மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
தமிழ்க் கூட்டமைப்பின் மாற்று வீட்டுத்திட்டம் சாத்தியமில்லாதது

தமிழ்க் கூட்டமைப்பின் மாற்று வீட்டுத்திட்டம் சாத்தியமில்லாதது

அமுல்படுத்த இரண்டு வருடங்கள் பிடிக்கும்

வடக்கு மக்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை காலத்தில் அம்மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதைத் தவிர வேறெதனைச் சாதித்திருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்புகின்றார் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டீ. எம் சுவாமிநாதன். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி...

கேள்வி: நல்லாட்சி அரசு பதவியேற்றது முதல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த நம்பிக்கை தமிழ் மக்கள் மனங்களில் இருந்தது. ஆனாலும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தங்கள் விடுதலை கோரி சிறைக் கைதிகளும் பல முறை உண்ணாவிரதப் போராட்டங்களில் குதித்திருந்தனர். அவர்களது விடுதலையானது எதிர்பார்த்தவாறு அமையாமைக்கு என்ன காரணம்?

பதில்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எல்லாமாக 96 பேர் இருக்கின்றனர். அவர்களில் 23 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மிகப் பாரிய குற்றங்கள் புரிந்த பலர் இன்று எந்தவித தண்டனைகளும் இன்றி சுதந்திரமாக நடமாடித்திரிய தாங்கள் மட்டும் ஏன் இவ்வாறு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றர். கருணா, கே.பி, தயாமாஸ்டர் என்று விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் எல்லோரும் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். அவ்வாறிருக்க தங்களது நிலை குறித்து மட்டும் ஏன் பாராமுகம் காட்டப்படுகின்றது என்று அவர்கள் கலங்குவதில் தவறேதும் இல்லை. அவர்களது கோரிக்கை நியாயமானது என்பதுதான் எனது நிலைப்பாடும். அதற்கு நான் பூரண ஆதரவினை வழங்குகின்றேன். ஆனால் சட்டரீதியாக என்னாலோ ஜனாதிபதியாலோ எதுவுமே செய்ய முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதி அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கலாம். நான் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன். அவர் சட்டமா அதிபருடன் இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமா அதிபர் அலுவலகம் பரிந்துரைக்கும் பட்சத்தில் அவர்களின் விடுதலை சாத்தியமாகும்.

கேள்வி: வடக்கில் மீள்குடியேற்றப்பணிகளில் நீங்கள் ஈடுபட்டிருக்கின்றீர்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியைத் தருவதில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதில் காட்டப்படும் அசமந்தப்போக்கு தடையாக உள்ளதா?

பதில்: படையினர் வசமிருந்த 4600 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற விதத்தில் நாங்கள் பணிகளைச் செய்கிறோம். காணிகள் விடுவிக்கப்பட்டால் உடனே அதில் மக்களைக் குடியேற்றிவிடலாமா? குடியிருப்பு வசதிகளுடனான வாழிடம், வாழ்வாதாரம் என்பனவற்றுடனான அர்த்தபூர்வமான மீள்குடியேற்றப் பணிகள் குறித்தே நாங்கள் சிந்திக்கின்றோம் அதற்கான பணிகளையே முன்னெடுக்கின்றோம். இதற்காகவே நாங்கள் வீட்டுத்திட்டங்களை முன்வைத்தோம். அவர்களுக்கான வாழ்வாதாரப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

2017 ஆம் ஆண்டில் எனது பணிகள் அனேகமாக மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதனை நோக்காகக் கொண்டதாகவே இருக்கும். குறிப்பாக வடக்கின் விவசாயிகள் நன்மையடையும் வகையில் அங்கிருக்கும் கைவிடப்பட்ட, கவனிப்பாரற்றுக் காணப்படும் குளங்களைப் புனரமைக்கத் திட்டமிட்டிருக்கின்றேன். வடமாகாணத்தின் கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்கப்படும் பட்சத்தில் மழைநீர் தேக்கிவைக்கப்பட்டு விவசாயிகளின் நீர்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். அதுமாத்திரமல்ல குளங்கள் புனரமைக்கப்பட்டால் மக்களின் வீட்டுத் தேவைக்கான தண்ணீர்ப் பற்றாக்குறையும் நிவர்த்திக்கப்படும்.

அடுத்ததாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோருக்கு புதிய வள்ளங்கள் பெற்றுக்கொடுத்து, அவற்றுகான மோட்டார்களும் வழங்கவுள்ளேன். வடக்கினைப் பொறுத்தவரை அடுத்த வருடம் நான் மேற்கொள்ளவுள்ள முக்கிய பணிகள் இவை தான்.

