மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
ஐ.எஸ்.ஐ.எஸ்: இலங்கையின் முஸ்லிம் அமைப்புகளுக்கு தொடர்பில்லை

ஐ.எஸ்.ஐ.எஸ்: இலங்கையின் முஸ்லிம் அமைப்புகளுக்கு தொடர்பில்லை

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இங்கையின் முஸ்லிம் அமைப்புக்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளியாகியிருக்கும் செய்திகள் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ் அமைப்புன் தொடர்புபட்டிருப்பார்களாயின் அதனை இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி, பிரதமர் செயலகங்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளடங்கலாக 22 அரசாங்க நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த வரவு-செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாக வாழ விரும்புவார்கள். வடக்கிலிருந்து எல்.ரி.ரி.ஈயினரால் வெளியேற்றப்பட்டபோதும் ஆயுதம் ஏந்தாதவர்கள். இவர்களுக்கு ஆயுதம் மீது நம்பிக்கை இல்லை. இருப்பினும் முஸ்லிம்கள் மீது அநாவசியமாக வீண்பழி சுமத்தப்பட்டது. கடந்த அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தாததன் காரணமாகவே இந்நிலை இன்றும் தொடர்கிறது.

இலங்கையிலுள்ள ஐம்பியத்துல் உலமா சபை உள்ளிட்ட எந்தவொரு முக்கிய அமைப்புக்கும் ஐ.எஸ் அமைப்புடன் எவ்வித தொடர்பும் இல்லை. இவர்கள் அதற்கு உடந்தையாக செயற்படவில்லை. ஆதரவு வழங்கவும் இல்லை. எதிர்காலத்தில் வழங்கப்போவதுமில்லை என்பதை நான் ஆணித்தரமாக கூறுவேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பு தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறி இணையத்தளத்தில் செய்தி வெ ளியிட்டுள்ளது. இது எனது சிறப்புரிமையை மீறும் செயலாகும். எனவே சபாநாயகர் இது குறித்து விசாரணையை முன்னெடுத்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

இனவாதிகளுக்கு எதிராக அமைச்சர் விஜதாச ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை விஷமிகளுக்கு சிறந்த மருந்தாகவும், அனைத்து இன மக்களுக்கு பூரண நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]