வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 
நல்லூர் முன்றலில் 27ல் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

நல்லூர் முன்றலில் 27ல் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது எமது உரிமை அதை யாராலும் தடுக்க முடியாது. நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பது தொடர்பில் நேற்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பின் போதே எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்கள் உட்பட உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம் எனத்தெரிவித்தார்.

போரில் உயிரிழந்த மாவீரர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் நாளை திங்கட்கிழமை முதல் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இறுதி நாளான 27 ஆம் திகதி நல்லூர் ஆலய முன்றலில் அனுஷ்டிக்கப்படும்.

மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அன்றையதினம் மாவீரர்களுக்கான வீரவணக்கத்தை செலுத்த முடியும். ஓன்று கூட முடியாதவர்கள், வடகிழக்கு தமிழ் தாயகத்தில் தாம் விரும்பும் பொது இடத்தில் மற்றும் வீடுகளில் வீரவணக்கத்தினைச் செலுத்த முடியும் என்பதுடன், வீரவணக்கத்தை செலுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகில் வாழும் ஈழத்தமிழர்கள் மாத்திரமன்றி தமிழர்களும், மாவீரர் தினத்தினை அனுஷ்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு அனுமதி கோர வேண்டுமென்று தென்னிலங்கையில் தெரிவிக்கப்படுகின்றது. அனுமதி மறுத்தால், என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கையில், இறந்த ஒருவரை நினைவுகூருவது எமது உரிமை. ஊயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை.

1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட ஜே.வி.பி கிளர்ச்சியாளர்கள் தற்போது அந்த நினைவு தினங்களை அனுஷ்டித்து வருகின்றார்கள். அதேபோன்றே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் மே 17 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுகின்றதென அறிவித்த்து. இந் நிலையில் இப்போது, ஆயுதப் போராட்டக்காரர்களை நினைவுகூருகின்றோம் என்று கூறுவது விசமத்தனமானது.

வேண்டுமென்றே எமது மக்களை பீதியில் வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள் என்றே பார்க்கத் தோன்றுகின்றது. எனவே, மாவீரர் தினம் அனுஷ்டிப்பதென்பது எமது உரிமை. இந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.