கேள்வி: வடக்குகென நீங்கள் கொண்ட வந்த 65000 பொருத்து வீட்டுத் திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நிராகரிக்கப்பட்டது. இப்போது அதன் நிலை என்ன? மாற்றுத் திட்டமொன்றும் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படுகின்றதே?

பதில்: வடக்கு மக்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட திட்டங்களில் எதனை கூட்டமைப்பினர் இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்? பிச்சைக்காரன் புண்ணைப்போல தங்கள் மக்களின் பிரச்சினை தீர விடாமல் தடுப்பது தானே அவர்களது அரசியல்?

வடக்கில் வீடுகளை பாரம்பரியமான முறையில் அமைப்பதென்பது சாதாரண விடயமல்ல. அங்கு ஒரு டிப்பர் மண் 40,000 ரூபாய் விலைபோகின்றது. அந்த விலைக்கும் மணல் கிடைப்பது மிகவும் கடினமானது. பனை மரங்களை தறிப்பது சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டும் கூட வீட்டு நிர்மாணப் பணிகளுக்கு பனை மரங்களை பெற முடியாதுள்ளது. கற்கள் கிடைப்பதில்லை. அதனாலேயே பொருத்து வீட்டுத் திட்டத்தினை முன்மொழிந்தேன்.

மக்களை மீளக்குடியமர்த்த வேண்டுமானால் அதற்கு அவர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் வீடுகள் பெற்றுத்தரப்பட வேண்டும். அதற்காகவே பொருத்து வீடுகளை நிர்மாணிக்க உலகளாவிய ரீதியில் புகழ் பெற்ற, நிபுணத்துவம் வாய்ந்தவர்களை எனது திட்டத்தில் முன்மொழிந்திருந்தேன்.

இப்போது கூட்டமைப்பினர் முன்வைத்திருக்கும் மாற்று வீட்டுத்திட்டமானது அதன் அறிக்கையிலேயே பல குளறுபடிகளைக் கொண்டிருக்கின்றது. வீடொன்றுக்கான விலை நிர்ணயத்திலேயே பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. வீடென்றுக்காக எதிர்வுகூறப்பட்டுள்ள விலையும் உண்மை அதற்கென ஏற்படக்கூடிய செலவும் முரண்படுகின்றன. இந்த வீட்டுத் திட்டத்துக்கு 5 வங்கிகள் உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு வங்கியினது பெயரும் குறிப்பிடப்படவில்லை. NDB யின் பெயரைத் தவிர. ஆனால் அவ்வங்கியும் தனது ஆர்வத்தினை மாத்திரமே வெளிப்படுத்தியுள்ளது. இவ்வீட்டுத் திட்டத்துக்கு எவ்வளவு நிதியுதவி கிடைக்கும் யார் அதனைத் தருவார்கள் என்ற எதுவுமே அத்திட்டத்தில் இல்லை. அவர்களது நிதியுதவிக்கான கோரலானது இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. இவ்விரண்டு பகுதிகளும் தலா 20 பில்லியன்களாக உள்ளன. இது வழக்கமான பிணை எல்லையைத் தாண்டியுள்ளது. கடன் பிணையொன்று ஆகக் கூடுதலாக 16 பில்லியன்களாகவே இருக்க முடியும் என்ற வரையறை இலங்கையில் உண்டு. எனவே, அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகின்றது. எனது வீட்டுத் திட்டத்தில் நான் நிதியுதவிக்கான முற்றுமுழுதான உத்தரவாதத்தினைத் தந்திருக்கின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த இன்னும் 2 வருடங்கள் தேவைப்படும். அவ்வாறிருக்க மீள் குடியேற்றவில்லை என்று எவ்வாறு அரசினைக் குற்றம்சாட்டுவது எவ்வகையில் நியாயமானது?

