மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
'எவனை கொலை செய்தாவது போரை முடியுங்கள்' என்பதே மஹிந்தவின் உத்தரவு

'எவனை கொலை செய்தாவது போரை முடியுங்கள்' என்பதே மஹிந்தவின் உத்தரவு

'பொதுமக்கள் உள்ளே இருக்கின்றனர் நிதானமாகதான் போரை முன்னெடுக்க வேண்டும்' என நான் கூறினேன்

* இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளது. இது குறித்து தங்களது நிலைப்பாடு என்ன?

இல்லை, உண்மையில் நாங்கள் எந்த விதமான இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள். சிறுரக மோட்டார் குண்டுகளை விடுதலைபுலிகள் பயன்படுத்தினார்கள். இராணுவத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டன. சிகிச்சைகள் அளித்தோம். எனது இராணுவம் அவ்வாறான ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. அவை பெற்றுக் கொள்வதும் எளிதான விடயமல்ல. எந்த நாடுகளும் அவ்வாறான ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை.

* இறுதிக் கட்டப்போர் தொடர்பில் இராணுவத்திற்கு எதிராக சர்வதேச குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

உண்மையில் விடுதலை புலிகளே மக்களை கவசமாக பயன்படுத்தினார்கள். அதனை புலிகள் பொறுப்பேற்க வேண்டும். எவ்வாறாயினும் புலிகளிடம் சிறைப்பட்டிருந்த 2 இலட்சம் மக்களை கடும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்டெடுத்தோம். இந்த கட்டத்தில் இராணுவ அதிகாரிகள், சாதாரண சிப்பாய்கள் கூடுதலாக உயிரிழந்தனர். ஆனால் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க முன்னுரிமை வழங்கி செயற்பட்டோம். எவ்வாறாயினும் யாராவது தவறு செய்திருந்தால் அதனை தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்க வேண்டும். மொத்த இராணுவத்தின் மீதும் குற்றம் சுமத்த முடியாது. ஆட்சியாளரும் அதனை சூழ இருந்தவர்களும் கொள்ளையடித்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் இராணுவத்திலும் ஓரிருவர் இருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. இராணுவம் சர்வதேச மற்றும் ஐ.நா. சாசனத்திற்கு மதிப்பளித்து போரை முன்னெடுத்தது. மனித உரிமைகளை மீறுவதற்கு நான் திட்டங்கள் அமைக்கவில்லை. இராணுவ நடவடிக்கைகளின் போது கண்காணிப்பு செய்தேன், வழிநடத்தினேன். போர் வியூகங்களை வகுத்தேன் இவை அனைத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியே முன்னெடுத்தேன்.

* இறுதி போரில் பொதுமக்கள் பாதிப்புகள் தொடர்பில் உங்களால் கூறமுடியுமா?

பொதுமக்கள் மீதான பாதிப்புகள் தொடர்பில் கூறப்படுவது போன்று பல்லாயிரம் பேர் உயிரிழக்கவில்லை. அவ்வாறு உயிரிழந்திருந்தால் அங்கு தோண்டும் போது எலும்புகள் கிடைத்திருக்கும். ஆனால் புதுமாத்தளன் பகுதியில் விடுதலை புலி உறுப்பினர்களை அவர்களது புலிகொடியுடன் வானத்திற்கு துப்பாக்கி பிரயோகம் செய்து புதைப்பதை கண்டோம். 900 பேர் வரைபுதைப்பதை மேலிருந்து யுவீவில் பார்த்துக் கொண்டிருந்தோம். இதனை தவிர வேறு உயிரிழந்தவர்களை புதைப்பதை நாங்கள் காணவில்லை. அதே போன்று போரின் இறுதி ஒன்றரை மாதத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியில் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காயமடைந்தவர்களை இவ்வாறு வெளியில் கொண்டு வந்து புல்மோட்டையில் வைத்து கடற்படையிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு 350 பேர் வரைதான் கொண்டு வந்தனர்

எனவே, பாரிய இழப்பு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல. ஆனால் போர் இடம்பெற்ற பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு சிறுகாயங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. மிகவும் கவனமாக போரை முன்னெடுத்தமையினால்தான் இறுதித் தருணத்தில் 2000 இராணுவம் உயிரிழந்தது. 2008 ஆம் ஆண்டில் முழு வருடத்திலும் 2000 இராணுவமே உயிரிழந்தது. 2009 ஆம் ஆண்டு 4 மாதங்களில் 2000 பேர் உயிரிழந்தனர். கனரக ஆயுதங்கள் இதன் போது பயன்படுத்தவில்லை. நீண்ட தூரம்தாக்கக் கூடிய தன்னியக்க துப்பாக்கிகள் பயன்படுத்தவில்லை. கவனமாக போரை முன்னெடுத்தமையினால் எமக்கு இழப்புகள் அதிகமானது.

