மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
கவிதை மஞ்சரி

நினைவுகளின் மோதல்!

ஆலங்கட்டி மழை
‘சோ’ வெனப் பெய்ய...
முற்றமே
தெப்பக் குளமாக...
அதில்,
நீயும்
நானும்
தோழர்களோடு
நனைந்தபடி,
குதித்து
கும்மாளமடித்து
பங்குனிப்பழம்
பொறுக்கிய நாட்கள்!
ஆகா....!
பங்குனிப் பழங்களை
கையில் எடுத்து
வாயில் போடுமுன்பே
அவை
மறைந்த மாயம்!
அது,
ஒரு வேடிக்கை
வினோதம்
வியப்பு!
குதுகலம்!
இன்றும் கூட
நீண்ட வறட்சிக்குப் பின்
பொழிகிறது
ஆலங்கட்டி மழை!
நான்
முற்றத்தை
நோக்குகிறேன்!
இங்கே
இப்போது
நீயில்​ைல
எம்
தோழர்களுமில்லை
நான்
மட்டும்
தன்னந் தனியனாய்
கோலை ஊன்றியபடி
தெப்பக் குளமான
கண்களோடு?
தூரத்து
நினைவுகளோடு
அதோ,
என் பேரப்பிள்ளைகள்
வருகிறார்கள்,
டியூசன் முடிந்து
குடையோடு
வெறிச்சோடிய
கண்களில்
களைப்போடு
பாவம்
அவர்களுக்கு
எங்கே தெரியப் போகிறது
ஆலங்கட்டி மழை?
பங்குனிப்பழம்!
முற்றத்து
தெப்பக்குளம்
அனுபவிக்க
கொடுத்து வைக்காத
சந்ததி?
அவர்களின்
குதுகலத்தை
தட்டிப் பறித்தது
யார்?

உண்ணஸ்கிரிய ஏ. கந்தையா


அறிவாயா மனிதா...!

மண்ணைத்தட்டி சட்டிசெய்யும் மனிதா – உன்
மனத்தைத் தட்டி புனிதம் செய்தல் எளிதா...?
விண்ணை முட்டி விளைநிலம் தேடும் மனிதா...
உன்னைத் திருத்தி இவ்வுலகை திருத்துதல் எளிதா...!
கயமை விதைத்துக் கள்ளம் வளர்த்து
களிகொண்டுலவும் மனிதா
இளமை மறையா, முதுமை நெருங்கா
இனியதோரு வாழ்வும் உளதா...?
ஆளும் ஆசையில் ‘அடிமை’யை வருத்தி
ஆணவம் கொண்டாடும் மனிதா
வீழும் நாளது விரைந்து வருவதை
விடுத்திட வழியும் உளதா...?
நாடும், வீடும், நவமணி அணியும்
நமதென மார்தட்டும் மனிதா
ஓடும் காலம் ஒருநாள் ஓய்ந்திட
காடுன்னை அழைத்திடும் அறிவாய்..!

கே. ராம் ஜீ உலகநாதன்


குறைந்து விடாதே!

-இராணி பௌசியா, கல்லளை

-கல்லில் கசிந்தாய்
மண்ணுள் அமர்ந்தாய்
விண்ணில் மிதந்தாய்
மழையாய் விழுந்தாய்
தாகம் தணித்தாய்
கோபம் குறைத்தாய்
பிணிக்கு மருந்தாய்
பிழைப்புக்கு உணவாய்
உண்ணீராய்
உறை நீராய்
செந்நீராய்
சிறுநீராய்
பன்னீராய்
பதநீராய்
கண்ணீராய்
குளிர் நீராய்
பல நாமம் கொண்டு
பெருகி ஓடும் நீரே!
குறை நீராகாதே! வற்றி
உன்னுள் குறைவந்தால்
எம்முள் உயிர்ச் சேதம்
எங்கள் நாடி ஓட்டம்
சீராக
நீரோட்டமாக
நடைபோடு


நிலை தடுமாறுதடி!

மாசிப் பனிக்குளிர் மூசியடிக்கையில்
மாற்றங்கள் தெரியவில்லை! – என்
பேசும் பைங்கிளி நீஅய லில்லையே,
வேதனை குறையவில்லை!
கன்னம் குழிவிழும் மின்னல் சிரிப்பது
கண்களில் தெரியுதடி!- உன்
பின்னழ கில்தினம் என்னை மறந்தது
சிந்தையில் விரியுதடி!
மொட்டென தாமரை ​மோகனக் குன்றுகள்
மிரண்டெனைக் குத்துமடி!- எழில்
பட்டுடல் நல்கிடும் சொர்க்கத்தைக் கண்டிட,
பேராசைகள் முந்துமடி!
காதல் தேவதை நினைவால் ஆண்மையும்
காவலை மீறுதடி!- மழைக்
கூதல் தணித்திடும் குலமகள், என்றனின்
‘நிலைதடு மாறுதடி!’

அ. கௌரிதாசன்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]