மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
முஸ்லிம் சமூகம் தொடர்பில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயலில் ஊடகங்கள்

முஸ்லிம் சமூகம் தொடர்பில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயலில் ஊடகங்கள்

முஸ்லிம் சமூகம் தொடர்பில் தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயற்படுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி, பிரதமர் செயலகங்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளடங்கலாக 22 அரசாங்க நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த வரவு-செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய முக்கியமான உரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புத் தொடர்பில் கூறிய விடயத்தை மாத்திரம் பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிட்டிருப்பதானது ஊடகங்களின் பொறுப்பற்ற செயற்பாடு என்றும், இதனூடாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் தொடர்பில் அச்ச உணர்வை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் கூறினார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்கள், முப்படையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.இவ்வாறான பின்னணியிலேயே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் சிறந்ததொரு உரையொன்றை ஆற்றியிருந்தார். எனினும், அவருடைய உரையில் தமக்குத் தேவையான விடயத்தை மாத்திரம் ஊடகங்கள் முக்கியப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு 32 பேர் சென்றமை குறித்த கருத்து பெரும்பாலான ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெ ளியிடப்பட்டிருந்தன. இது தற்பொழுது இருக்கும் அச்ச நிலைமைய மேலும் மோசமாக்குவதுடன், குழப்பத்தை மேலும் வலுப்படுத்தும்.

32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துகொண்டமை சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம். இணையத்தளங்களுக்கு அடிமைப்பட்டவர்கள் இவ்வாறு இணைந்துகொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் தொடர்பிலும் தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயற்படுகின்றன என்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]