மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
மதத்தின் பேரில் தொடரும் சேஷ்டைகள்

மதத்தின் பேரில் தொடரும் சேஷ்டைகள்

லங்கையின் அரசியல் பரப்பிலும், சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் இவ்வாரம் முழுவதும் மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சம்பந்தமாகவே அதிகம் பேசப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசத்தில் உள்ள மாணிக்கமடு தமிழ்க் கிராமத்தில் புத்தர் பெருமானின் உருவச்சிலையை வைத்ததால் உருவான பரபரப்பு ஓய்வதற்கிடையில், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அடுத்தடுத்து பெரும் புயல்களையே ஏற்படுத்தியிருக்கிறார்.

பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள கிராம சேவகர் ஒருவரை தகாத வார்த்தைகளால் தூஷித்து அவமானப்படுத்தினார் சுமணரத்ன தேரர். அதேசமயம் அவ்விடத்தில் நின்றிருந்த தமிழ்ப் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விரட்டியடித்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளன. அவ்விடத்தில் நின்றிருந்த தமிழ் மக்களை நோக்கி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவர் நீண்ட நேரம் தூஷித்ததை உலகெங்கும் உள்ள மக்கள் தெளிவாகவே கண்ணுற்றனர்.

மட்டக்களப்பு விகாராதிபதி தமிழ் மக்களைக் கேவலப்படுத்திய சம்பவத்தையடுத்து ஒட்டுமொத்த தமிழினமே வெகுண்டெழுந்தது. பௌத்த பெரினவாதிகளுக்கு எதிராக மாத்திரமன்றி அரசாங்கத்தை நோக்கியும் கண்டனக் கணைகள் பாய்ந்தன. அரசாங்க தரப்பிலிருந்தோ அல்லது பெரும்பான்மையின மக்கள் மத்தியிலிருந்தோ குறிப்பிடும்படியான கண்டனங்கள் தோன்றவில்லையென்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம். இதனால்தானோ என்னவோ சுமணரத்ன தேரர் அடுத்த கட்டத்துக்கும் தாண்டி தனது தீவிரத்தை வெளிக்காட்டினார்.

செங்கலடி – பதுளை வீதியிலுள்ள தனியார் காணியொன்றுக்குள் தனது சகாக்களுடன் அத்துமீறிப் பிரவேசித்த சுமணரத்ன தேரர், அப்பிரதேசம் புராதன தொல்பொருள் சின்னங்கள் கொண்ட புனித பிரதேசமெனக் கூறினார். அரசாங்க அதிகாரிகளையோ, பாராளுமன்ற உறுப்பினரையோ அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களையோ அவர் கொஞ்சமேனும் பொருட்படுத்துவதாக இல்லை. அரசின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டுமென்றோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது தவறென்றோ அவர் சற்றேனும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

அதேசமயம் வணக்கத்துக்குரிய பௌத்த மதகுரு ஒருவர் இவ்விதமான சேஷ்டைகளில் தொடர்ந்து ஈடுபடுவதானது பௌத்த மதத்தின் கீர்த்திக்குப் பங்கம் ஏற்படுத்துமென்பதையும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவர் தன்னை பௌத்த மதத்தினதும், சிங்கள மக்களினதும் தனிப்பெரும் காவலனாக உருவாக்கிக் கொண்டபடி ஒரு போராளியைப் போலவே சென்று கொண்டிருக்கிறார்.

சுமணரத்ன தேரரின் இன்றைய திடீர் எழுச்சிக்கான காரணம் என்ன? தேரரின் செயல்களுக்குப் பின்னால் அரசியல் சக்தியொன்று உள்ளதா? இச்செய்கைகளுக்கு மறைமுகமாக நோக்கங்கள் உள்ளனவா?

இவ்விளாக்களுக்கான பதில்களையே முதலில் தேட வேண்டியது அவசியம். இவை பற்றிச் சிந்திக்காமல் தேரரைப் போன்றே சிறுபான்மை மக்களும் எழுச்சி கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதனால் கிடைக்கப் போகும் பயன் எதுவுமே இல்லை. சிலவேளை, சிறுபான்மையினரின் எதிர்ப்புச் செயற்பாடுகள் தேரரினதோ அல்லது அவரின் பின்புலத்தில் உள்ள சக்திகளினதோ நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இடமளிப்பதாகவும் அமைந்துவிடக்கூடும்.

