வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 
மந்தபுத்திக் குழந்தைகளா?

மந்தபுத்திக் குழந்தைகளா?

முறையான பயிற்சிகள் மூலம் ஓட்டிசத்தை குணமாக்கலாம்

தமிழ்ச் சமூகத்துக்கு அதிகம் பரிச்சயமற்ற பெயர் இது. சமீப காலமாகவே தமிழ் ஊடகங்களில் ஓட்டிசம் பற்றி பல தகவல்கள், செய்திகள் வெளிவருகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட தன் மகனை வளர்க்கும் ஒரு தந்தையைக் கருவாக்க கொண்ட தமிழ்ப் படமொன்று வெளியாகிறது. ஓட்டிசம் என்றால் என்ன என்பதை இத்திரைப்படத்தின் மூலம் பலரும் அறிந்து கொண்டனர். எனினும் ஓட்டிசம் என்றால் என்ன என்பது இலங்கையில் பலருக்கும் தெரியாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை என்ற பொதுப்பெயராலேயே நாம் இவர்களை அழைத்து வருகிறோம். இன்னும் சில பெயர்களும் உள்ளன. சவளைப் பிள்ளை, மக்குப்பிள்ளை, மந்தப் புத்திக்காரன் என்றெல்லாம் அழைத்து வந்திருக்கிறோம்.

ஆனால் ஓட்டிசம் என்ற ஒரு மனரீதியான பிரச்சினை இருப்பதை அமெரிக்க மருத்துவ நிபுணரான கேனர், 1943 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். இதன் பின்னரேயே ஓட்டிச குழந்தைகள் விசேட தேவையுடைய பிள்ளைகளின் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

இலங்கையில் ஓட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளனர். நாம் அடையாளம் காண்பதில்லை. அவ்வளவுதான். ஏனெனில் பரிசோதனைகள் செய்து இவருக்கு ஓட்டிசம் உள்ளது என்று கண்டறிய முடியாது. பார்ப்பதற்கு இவர்கள் சாதாரண பிள்ளைகள் போலவே நடந்து கொள்வார்கள். நடத்தை மற்றும் பழக்க வழக்கங்களில் காணப்படும் மாற்றங்களை வைத்தே இவர்கள் அடையாளம் காணலாம். ஒவ்வொரு 110 குழந்தைகளில் ஒருவருக்கு ஓட்டிசம் இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியரைவிட சிறுவர் மத்தியில் 3.4 மடங்கு அதிகமாக்க் காணப்படுகிறதாம்.

ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை இனி பார்ப்போம்.

கண்களால் மற்றவர்களை நேருக்குநேர் நோக்குவதைத் தவிர்ப்பார்கள். அதாவது அவர்களின் பார்வை வேறு ஏதையோ நோக்கி நிற்கும். அத்துடன், பெயர் சொல்லி அழைக்கும் போது அதை பொருட்படுத்தமாட்டார்கள்.

பேச ஆரம்பிப்பது தாமதமடையும். சாதாரண பிள்ளைகளைப் போன்று மூளை வளர்ச்சியடைந்திருந்தாலும், இவர்களின் கிராகிக்கும் தன்மை குறைவாக காணப்படும். அத்துடன் வார்த்தைகளை தாமதித்தே உச்சரிப்பார்கள்.

பேசுவது மற்றவர்களுடன் உறவுகளைப் பேணுவது ஆரம்பத்தில் சாதாரணமாகவே இருக்கும். 15 மாத வயதை அடையும் போது அல்லது அதற்குச் சற்றுப் பின் இத்திறன்களில் பின்னடைவு காணப்படும்.

ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் தன்மை குறைவாவே இருக்கும். சில வேளைகளில் பேசமாட்டார்கள். .ஆனால் இவர்கள் ஊமை அல்ல. சில வேளை காரணமின்றி அழுவார்கள், சிரிப்பார்கள் கூடுதலாக தனிமையையே விரும்புவார்கள். இவர்களுக்கு பிடித்த விளையாட்டை மட்டும் திரும்பத்திரும்ப விளையாடுவார்கள். புதிதாக சொல்லித் தந்தால் அதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

தலையை விரைவா ஆட்டுதல், கைகளை அசைத்தல், உடலை முன்னும் பின்னுமாக அசைத்தல், துள்ளுதல் போன்ற அங்க அசைவுகள் வெளிப்படும். எப்போதும் தமது உடலை அல்லது அங்கங்களைத் தேவையில்லாமல் அசைத்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆரம்பத்தில் பேசத் தொடங்கும் இவர்கள் இரண்டு வயதை அடையும் போது திடீரென பேச்சு இல்லாமல் போய்விடும். முக்கியமாக இப்பிள்ளைகள் நேரம், இடம், யார் எவர் என்ற வித்தியாசம் உணரமாட்டார்கள். இங்கு நாம் குறிப்பிடும் விடையங்கள் மட்டுமன்றி இன்னும் பல வித்தியாசங்கள் இப்பிள்ளைகளில் காணப்படும்.

ஓட்டிசம் என்பது நரம்பு தொகுதியின் விருத்தியில் ஏற்படும் தாக்கத்தினால் ஏற்படும் ஒரு நிலையாகும். இதனை நரம்பு மண்டலத்தின் சிறு குறைப்பாடு என்று கூறலாம்.

கர்ப்பக்கால ஆரம்பத்தில் 25 சதவீதமான மூளை வளர்ச்சியும், பிறந்தவுடன் முழு வளர்ச்சியும் காணப்படும். ஓட்டிசம் ஆரம்பக் கட்டத்திலிருந்தே மூளை விருத்தியில் சிறுபாதிப்பு ஏற்படுத்தும். இக்குறைபாடு சிறு வயது முதல் பிள்ளைகளில் காணப்படுகின்றனது. இக்குறைபாடு உள்ளவர்களை விசேட தேவையுள்ளவர்கள் பட்டியலில் இடப்படுகிறது. அத்துடன் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஒட்சிசன் குறைபாடு உருவானாலும் ஓட்டிசம் வருவதற்கு வாய்ப்பிருக்கும் என்கிறார் வைத்தியர்.

மேலும் பார்ப்போமானால் ஓட்டிசம் உடைய பிள்ளைகளில் நாற்பது வீதமானோருக்கு வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மனநலக் குறைப்பாடு கொண்ட பிள்ளைகளுக்கு வலிப்பு ஏற்படுவது ​பொதுவானது. பத்து முதல் பதினைந்து வீதமான பிள்ளைகளுக்கு பெற்றோரிலிருந்து பரம்பரை அலகுகள் மூலம் கடத்தப்படும் ஏனைய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படும். அத்துடன் நித்திரை சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

ஓட்டிசம் ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. இது பரம்பரை அலகுகள் மூலமாக்க கடத்தப்படுகின்ற போதிலும், ஏனையசுற்றுச் சூழல் காரணிகளும் உள்ளன. நோய்களை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில கிருமிகள், இரசாயனப் பொருட்கள், நச்சுப்பொருட்கள் போன்றவையும் ஓட்டிசம் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். அத்துடன், தாயாரின் கர்ப்பக் காலத்தின்போது இக்காரணிகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டால் அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கு ஓட்டிசம் ஏற்படலாம். எனினும் குழந்தைப் பிறந்தவுடன் பெற்றோர் பிள்ளைகளுக்கு சிறப்பான வழங்கும் பராமரிப்பு காரணமாக இது ஏற்படுவதில்லை.

மேலும் அடுத்தடுத்தாக குழந்தைகள் பிறக்கும் போது ஓட்டிசத்தைக் கொண்டிருப்பதற்கான அபாயம் அதிகமாகக் காணப்படலாம். அதிலும் குறிப்பாக இது ஆண் பிள்ளையாயின் ஓட்டிசம் ஏற்படுவதற்கான அபாயம் ஐம்பது வீதமாகக் காணப்படுமாம். எனவே, அடுத்த கர்ப்பந்தரிதலைத் திட்டமிடுவதற்கு முன் வைத்திய ஆலோசனையை நாடுதல் அவசியமாகும்.