நாங்கள் கொண்டு வந்த வீட்டுத் திட்டத்தினை நிராகரித்து விட்டு, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத வீட்டுத் திட்டமொன்றினை சமர்ப்பித்திருக்கின்றார்கள் கூட்டமைப்பினர். தங்கள் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்து நிம்மதியாக வாழ்வதை விரும்பாமலேயே அவர்கள் நாங்கள் கொண்டு வந்த வீட்டுத் திட்டத்தினை நிராகரித்து விட்டு நடைமுறைக்கு சாத்தியமில்லாத வீட்டுத் திட்டமொன்றினைக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் தற்போது ஒரு இலட்சத்து முப்பத்தையாயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் உள்ள அகதிகள் நாடு திரும்பும்போது மேலும் பதினையாயிரம் வீடுகள் தேவைப்படும். தற்போது கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட குறைந்தது இரண்டு வருடங்களாவது தேவைப்படும் அப்படியானால், ஒட்டுமொத்த ஒன்றரை இலட்சம் வீட்டுத் தேவையை நிவர்த்திப்பது எப்போது?

கேள்வி: சில காலங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அரசுக்கெதிரான பேரணியொன்று 'எழுக தமிழ்' என்ற பெயரில் நடத்தப்பட்டது. உண்மையில் வடக்கின் மக்கள் அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ளனரா?

பதில்: 'எழுக தமிழ்', 'பொங்கு தமிழ்' என்று என்ன பேரணியை வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆனால் மக்களுக்கான எங்கள் பணி தொடரும். உண்மையில் மக்களுக்கான எங்களது பணிகளை எதிர்ப்பவர்கள் ஒரு சிலரே. நான் கொண்டு வந்த வீடமைப்புத் திட்டத்துக்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் அனேகர், பலரின் பெயர்களை முன்மொழிந்திருந்தனர். கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் எனது வீடமைப்புத் திட்டத்துக்கு அதிகளவில் ஆதரவிருந்தது. வீடமைப்புத் திட்டத்தினை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை மிகுந்த பகுதிகள் இவை. தேவை மிகுந்த இடங்களில் எனது வீட்டுத் திட்டத்தினை அமுல் செய்ய அனுமதிக்குமாறு தான் நான் கோருகின்றேன். யாழ்ப்பாணத்தில் வேண்டுமானால் அவர்கள் கல் வீடுகளை கட்டிக்கொள்ளட்டும். கூட்டமைப்பினர் தாங்களும் எதுவும் செய்யமாட்டார்கள் செய்பவர்களையும் அனுமதிக்கமாட்டார்கள். பிறகு அதிருப்தி கொள்வானேன்?

கேள்வி: வடக்கில் சிங்கள பௌத்த அடையாளங்கள் அதிகரித்து வருவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கில் அதிகரித்து வரும் விகாரை நிர்மாணங்களை தடுக்க முடியாமல் இருப்பதேன்?

பதில்: எங்கள் மதத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நாங்கள் செவ்வனே செய்தால் மற்றைய மத அடையாளங்கள் குறித்து அச்சம் கொள்வானேன்? அவ்வாறு வெறுமனே கூச்சல்போடுவதால் ஆகப்போவதென்ன? அவ்வாறான கூச்சல்களை பெரிது படுத்தக் கூடாதென்பதே எனது கருத்து. எனது அமைச்சின் ஊடாக வடக்கு கிழக்கில் இந்து மத வளச்சிக்கு கணிசமான பங்காற்றியிருக்கின்றேன். எனது அமைச்சின் ஊடாக வடக்கின் ஆலயங்களுக்கு 29.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியும் கிழக்கின் இந்து ஆலயங்களுக்கு 19.5 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கியிருகின்றேன். இந்து அமைப்புகள், சிறுவர், முதியோர் இல்லங்கள் என்பனவற்றுக்கு நிதியுதவி வழங்கியிருக்கின்றேன். அறநெறிப் பாடசாலைகள், அதன் ஆசிரியர்கள் , மாணாக்கர்களுக்கான உதவிகள், இந்து சமய செயலமர்வுகள், புத்தகங்கள் அச்சிடல் என்று இந்து சமயத்தின் மேம்பாட்டுக்கு எனது அமைச்சின் ஊடாக நிறையவே பணிகள் செய்திருக்கின்றேன். இவையெல்லாம் ஒருவருடத்தில் நாங்கள் ஆற்றியவை. நாம் எமது மதத்தினை மேம்படுத்தினால் நாங்கள் ஏனையவை குறித்து அஞ்சத் தேவையில்லை. புத்தர் சிலைகள் வைப்பது, விகாரைகள் அமைப்பது தவறான செயல்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பரஸ்பர புரிந்துணர்வுடன் அவற்றை வேறிடங்களுக்கு மாற்ற முடிந்தால் ஒழிய அவற்றை நாம் அப்புறப்படுத்த முயன்றால் ஏற்படப்போகும் விளைவுகளையே சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்து சமயத்துக்கு நாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளைச் செவ்வனே ஆற்றினால் ஏனைய எதனைப் பற்றியும் கவலைகொள்ளத் தேவையில்ல. அவ்வாறு குற்றம்சாட்டுவதில் நேரத்தை விரயம் செய்வதும் வீணானசெயலே.

