மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
அரசியிலில் இருந்து கெளரவமாக ஓய்வுபெற இருந்தாராம் ஹசன் அலி

அரசியிலில் இருந்து கெளரவமாக ஓய்வுபெற இருந்தாராம் ஹசன் அலி

பலவந்தமாக போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை

கெளரவமான முறையில் அரசியிலில் இருந்து ஓய்வுபெறத் தயாராக இருந்தேன். ஆனால், பலவந்தமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல் கட்சித் தலைவர் விமர்சனக் கணைகளைத் தொடுத்துவிட்டார். உட்கட்சிப்பூசலை முச்சந்திக்குக் கொண்டு வந்துவிட்டார். கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் இது எனக்கு பெரும் வேதனையாக உள்ளது' இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமாகிய எம். ரி. ஹசனலி தெரிவித்தார்.

கட்சியின் தலைமைப் பீடத்துக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சதித்திட்டம் தீட்டவில்லை. ஆரம்பம் முதல் இன்றுவரை கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைத்த போராளி நான். நானாக தேசியப் பட்டியல் கேட்கவில்லை. இவர்கள்தான் எனது பெயரை பரிந்துரை செய்தனர். பெயர் பிரேரிக்கப்பட்டதால்தான் நான் அதைக் கேட்டேன். கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் அதை கேட்பதற்குரிய உரிமையும் எனக்கிருக்கின்றது. கட்சியில் இருப்பவர்கள் எதிரிகள் இல்லை. நாம் எல்லாம் ஒரு குடும்பம். அதற்குள் ஏற்பட்ட பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்திருக்கலாம். தலைவர்தான் இதை சந்திக்குக் கொண்டு வந்துவிட்டார்.

அதுவும் தேசிய மாநாட்டில் எல்லோருக்கும் மத்தியில் காரசாரமாக விமர்சித்து விட்டார். இதுதான் எனக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் இருந்து ஓய்வுபெறும் காலம் வந்துவிட்டதால், மிகவும் கெளரவமான முறையில் ஓய்வுபெற உத்தேசித்தேன். மூத்த உறுப்பினரை கெளரவமாக வழியனுப்ப வேண்டிய கடப்பாடு தலைவருக்கும் இருக்கின்றது. ஆனால் கழுத்தைப் பிடித்து இழுத்து வெளியே போடுவதுபோல் விமர்சித்து விட்டார் என்றார் ஹசனலி. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலியையும், தவிசாளார் பஷீர் சேகுதாவூத்தையும் கடுமையாக தாக்கிப்பேசியிருந்தார். கட்சியின் தலைமைப்பீடத்துக்கு எதிராக இவர்கள் இருவரும் திட்டம் வகுத்தனர் என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது பற்றி ஹசனலி மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]