நோய் நிர்ணயம்:

ஓட்டிசத்தைக் குணமாக்கக் கூடிய மருந்துவ வகைகள் எதுவம் இல்லை. நடத்தைகளை அவதானித்து நோயைக் குறைக்கும் வகையில் முயற்சிகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இது பிள்ளைகளுக்கு பேசுவதற்கும், நடப்பதற்கும் ஏனையோருடன் கலந்து பழகுவதற்கு உதவும். அத்துடன் பயிற்சிகள் மூலமாக இவர்களின் இடர்களை படிப்படியாக நீக்கலாம்.

நீண்ட காலப் பிரச்சினைகள்:

ஓட்டிசம் வாழ்நாள் காலம் முழுவதும் நீடித்திருக்கக் கூடிய குறைபாடாக இருந்த போதிலும், அதன் தீவிரத்தன்மையும் அறிகுறிகளும் காலப்போக்கில் மாற்றமடையக்கூடும். ஓட்டிசம் உடைய சில பிள்ளைகளில் காலப்போக்கில் இந்த அறிகுறிகள் குறைவடையலாம். எனினும், வேறு சிலரின் எவ்வித முன்னேற்றமும் காணப்படாமலும் போகலாம். சில பிள்ளைகளில் காலப்போக்கில் நுண்ணறிவு மட்டம் (IQ Level) சாதாரண நிலையை அடையலாம். எனினும் சமூக இடைச்செயற்பாடுகளிலும் தொடர்பாடல் திறமைகளிலும் உள்ள குறைபாடு வளரிளம் பருவத்தினையும், அதனைக் கடந்த பின்பும் கூட தொடர்ந்தும் காணப்படலாம். ஆறு வயதிற்கு முன்பதாகப் பேசுவதற்கும் தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் மற்றும் கற்றுக்கொள்ளும் அறிவாற்றலைக் கொண்ட ஓட்டிச பிள்ளைகளில் அதிகமானோரின் முன்னேற்றம் சிறப்பானதாக அமையலாம்.

ஓட்டிசம் பாதிப்புக்குள்ளான பிள்ளைகள் எழுத்துப் பரீட்சையைவிட வாய்மொழியூடான பரீட்சை நடத்துவது மேலானது என்பது கல்வியமைச்சின் கருத்தாகும். இப்படியான பிள்ளைகள் பரீட்சையில் வாய்மொழி பரீட்சையில் பங்குபற்ற சுமார் ஆறு மாதங்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னர் பார்த்தைப் போல் இலங்கையில் ஓட்டிசம் காணப்பட்டாலும் அதுதொடர்பாக புரிதல் மேல் மட்டத்திலும் கீழ்மட்டத்திலும் போதுமானதாக இல்லை. இப்போதுதான் ஓட்டிசம் நிலையம் ஒன்றை அமைப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. வெளிநாடுகளைப்போல் பயிற்றப்பட்டவர்கள் மூலம் ஓட்டிசக் குழந்தைகள் பராமரிக்கப்படவுள்ளனர். இங்கு திட்டமிட்ட ரீதியாக அளிக்கப்படும் பயிற்சிகள் ஊடாக அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சரியான பயிற்சி மற்றும் பராமரிப்பு மூலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கல்வியாளர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் திகழச் செய்யலாம் என்பதை வெளிநாடுகளில் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

கடந்த 2 ஆம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சுகாதார கல்விப் பணியகத்தால் நடைபெற்ற கருத்தரங்கில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்களான சுவர்ணா விஜேதுங்க, சுதர்ஷினி செனவிரத்ன, பியாரா இரட்நாயக்க, தீபிகா ஆட்டிகல, நையில் தலகல, ஆர். டீ. எப். சி. காந்தி, ஆர். ஆர். எம். எல். ஆர். சியம்பலாகொட ஆகியோர் ஓட்டிசம் குறித்து ஆற்றிய உரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.