கேள்வி: சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சராக நீங்கள் வடக்கு மக்களுக்கு நிறையவே சேவையாற்றியிருக்கின்றீர்கள். ஆனால் அவர்கள் உங்களை அரசின் பிரதிநிதியாக பார்க்கின்றார்களா? அல்லது தங்களது பிரதிநிதியாகப் பார்க்கின்றார்களா?

பதில்: நான் என்றும் அவர்களின் பிரதிநிதிதான். எனது சிந்தனை எல்லாம் முப்பதாண்டுகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எனது மக்களின் வாழ்வினை முன்னேற்ற வேண்டும் என்பது மாத்திரம் தான். என்றுமே அரசின் பிரதிநிதியாக அவர்கள் முன் நான் நின்றதில்லை. என்னை அவர்களிடம் இருந்து பிரிப்பதற்காக கூட்டமைப்பினரே அவ்வாறு என்னை முத்திரை குத்துவதில் முனைப்புக் காட்டுகின்றார்கள். கூட்டமைப்பினர் என்னை எவ்வாறு சித்தரித்தாலும் எனது மக்களுக்கான எனது பணிகளில் என்றுமே குறைவிருக்காது. மானிப்பாயில் 200 வருடங்கள் பழைமையான வீடு எனக்கிருக்கின்றது. நல்லூர் பூங்காவனத் திரு விழாவில் இன்றும் நான் உபயகாரராக இருக்கின்றேன். கொழும்பில் வாழ்ந்தாலும் நானும் தமிழன் தான். எதனைச் சொல்லியும் என்னை எனது மக்களிடமிருந்த பிரிக்க இயலாது. வடக்கில் கொண்டவரப்பட்ட நான்கு திட்டங்களையும் நிறுத்தியவர்கள் கூட்டமைப்பினரே. இரணைமடு நீர்த்திட்டத்தினை நிறுத்தினார்கள், அதன் பின்னர் ஓமந்தை பொருளாதார மையம் அதற்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. பூநகரியில் உப்பளம் அமைக்கத் திட்டமிட்டோம் அதனையும் நிறுத்தினார்கள். நான்காவது நான் கொண்டு வந்த பொருத்து வீட்டுத் திட்டம். அதனையும் தடுக்கின்றார்கள். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்து கொண்டு இவர்கள் சாதித்தது என்ன?

கேள்வி: அண்மையில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உங்களின் தலையீட்டால் தான் அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது நிலைமைகள் எவ்வாறுள்ளன?

பதில்: நான் இது பற்றி ஜனாதிபதியுடன் நேற்றுமுன் தினமும் கதைத்தேன். சட்டமா அதிபர் வந்தவுடன் இது குறித்து கதைத்து அதற்கு ஒரு முடிவு காணப்படும் என்று எனக்கு ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருக்கின்றார். நாங்கள் செய்யவேண்டிய கடமைகளை செய்துகொண்டே இருக்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்களின் இழப்புக்கான நீதி விரைவில் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

கேள்வி: பலாலியில் பிராந்திய விமான நிலையமே அமைக்கப்படும் என்று நீங்கள் அப்பகுதி மக்களுக்கு உறுதி மொழி அளித்திருக்கின்றீர்கள். சர்வதேச விமான நிலையமாக அது அமையுமானால் பல்வேறு வரப்பிரசாதங்களை வடபகுதி மக்கள் அனுபவிக்க இயலுமல்லவா?

பதில்: இப்போதைக்கு பிராந்திய விமான நிலையமே போதுமானது. அவ்வாறான விமான நிலையம் அமைப்பதற்கே போர்க்கொடி தூக்குகின்றார்கள். இதற்குள் சர்வதேச விமான நிலையம் என்றால்?

பிராந்திய விமான நிலையமாக அது அமைந்தால் இந்தியாவில் இருந்து மக்கள் இங்கு வரலாம் . யாழ்ப்பாணத்தில் இருந்தே இந்தியாவுக்குச் செல்லலாம்.

முதலில் பிராந்திய விமான நிலையத்தினை அமைப்போம். பின்னர் அதனை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியுமானால் அதுவும் மகிழ்ச்சிக்குரியதே என்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]