என்பதை புரித்து கொள்ள வேண்டும். நாம் குர்ஆன். சுன்னா வழியில் செயற்பட வேண்டும். யாரும் தனிவழி செல்லமுடியாது.

இன்று உலகளாவிய மட்டத்தில் முஸ்லிம்கள் சவால்களை எதிர் கொள்கின்றனர். மேற்குலகம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குறிவைத்து செயற்பட்டுக் கொண்டுள்ள நிலையில் இங்கு தாம் பிளவுபட்டால் அதன் பிரதி பலன் எவ்வாறு அமையும் என்பதைச் சித்தித்துப் பார்க்க வேண்டும்.

கேள்வி – முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்.

பதில் – இந்த விடயத்தில் உடனடியாக எந்த முடிவுக்கும் தாம் வந்து விடமுடியாது. ஏனெனில் குர்ஆன், ஷரீஆ சட்டத்தை முஸ்லிம்களால் மீறமுடியது. இது குறித்து உலமாக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னொரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன் 12 வயது என்ற விடயம் குறித்து தாம் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பான்மைச் சமூகம் 12 வயது திருமணம் தொடர்பில் ஒரு அச்சத்தைக் கொண்டிருக்கின்றது.

சனத்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது பெரும்பான்மையினரின் அச்சமாகும்.

இந்த அச்சத்தை முதலில் போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 12வயது என்பதை 15 வயதாக அதிகரிப்பதால் எந்தக் குறையும் வந்துவிடப்போவதில்லை. இது ஷரீஆவுக்கு எதிரானது என தாம் எண்ணத் தேவையில்லை. இலங்கையில் நாம் ஒருபோதும் 12 வயதில் எமது பிள்ளைகளை திருமணபந்தத்தில் இணைக்கவில்லையே.

தாய், தகப்பன், பிள்ளை மூவரதும் இணக்கப்பாட்டின் பிரகாரம் தான் நாம் எமது பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்கின்றோம். இப்போது கூட 17,18 வயதைத் தாண்டிய பின்னர் தான் திருமணம் செய்து கொடுக்கின்றோம். அப்படி இருக்கும் போது இதனை ஏன் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டும் இவ்விடயம் குறித்து உரிய தரப்புக்களுடன் பேசி ஒரு சுமூகமான முடிவை எட்டிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

கேள்வி – புதிய அரசியமைப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில் – அரசியலைப்பு மாற்றம் மிக முக்கியமானது. அரசியலமைப்புக்கு கட்டுப்பட வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. அரசியலமைப்பு மாற்றத்தின் போது முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் செயற்பட்டு எமது யோசனைகளை முன்வைக்கவேண்டும். எமது சமூகத்தை பாதிக்காத வகையில் விவகாரங்களைக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்டம் அதேமுறையில் நீடிக்கப்படுவதை நாம் உறுதி செய்யவேண்டும். ஜனாதிபதியும், பிரதமரும் எமக்கு உறுதியளித்திருக்கின்றனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கப் போவதில்லை என்று அப்படி இருக்கும்போது நாம் ஏன் அவசரமும், ஆத்திரமும் அடையவேண்டும்.

நான் முஸ்லிம் அமைப்புகளிடமும் தலைவர்களிடமும் கோருவது தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள், மக்களின் உணர்வுகளைத் தூண்டி தவறாக வழிநடத்த முற்படாதீர்கள் என்பதே. புத்திஜீவிகளும், அரசியல் தலைமைகளும், உலமாக்களும், முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றுபட்டு கூடிப்பேசி ஒத்த தீர்மானத்தை எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். அதைவிடுத்து மக்களை ஆத்திரமடையும் விதத்தில் செயற்பட முனைய வேண்டாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]