மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
அலட்சியம் இன்னமும் தொடரலாகாது!

அலட்சியம் இன்னமும் தொடரலாகாது!

ஊழல் மோசடிக் குற்றங்களை விசாரணை செய்யும் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக வெளியிட்டிருந்த கருத்துகள் தான் அரசியலில் தற்போது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகும்.

முன்னைய ஆட்சிக் காலத்தின் போது பாரியளவிலான ஊழல் மோசடிக் குற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், சிறியளவிலான மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளிலேயே இப்போதைய சுயாதீன விசாரணைக்குழுக்கள் கரிசனை காட்டுவதாக பொதுவான ஒரு அபிப்பிராயம் நிலவி வருகின்றது. பாரிய மோசடிகளில் ஈடுபட்டோர் விசாரணையிலிருந்து தப்பிக் கொள்வதற்கும், சிறுகுற்றவாளிகள் அகப்பட்டுக் கொள்வதற்கும் இடமளிக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஆதரவளித்த சிவில் சமூக அமைப்புகளின் ஆதங்கமும் இதுதான். முன்னைய ஆட்சிக் காலத்தின் போது இடம்பெற்ற பாரியளவிலான நிதி மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகள் விசாரணை செய்யப்பட்டு உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டுமென்பது சிவில் சமூக அமைப்புகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளித்த தரப்பினரே நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தற்போது இடம்பெறுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக ஏமாற்றமும் அதிருப்தியும் கொண்டுள்ளனர். எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தந்து விட்டன என்பதே இம்மக்களின் பெரும் ஆதங்கம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்த கருத்தும் ஏறக்குறைய இதேவிதமானதுதான். விசாரணைக் குழுக்களின் செயற்பாடுகளில் அரசியல் ரீதியான அழுத்தங்கள் இருக்கலாமென்று பொதுமக்கள் மத்தியில் வீணான சந்தேகங்கள் நிலவுவதையே ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார். ஜனாதிபதி மிகவும் கடினமான தொனியில் இவ்விடயத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதனால் இவ்விவகாரம் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

ஊழல் முறைகேடு விசாரணைகளில் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் உள்ளதென நாம் எடுத்துக் கொண்டாலும் கூட பொதுமக்கள் மத்தியில் இவ்விடயம் தொடர்பாக நிலவுகின்ற ஐயப்பாடுகளை உதாசீனப்படுத்தி ஒதுக்கி விட முடியாதிருக்கிறது.

நிதிமோசடி மற்றும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளில் இழுபறியும் தாமதமும் நிலவுவதாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் மட்டுமன்றி சிறுபான்மையினர் மத்தியிலும் சலிப்பு ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

முன்னைய ஆட்சிக் காலத்தின் பிரபலங்கள் ஊடகங்களுக்கு சிரித்த முகத்தைக் காண்பித்தபடி விசாரணை அலுவலகங்களுக்குச் செல்கின்றனர். வெளியே வரும் போது மீண்டும் சிரித்த முகத்துடன் ஊடகங்களுக்குக் கையசைக்கின்றார்கள். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும் விளக்கமறியலுக்குச் செல்லும் போதும் கையில் விலங்குடன் எதுவித சலனமுமின்றி புன்னகைத்தபடி சிறைச்சாலை வாகனத்தில் ஏறுகின்றனர். கையில் விலங்கிட்ட நிலையில் இரு கைகளையும் மேலே உயர்த்தி, மக்களை நோக்கி வெற்றிப் புன்னகையை உதிர்க்கின்றார்கள். நாட்டின் மீட்சிக்காகப் போராடி சிறைக்குச் செல்கின்ற தியாகியைப் போன்று அவர்கள் பாவனை செய்கிறார்கள்.

எல்லாக் காட்சிகளும் இரு வாரங்களில் தலைகீழாகி விடுகின்றன. இருவார கால விளக்கமறியல் முடிவுற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும் வெற்றி வீரர்களாக வெளியே வருகின்றனர். தேசிய வீரன் ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையாகி வருவதைப் போன்ற காட்சி அங்கே தெரிகின்றது.

கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஊழல் மோசடி தொடர்பான நீதிவிசாரணைகளும் நடவடிக்கைகளும் இவ்வாறுதான் அமைந்திருக்கின்றன. விசாரணை அலுவலகத்துக்குச் செல்கின்ற போது சந்தேக நபர்களின் முகத்தில் தென்படுகின்ற மகிழ்ச்சி புலப்படுத்துவது என்ன? விசாரணை அலுவலகத்துக்குப் படியேறுவது வெறும் சம்பிரதாயத்துக்கானது என்றும், விரைவில் திரும்பி வந்து விடுவோமென்றும் அவர்கள் முன்கூட்டியே நம்பிக்கை கொள்கின்றனரா? தாங்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட முடியாதவர்களென்று அவர்கள் நம்புகின்றனரா?

பொதுமக்கள் மத்தியில் இப்போதெல்லாம் இவ்வாறான வினாக்களும் சந்தேகங்களும் எழுகின்றன. இவ்வினாக்களுக்கு விடை தெரியாததால் மக்கள் ஏமாற்றமும் அதிருப்தியும் கொள்கின்றனர். இலங்கைத் தேசத்திலிருந்து ஊழலும் முறைகேடுகளும் எக்காலத்திலே அகற்றப்பட முடியாதவையென்ற ஏக்கம் மக்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரியின் ஆதங்கமும் இதுதான். நீதி விசாரணைகள் முறையாக இடம்பெற வேண்டும்; தாமதங்களோ இழுபறியோ நிலவக் கூடாது; அரசியல் ரீதியில் எதுவிதமான அழுத்தங்களுமே இருக்கக்கூடாது. அரசாங்கம் மீது பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படும்படியாக நடவடிக்கைகள் அமைந்து விடக்கூடாது. இவையெல்லாம் ஜனாதிபதியின் உரையில் பொதிந்திருக்கும் ஆதங்கங்கள் ஆகும்.

ஊழல் முறைகேடு விசாரணைகள் விடயத்தில் நிலவுகின்ற அசமந்தம் குறித்து பொதுமக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை ஒருபுறமிருக்க, அரசுக்கு எதிரான அரசியல் சக்திகள் இவ்விவகாரத்தை எவ்வாறு கையாளுகின்றன என்பதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது.

இப்போது இடம்பெறுகின்ற ஊழல் முறைகேடு விசாரணைகளை வெறும் அரசியல் பழிவாங்கலென்று மக்கள் மத்தியில் காண்பிப்பதில் எதிரணி கடுமையாக முயற்சிப்பதை நாம் காண்கின்றோம். சுயாதீன விசாரணைக்குழுக்களின் செயற்பாடுகளை கேலிக்குரியதாக்கும் விதத்தில் அவர்கள் நடத்துகின்ற பிரசாரங்களுக்கு சில ஊடகங்கள் அளவுக்கதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

மூன்று விதங்களில் செயற்படும் ஊடகங்கள் உள்ளன. ஒன்று நடுநிலைமைப் போக்குடையது. மற்றையது கட்சிசார் போக்குக் கொண்டது. மூன்றாவது வகை ஊடகமானது சர்ச்சைகளைக் கிளப்புவதிலேயே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

நடுநிலைமையில் செயற்படுகின்ற ஊடகங்கள் மிகவும் அரிதானவை. ஏனைய இருவகை ஊடகங்களுக்கும் இன்றைய ஊழல் விசாரணைப் போக்குகள் சிறந்த தீனியாகிப் போயுள்ளன. மக்களும் பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்குமே ஈர்க்கப்படுகின்றனர். இது மனித சுபாவம்.

இவ்வாறானதொரு நிலைமையை இனிமேலும் தொடர விடுவதென்பது இன்றைய ஆட்சிக்கு உகந்ததல்ல. எத்தகைய இலட்சியத்துக்காக இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு மக்கள் ஆதரவளித்தனரோ, அந்த இலட்சியத்திலிருந்து அரசாங்கம் விலகிச் செல்வது போன்ற தோற்றப்பாடு தென்படுவது ஆரோக்கியமானதல்ல. அவ்வாறான அலட்சியம் சரிசெய்யப்பட வேண்டுமென்பதே நல்லாட்சியை விரும்புவோரின் எதிர்பார்ப்பு ஆகும்.

[email protected] 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]