மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
விரக்தியின் விளைவே ‘எழுக தமிழ்’

விரக்தியின் விளைவே ‘எழுக தமிழ்

கே: ஐநாவில் தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமைக் கூட்டத்தொடரை இலக்குவைத்தே நேற்றைய ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டதா?

ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரை இலக்கு வைத்து ஒழுங்கு செய்யப்பட்டதல்ல இப்பேரணி. நல்லிணக்கம் பேசக்கூடிய இந்த அரசானது, அதற்கு ஏதுவான எந்தவகையான நடவடிக்கைகளையும் எடுக்காததால், ஏற்பட்ட விரக்தியின் விளைவே இது. வடக்கு கிழக்கில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சிங்கள பௌத்த மேலாதிக்கம், தமிழர் நிலங்களில் தொடரும் இராணுவத்தின் பிரசன்னம், இராணுவம் வசமுள்ள பல்லாயிரக் கணக்கான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமையால் தொடரும் மீள் குடியேற்றத் தாமதங்கள், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை என்று மக்களது அவலங்கள் முடிவின்றித் தொடர்கின்றன. ஐ.நா மனித உரிமை ஆணையக தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சர்வதேச நீதிபதிகள் அடங்கிய பொறிமுறையொன்றை உருவாக்க இலங்கை இணங்கியே இருந்தது. ஆனால் அவ்வாறான பொறிமுறையொன்றினை ஏற்படுத்தி தமிழர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர அது தற்போது தயாராக இல்லை. இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக அல்லாமல், சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சிக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை. மக்களின் இழப்புகளுக்கான, அவலங்களுக்கான நீதி கிட்டாதபோது நல்லெண்ண முயற்சிகளுக்கான அடிப்படையே தகர்ந்து விடுகின்றது. தற்போது ஐ.நாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைக் கூட்டத்தொடரில் ‘எழுக தமிழ்’ தாக்கத்தினை ஏற்படுத்தும்.

கே: நல்லாட்சி அரசாங்கம் மலர்ந்து ஒரு வருடமும் சில மாதங்களும் மட்டுமே கடந்து விட்ட நிலையில், எமது கோரிக்கைகள் அனைத்தையுமே அது நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எதிர்ப்பரசியலைக் கையில் எடுப்பதும் உசிதமானதா? இராணுவம் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் ஓரளவுக்கேனும் மீளக் குடியேற்றபட்டுள்ளார்கள் அல்லவா?

காணிகள் எங்கே விடுவிக்கப்பட்டன? இராணுவம் வசமுள்ள முன்னைய அரசு விடுவிப்பதாக ஏற்கனவே உறுதி வழங்கிய 25,000 ஏக்கர் காணியில் 1800 ஏக்கர்கள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதில் எதற்கு தாமதம் காட்ட வேண்டும்? காணி விடுவிப்புப் பணிகள் மிக மெத்தனமாகவே இடம்பெற்று வருகின்றன. அரசியல் கைதிகளின் விடுவிப்பு, படையினர் வசமுள்ள காணிகளை மீள மக்களிடம் கையளித்தல் போன்ற விடயங்களில் எல்லாம் ஐநாவின் தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால் எதற்கும் அது செயல்வடிவம் கொடுக்கவில்லை. அரசின் இரட்டை நிலைப்பாட்டையே இது காட்டுகின்றது.

கே: தமிழ் சிறுபான்மையினரின் வாக்குப்பலத்தால் வெற்றிபெற்ற நல்லாட்சி அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்களா? இத்தனை கால அவலங்களுக்கு விடிவு கிட்டாதென அவர்கள் எண்ணுகின்றார்களா?

இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டுமென்றே தமிழர்கள் வாக்களித்தனர். புதிய அரசில் தங்களது அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பினார்கள். படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களது நிலங்கள் விடுவிக்கப்படும், அரசியல் கைதிகளாகவுள்ள தங்களது உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடுவோம் என்றெல்லாம் அவர்கள் நம்பினார்கள். ஆனால் பெரும்பான்மையான தமிழர்கள் இன்று நம்பிக்கையிழந்தே இருக்கின்றார்கள்.

