மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
நம் நல்லூரான்

நம் நல்லூரான்

அன்பன் எனத்தொடர்ந்தால் அருளி, அணுக்கமான
தொண்டனாக்கி,
நெஞ்சால் நினைந்தணைக்கும் தோழனாக்கி,
என்றும் தனதுயிர் நிழலில்
களைப்பாறப்
பண்ணும் எழில்முருகன்;
பண்டைப் பெரும் நல்லை
மண்ணமர்ந்து உலகைக் காக்கும் கலி – வரதன்;
வந்த தடைவென்று'
நின்ற பகைதின்று'
ஞானசக்தி யாய்வாழும் பன்னிருகையன், வேலன்;
தேவர்கள் ஞானியரும்
தேறவொண்ணா விஸ்வரூபன்;
சித்தர்கள் தங்கள் சிந்தைக்குள்
அடைவைத்துப்
பித்து மொழியாலே பூசிக்க மகிழுபவன்;
நெஞ்சில் கலக்க எரிமலை குமுறுகையில்
கண்ணூடு கவலைக் காங்கை முளாசுகையில்
“அஞ்சற்க” என்று 'அபய
மழைபொழிந்து தேற்றுபவன்;
பேதங்கள் பாராப் பெரியோன்;
பணிந்து நம்பும் யாவரையும் காப்போன்;
நிம்மதி வரந்தருவோன்;
என்ன பெருஞ்செல்வம் ஈந்தாலும்'ஏற்காது
அன்பென்னுஞ் செல்லாக் காசுக்கும்
விலைபோவோன்'
ஆடம் பரமும் அழகும் செழித்திருந்தும்
தேடி எளிமைநெஞ்சைத் தேராக்கி ஊர்திரிவோன்;
மின்னும் நகைபுனைந்து
மன்னவனாய்ப் பவனிவந்தும்
துன்பச்சே றுழல்வோரைத் தூக்கி நிறுத்திடுவோன்;
என்னைக் கருவியாக்கித் தான் சுருதியாகி நிற்போன்;
என்கவிக்குள் நானழைத்தால் நர்த்திக்கும் முருகையன்;
இன்பமும் துன்பமும் வெற்றிகளும் தோல்விகளும்
நன்மையும் தீமையும் ஞானமும் பேதமையும்
தானாகி நிற்போன்;
சகலதற்கும் காரணன்; ‘நம்
நல்லூரான்’! எனக்கு எல்லாமும் ஆன அவன்
சொல்கின்றான் “பொல்லாப்பு இல்லையென”
நடந்திடுவோம்!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]