மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
ஆசிரிய உதவியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்

ஆசிரிய உதவியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்

ஆசிரிய உதவியாளர்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற போதும் தமது பிரச்சினைகளைத் தீர்க்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் அணிதிரள வேண்டும் என மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ். மோஹன் தெரிவித்தார்.

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்கவும் மாணவர்களின் கல்வி உரிமையையும் வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனினும் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் என்ற அந்தஸ்தை சட்டரீதியாக பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் நிலவும் குளறுபடிகள் தொடர்பில் மக்கள் ஆசிரியர் சங்கம் மலையகமெங்கும் நடாத்தி வரும் கூட்டத்தொடரில் மற்றுமொரு கூட்டமாக இது இடம்பெற்றது.

இதன்போது சங்கத்தின் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் உரையாற்றுகையில், மக்கள் ஆசிரியர் சங்கம் இதுவரை காலமும் ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளதை சுட்டிகாட்டினார். ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சங்கத்தினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது விசாரிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். ஊவா, சபரகமுவ, மத்திய மாகாணங்களில் ஆசிரிய உதவியாளர்களை அவர்களது ஆசிரிய பயிற்சிக்கு விடுவிக்காமை தொடர்பில் சங்கம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து பயிற்சிக்கு விடுவிக்க செய்தமை, ஆசிரிய உதவியாளர்களின் தொழில் உரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டங்கள் கஹவத்தை, பதுளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் நடாத்தியமை என்பவற்றை எடுத்துக்காட்டினார்.

இதன் போது ஆசிரிய உதவியாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் பலவற்றை எடுத்து கூறினர். இவற்றை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து பிர்ச்சினையை தீர்த்து வைப்பதாக செயலாளர் உறுதியளித்தார். மேலும் ஆசிரிய உதவியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு ஆசிரிய உதவியாளர்கள் முன்வர வேண்டும் எனவும் மக்கள் ஆசிரியர் சங்கம் முன்னின்று உழைக்கும் எனவும் மேலும் குறிப்பிட்டார். சுமார் 250இற்கும் அதிகமான ஆசிரிய உதவியாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]