கே: பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளவரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டாலும், சந்தேகத்தின் பேரில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதனால். கைதிகளின் விடுதலைக்கு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்துவதிலும் பார்க்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினை நீக்குவதற்கு கொடுக்கப்படும் அழுத்தங்களே முக்கியமானவை என்று சொல்லப்படுகின்றதே?

எங்கள் எழுச்சிப் பேரணியானது பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவதற்கான கோரிக்கையினையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கும் வரை தற்போதுள்ள அனைத்து கைதிகளையும் விடுதலை செய்தாலும் மீண்டும் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முடியும். புதியவர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்க முடியும். எனவேதான் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரிக்கையோடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்கவும் சமாந்தரமாகவே கோருகின்றோம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்கின்ற அழுத்தம் கொடுக்கப்பட்டே வந்திருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதென்பது அரசு நினைத்தால் செய்யமுடியததல்லவே?

கே: சர்வதேச விசாரணைணை வலியுறத்தியும் அவ் விசாரணையை வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப்போராட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நீங்களும் ஜெனீவா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தனவே?

அவை தவறான செய்திகள் வெறும் ஊகங்களின் அடிப்படையில் எழுத்தப்பட்ட செய்திகளாய் இருக்க வேண்டும். அவ்வாறான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை.

கே: மக்களின் பங்களிப்புடன் உருவாகவுள்ள புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று சம்பந்தன் ஐயா நம்பிக்கை தெரிவித்திருக்கின்றாரே உண்மையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மக்களின் பங்களிப்பு எந்தளவில் உள்ளது?

இணைந்த வடக்கு கிழக்கு பற்றி சம்பந்தன் பேசி வருகின்றார். வடக்கு கிழக்கு இணைக்கப்படாதென்கிறார் ஜனாதிபதி. சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சியை நாம் கோருகின்றோம். ஒற்றையாட்சி முறைமைக்குள் தான் தீர்வு என்கின்றார்கள். இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளுமே இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள். இந்நிலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மக்களின் அபிலாஷைகளை எந்தளவுக்கு உள்வாங்கக் கூடும்?

அதனாலேயே சாத்வீகமான மக்கள் எழுச்சிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பென்பது ஈபிஆர்எல்எப், புளொட், டெலோ, தமிழரசுக்கட்சி என்பனவற்றின் கூட்டமைப்பே. இதில் தமிழரசுக் கட்சியின் ஓரிருவர் தவிர ஏனையோர் வடக்கின் எழுக தமிழ் மக்கள் பேரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

கே: தமிழர்கள் தங்கள் அபிலாஷைகளை வென்றெடுக்க ஆயுதப் போராட்டங்கள் சாத்திமில்லை என்கிற நிலையில் ‘எழுக தமிழ்’ போன்ற சாத்வீகப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதா?

நிச்சயமாக. ஆளும் தரப்பிடம் தமிழர்கள் நம்பிக்கையிழப்பதென்பது இன்று நேற்று நடைபெற்றதொன்றல்ல. மாறாக கடந்த 60 வருடங்களாக தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றார்கள். பண்டா- -செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. டட்லி- - செல்வா ஒப்பந்தம், இந்திய- - இலங்கை ஒப்பந்தம் என எல்லாவற்றையுமே சொல்லும்படியற்ற தாக்கியவர்கள் யார்? யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழ் மக்களுக்கு உவப்பானது எதனையும் தர ஆளும் தரப்புகள் சம்மதித்ததில்லை. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை அவர்கள் தர இணங்கியதில்லை. தமிழர்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை விரும்புகின்றார்கள். எனவே, தமிழர்களின் நிறைவேறாத கோரிக்கைகளை முன்னிறுத்திய ஓர் ஆரம்ப கட்ட அகிம்சா வழியிலான போராட்டமே நேற்றைய எழுச்சி. கோரிக்கைகள் நிறைவேறும்வரை இவ்வாறான சாத்வீக எழுச்சிகள் தொடரும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]