சுமணரத்ன தேரரைப் போன்று சமீப தினங்களாக பௌத்த மதவாத சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்திருப்பதை அவதானிக்கின்ற போது, சந்தேகங்கள் எழவே செய்கின்றன. பௌத்த மதவாத அமைப்புகளெல்லாம் அரசுக்கு எதிரான சக்திகளின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு இசைவாகவே செயற்படுவதாக சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

சிங்கள மக்கள் மத்தி்யில் பௌத்தவாதத்தை தீவிரமடையச் செய்வதோ அல்லது இனங்களுக்கிடையே மோதல்களை உருவாக்குவதோ இச்சக்திகளின் மறைமுக நோக்கமாக இருக்கக் கூடுமென்ற சந்தேகம் இப்போது வலுவடைந்து வருகிறது. சிறுபான்மையின மக்களின் எதிர்ப்புகளைப் பயன்படுத்தி சிங்கள மக்களை உருவேற்றுவதற்குக் கூட இச்சக்திகள் முற்படக் கூடும்.

தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம்களோ நிதானத்தைக் கடைப்பிடிப்பதே இப்போதைக்கு புத்திசாலித்தனம் போலத் தோன்றுகிறது. மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியாகட்டும், இல்லையேல் தென்னிலங்கையிலுள்ள ஏனைய பௌத்த மதவாத சக்திகளாகட்டும்... இவ்வாறான சொற்பமான தனிநபர்களின் எழுச்சியை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பௌத்த தேரர்களையோ அல்லது சாதாரண சிங்கள மக்களையோ விரோதமுடன் நோக்கத் தலைப்படுவது உண்மையிலேயே முட்டாள்தனம்.

சிங்கள மக்கள் இவ்வாறான பௌத்த மேலாதிக்க சிந்தனையைக் கொண்டிருப்பார்களானால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பௌத்தவாதக் கட்சிகள் ஓர் ஆசனத்தையாவது வென்றிருக்கக் கூடும். பௌத்தவாத சக்திகளை சிங்கள மக்கள் முற்றாக நிராகரித்ததை கடந்த தேர்தலில் தெளிவாகவே அறிந்து கொள்ள முடிந்தது. எனவே, தமிழ், முஸ்லிம் மக்கள் நிதானத்துடனும் விவேகத்துடனும் நடந்து கொள்வது இங்கு அவசியமாகின்றது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மட்டக்களப்பு விகாராதிபதி இத்தனை ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ள போதிலும், அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான தயக்கம் சிறுபான்மை மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது. இவ்வெறுப்பு நியாயமானதாக இருக்கலாம்.

எனினும், அரசின் தயக்கத்தின் பின்னால் சில காரணங்கள் உள்ளன. சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற பௌத்த தேரர் ஒருவர் மீது சட்டத்தை உரியபடி பிரயோகிக்க முற்படுகின்ற போது அதன் எதிர்த்தாக்கங்கள் தென்னிலங்கையில் சாதாரணமானதாக இருந்துவிடப் போவதில்லை. பௌத்த மதவாத சக்திகள் வெகுண்டெழுவது ஒருபுறமிருக்க, அரசுக்கு எதிரான பிரதான அரசியல் சக்தியும் இச்சந்தர்ப்பத்தை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுமென்பதில் சந்தேகமில்லை. தென்னிலங்கையின் சலசலப்புகள் குறித்தும் அரசாங்கம் அவதானமாகவே இருக்க வேண்டியுள்ளது.

பௌத்தவாத மதப்பிரமுகர்களின் இது போன்ற சேஷ்டைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு எமது நாட்டிலுள்ள பௌத்த பீடங்களுக்கே முதலில் உண்டு. அன்பு, ஜீவகாருண்யம், ஐக்கியம், சகிப்புத்தன்மை போன்ற உயர்விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட உன்னதம் நிறைந்த பௌத்த தர்மத்துக்கு ஊறு விளைவிக்கின்ற செயற்பாடுகளுக்கு முடிவு காண்பதில் எமது பௌத்த பீடங்கள் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இதுவாகும்.

[email protected]


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]