மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
முதலிடம் பெறுமா இந்திய அணி?

டெஸ்ட் தர வரிசை;

முதலிடம் பெறுமா இந்திய அணி?

உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் முறையே பாகிஸ்தான், இந்தியா. அவுஸ்திரேலியா அணிகள் உள்ளன.

கடந்த மாதம் வரை முதலிடத்திலிருந்த அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியுடன் படுதோல்வியடைந்ததால் 108 புள்ளிகளுடன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்திய- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்டையில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசிப் போட்டி மழை குறுக்கிட்டதால் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

என்றாலும் மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரை இந்திய அணி 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியதால் 110 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

அதே காலப் பகுதியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற ரீதியில் சம நிலையில் முடிவடைந்ததால் அவ்வணி 111 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்துக்கு முன்னேறியது.

ஆனால் இம்மூன்று அணிகளும் மீண்டும் முதலிடத்தைப் பெறுவதற்கான கோதாவில் குதித்துள்ளன.

கடந்த வாரம் இந்திய -நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கான்பூரில் ஆரம்பமானது. மேலும் பாகிஸ்தான்- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரும், அவுஸ்திரேலிய- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரும் அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ளன.

அவுஸ்திரேலிய- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம். அவுஸ்திரேலிய அணியின் அண்மைய இலங்கையணியுடனான தோல்வியால் சற்றுப் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் அவ்வணி துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் பலமான அணியாகவே உள்ளது.

காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய மிச்சல் ஸ்டார்க் இலங்கைத் தொடரில் சிறப்பாச் செயற்பட்டிருந்தார் ஆனால் அவர் மீண்டும் காயமடைந்துள்ளது அவ்வணிக்கு சற்றுப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்க அணியைப் பொறுத்தவரையில் அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துடனான போட்டித் தொடரில் வெற்றிபெற்று தெம்புடனுள்ளது. மேலும் ஒரு வருடகாலமாக காயத்தினால் அவதியுற்றிருந்த அவ்வணியின் முதல்தர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்ரேய்ன் மீண்டும் வழமையான உத்வேகத்துடன் திறமையாகப் பந்து வீசி வருகிறார். எனவே, அவுஸ்திரேலிய அணி இவரின் பந்து வீச்சுக்கு முகம் கொடுப்பதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பாகிஸ்தான்- மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கிறது. தரவரிசையில் முதலிடத்திலுள்ள பாகிஸ்தான் அணி அண்மையில் அதற்காக சர்வதேச கிரிக்கட் கவுன்ஸிலால் வழங்கப்படும் மகுடத்தையும் பெற்றுகொண்டது.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் மேற்கிந்தியத் தீவுகளை விட பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் பாகிஸ்தான் அணியின் கையே ஓங்கியிருந்தாலும் ஆட்டம் முடிவுறும் வரை பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் எதிர்வு கூற முடியாத அணியாகும். என்றாலும் பழக்கப்பட்ட மைதானத்தில் தொடர் நடைபெறுவது அவ்வணிக்கு சற்று அனுகூலமாக அமையலாம்.

அண்மைக்காலமாக கோஹ்லியின் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வருகின்றது. கடந்த வருடம் பலம்வாய்ந்த தென்னாபிரிக்க அணியை 3-0 என்ற ரீதியில் தோல்வியுறச் செய்து அதுவரை தரவரிசையில் முதலிடத்திலிருந்த அவ்வணியை பின்தள்ளியதிலிருந்து இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றது.

அவ்வணியில் திறமையான சுழற்பந்து விச்சாளர்களான அஸ்வின் ஜடேஜா. மிர்ஷா எதிரணிகளுக்கு அதுவும் மேலைத்தேய கிரிக்கெட் அணிகளுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மைக்காலமாக துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து வருவது இந்திய அணிக்கு மேலதிக பலமே.

மேலும் நியூசிலாந்து அணியுடன் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு 500வது போட்டியாகும். இம்மைல்கல்லை எட்டும் 4வது நாடு என்ற பெருமையை இந்திய அணி பெறுகிறது.

இதுவரை இந்திய அணி 499 போட்டிகளில் விளைடியுள்ளன. அதில் 129 வெற்றிகளையும் 157 தோல்விகளையும் பெற்றுள்ளன.

இதற்கு முன் இங்கிலாந்து (976), அவுஸ்திரேலியா (791), மேற்கிந்தியத் தீவுகள் அணி (517) ஆகிய அணிகளே 500 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் டெஸ்ட் வரலாறு 1932 இல் ஆரம்பமாகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு சி. வி. நாயுடு தலைமை தாங்கினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் டெஸ்ட் வெற்றி பெறுவதற்கு அவ்வணி 20 வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அவர்கள் 1952ம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி விஜய் ஹஸாரே தலைமையில் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றதே அவர்களின் முதல் டெஸ்ட் வெற்றியாகும்.

1952ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் லாலா அமர்நாத் தலைமையில் அவ்வணியை 2-1 ரீதியில் தோற்கடித்து முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய அணி பெற்றது.

டெஸட் வரலாற்றில் கூடிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையும் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கரையே சாரும்.

இவர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அதிகூடிய சதத்தையும் (51) இவரே பெற்றுள்ளார். மேலும் கூடிய டெஸ்ட் ஓட்டங்கள் (15921) பெற்ற வீரரும் இவரே. டெஸ்ட் வரலாற்றில் களத்தடுப்பிலும் இந்திய வீரர் ராகுல் ட்ராவிட் 210 பிடிகளை எடுத்து முன்னணியில் உள்ளார். .

மேலும் டெஸ்ட் பந்து வீச்சு வரலாற்றில் ஒரு இனிங்ஸில் பத்து விக்கெட் வீழ்த்திய சாதனை இரு சந்தர்ப்பங்களே பதிவாகியுள்ளன. அதில் இந்திய சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் அரங்கில் முதன் முதலில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவஸ்காரே கடந்துள்ளார். இப்படியாக இந்திய அணி பங்குபற்றிய 500 டெஸ்ட் போட்டி வரலாற்றில் அவ்வணியினரால் நிறைய உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கதாகும்.

அண்மைக்காலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் திறமைகாட்டி வருவதால் மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற நியூசிலாந்துடனான தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது.

எனவே தற்போது டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பெறுவதற்காக இந்திய, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகள் நேரடியாக மோதாவிட்டாலும் அவ்வணிகள் பங்குபற்றும் தொடர்களின் பெறுபேற்றுகளுக்கு அமைய தரவரிசைகளில் மாற்றம் ஏற்படும். எனவே இத் டெஸ்ட் தொடர்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்பது நிச்சயம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]