வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 
பொருத்து வீடமைப்புக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

பொருத்து வீடமைப்புக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

 கல் வீடுகளே சிறந்ததென சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமருக்கு அவசரக் கடிதம்

வடக்கில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் 65 ஆயிரம் பொருத்து வீடுகளுக்குப் பதிலாக நிரந்தர கல் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

மூன்று தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை பூர்த்தி செய்யப்படாதுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டன. இவற்றின் பணிகள் 90 வீதம் பூர்த்தியடைந்துள்ளன. இருந்தபோதும் வீட்டுத்தேவை இன்னமும் காணப்படுகிறது. இவ்வாறான நிலையிலேயே சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் வீட்டுத்திட்டமொன்று முன்மொழியப்பட்டிருந்தது. எனினும் இந்த வீடுகள் இரும்பு உருக்கினாலான பொருத்து வீடுகள் என அறிவிக்கப்பட்டது. இதற்கு 2.1 மில்லியன் ரூபாய் செலவாகும் என உத்தேசிக்கப்பட்டிருந்தது. அதிகரித்த செலவு தொடர்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தேச வீடுகள் நாட்டின் காலநிலைக்கு பெருத்தமின்மை என்பதுடன், ஆயுட்காலம் குறைந்தது. இவ்வாறான நிலையில் இதற்கு செலவிடும் தொகையில் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய நிரந்தர கல்வீடுகளை அமைக்க முடியும். அதற்கு 10 லட்சம் ரூபாய் மாத்திரமே செலவாகும். எனினும், அமைச்சர் சுவாமிநாதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து இந்த பொருத்து வீட்டுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுகின்றார்.

புனர்வாழ்வு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இம்மாதம் 10ஆம் திகதி குறித்த 65ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்தை நிராகரித்துள்ளதோடு சிவில் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட மாற்று நிரந்தர வீட்டுத்திட்டத்தை அங்கீகரித்துள்ளது. எனவே இது விடயம் தொடர்பில் பரிசீலனை செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டமைப்பின் எம்பிக்கள் இக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.