* விடுதலை புலிகளிடமிருந்து பெருந்தொகை தங்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சொத்துக்களுக்கு என்ன நடந்தது?

அரசாங்கம் புலிகளின் சொத்துக்கள் மற்றும் தங்கம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என நான் நினைக்கின்றேன். பல சிங்கள ஊடகங்கள் புலிகளின் தங்கங்கள் தொடர்பில் வெளிப்படுத்தின. ஆனால் அவை குறித்து இன்றும் விசாரணைகள் ஏன் முன்னெடுக்கவில்லை என எனக்கு விளங்கவில்லை. நான் இராணுவ தளபதியாக இருந்த காலப்பகுதியில் 220 கிலோ தங்கம் கிடைத்தது. ஆனால் 110 கிலோ தங்கம்தான் கிடைத்ததாக நான் சிறையில் இருந்த போது பஷில்ராஜபக்ச தெரிவித்திருந்தார். சரியாக 50 வீதத்தை எடுத்து விட்டனர். அதன் பின்னரும் பல இடங்களில் தங்கம் கிடைத்தது. புலிகளின் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும். விசேடமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய இது பற்றி அறிந்திருக்க வேண்டும்.

* போரின் இறுதி தருணத்தில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் எதுவும் உங்களுக்கு காணப்பட்டதா?

போரின் கௌரவத்தை பெற்றுக் கொள்ளும் பேராசையில் என்னை ஓரங்கட்ட முற்பட்டனர். ஜகத் ஜயசூரிய வவுனியாவிற்கு பொறுப்பாக இருந்தார். இவருக்கு பொறுப்பளித்து விட்டு என்னை விலகியிருக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கூறினார். நல்லவேளை, நான் விலகவில்லை. ஏனென்றால் அந்த காலப்பகுதியில் புதுக்குடியிருப்பை அண்மித்த பகுதிகளில் பிரபாகரன் கடும் தொடர் தாக்குதல்களை இராணுவ நிலைகள் மீது தொடுத்தார். நான் இருந்திருக்காவிட்டால் போர் தலைகீழாகி விட்டிருக்கும். ஜகத் ஜயசூரியவிற்கு அவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ளவோ பதில் தாக்குதலுக்கு திட்டமிடவோ முடியாது. இதனைத் தவிர எனக்கு வேறு அழுத்தங்கள் கொடுக்க வரவில்லை. ஆனால் பாதுகாப்பு செயலாளர் என்னூடாக இல்லாமல் கனிஷ்ட நிலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். சவேந்திர சில்வா, கமல் குணரட்ன ஆகியோருடன் பாதுகாப்பு செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். இவ்வாறு உரையாடியமையினால்தான் வெள்ளைக்கொடி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன என நான் நினைக்கின்றேன். பாதுகாப்பு செயலாளர் என் ஊடாகதான் கனிஷ்ட அதிகாரிகளுடன் பேசியிருக்க வேண்டும். அவர் செய்தது தவறு .

ஆனால் மஹிந்த ராஜபக்ச 2008 ஆம் ஆண்டில் இருந்து போரை சீக்கிரம் முடித்து தருமாறு எனக்கு கூறிக் கொண்டிருந்தார். அவசரமாக போரை முடிவிற்கு கொண்டுவர முடியாது. பொதுமக்கள் உள்ளே இருக்கின்றனர். எனவே, நிதானமாகதான் போரை முன்னெடுக்க வேண்டும் என அப்போது நான் கூறினேன். யார் உயிரிழந்தாலும் பரவாயில்லை, எவனை கொலை செய்தாவது போரை முடியுங்கள் என மஹிந்த ராஜபக்ச கூறினார்.

* புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளீர்கள். இந்த பணம் எப்போது வழங்கப்பட்டது? எதற்காக வழங்கப்பட்டது?

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதே விடுதலை புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது பிரபாகரன் தடுத்தார். ஒருவர் மாத்திரமே வாக்களித்தார். அவரது கைகளும் வெட்டப்பட்டது. வாக்களிப்பதை தடுப்பதற்காக வே. பிரபாகரனுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது. இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. பஷில் ராஜபக்ச விடுதலை புலிகளுக்குபணம் வழங்கியமை தொடர்பில் எனக்கு கூறினார். 200 மில்லியன் ரூபா வழங்கியுள்ளனர்.

தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுப்பதற்கு கைமாறாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என பிரபாகரனிடம் இவர்கள் கேட்டுள்ளனர். கடற் புலிகளுக்கு தேவையான படகுகள் மலேசியாவில் உள்ளன. அதனை பெற்றுக்கொள்ள 2 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது. அதற்கு தேவையான பணத்தை தருமாறு பிரபாகரன் கேட்டுள்ளார். இதனடிப்படையிலேயே பணம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என கூறினாலும் அவற்றை நான் பதிவு செய்யவில்லை. ஆனால் அப்போதைய இராணுவ தளபதி என்ற வகையில் எனக்கு நினைவில் உள்ளது.

* புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழப்பு தொடர்பில் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரைப் படையினரே கொன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நீங்கள் கூறுவது என்ன?

பிரபாகரனின் மகன் தொடர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இரண்டு படங்களை நானும் பார்த்தேன். ஒரு படத்தில் சாரம் ஒன்றை போர்த்திக் கொண்டு பங்கரில் இருப்பது போன்று உள்ளது. அந்த பங்கரை இராணுவத்தினது என்று கூற முடியாது. ஏனென்றால் அந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகளும் பங்கரில்தான் இருந்தனர். பிரபாகரனின் மகன் கைது செய்யப்பட்டிருந்தால் அவ்வாறு பங்கரில் இருக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. குறைந்த பட்சம் வவுனியாவில் உள்ளமுகாம் ஒன்றிற்காவது கொண்டு வந்திருப்போம். இராணுவ நடவடிக்கைகளின் போது முன்னிலையில் இருந்து போரிடுபவர்கள்தான் இவ்வாறு பங்கர்களில் இருப்பார்கள். எனவே, நிலைப்பாடு யாதெனில் அது விடுதலைப் புலிகளின் பங்கர். அதில்தான் இளையமகன் இருந்துள்ளார். ஏனென்றால் விடுதலை புலிகளின் தலைவர்களும் பங்கர்களில்தான் இருந்தனர். அவர் போர்த்திக் கொண்டிருந்த சாரம் கூட அந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் ஒன்று. அவ்வாறான சாரங்கள் முகாம்களில் இல்லை. இராணுவத்திடமும் இல்லை. எனவே, பிஸ்கட் ஒன்றை சாப்பிட்டு கொண்டு அந்த பங்கரில் இருக்கின்றமை இதிலிருந்து வெளிப்படுகின்றது. அவர்கள் இறுதியில் பங்கர்களில்தான் இருந்தனர். அவரது குடும்பமும் கூட இருந்து இருக்கலாம். பிரபாகரனும் இருந்து இருக்கலாம்.

* மற்றப் படத்தில் துப்பாக்கி சூடுபட்டு கீழே கிடந்தார்.

எனவே, எப்படி சுடப்பட்டார்? எங்கு வைத்து சுடப்பட்டார்? என்பது தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது. உதாரணமாக 16 ஆம் திகதி இரவு நந்திக் கடல் களப்பை சுற்றி மூன்று பாதுகாப்பு வலயங்களை நான் போட்டிருந்தேன். விடுதலை புலிகள் இந்த பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு முலலைத்தீவு காட்டுக்குள் செல்வதற்கு முற்பட்டனர். முதலாவது பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது உயிரிழந்தவர்களின் சுமார் 75 சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதன் போது சில சடலங்களை எம்மால் எடுக்க முடியாமல் போயிருக்கலாம். களப்பில் விழுந்திருக்கலாம். சூட்டுக் காயங்களுடன் சிலரை தூக்கியும் சென்றிருக்கலாம்.

* அந்த இடத்தில் பிரபாகரனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இருந்தார்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது.

பாதுகாப்பு வலயங்களை உடைத்து கொண்டு பிரபாகரனின் குடும்பத்தினருடன் முல்லைத்தீவு காட்டிற்குள் செல்வதற்கே விடுதலை புலிகளின் போராளிகள் முற்பட்டனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இளைய மகன் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியும் இருக்கலாம். எனவே, அந்த புகைப்படங்கள் இராணுவமுகாம் ஒன்றில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூற இயலாது. உயிரிழந்திருக்கலாம். அவ்வாறான படங்களை எடுக்கவும் முடியும். ஆனால் அந்த படங்கள் உண்மை என்றால் பாதுகாப்பு வலயங்களை உடைக்க முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்திருக்கலாம். ஏனென்றால் பாதுகாப்பு வலயங்களை உடைத்துக் கொண்டு முன்னோக்கி நகர முற்படுகையில், அதாவது 17 ஆம் திகதி இரவு அவர்கள் களப்பு பகுதியில் வட திசைக்கு வந்து எமது பாதுகாப்பு வலயங்களை உடைத்து புதுமாத்தளன் பக்கம் செல்வதற்கு முற்பட்டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்டனி உட்பட 200 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதன் போது இடம்பெற்ற போர் 17 ஆம் திகதி இரவு 2.30 மணியிலிருந்து மறுநாள் அதாவது 18 ஆம் திகதி பகல் 1 மணி வரை நீடித்தது. இங்குதான் 200 பேர் வரை கொல்லப்பட்டனர். பிரபாகரனும் இந்த இடத்தில் இருந்துதான் போர் நீடித்ததன் காரணமாக அங்கிருந்து வடதிசையை நோக்கி செல்ல முற்பட்டிருப்பார். எனவே, அவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழந்திருக்கலாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]